2024 மார்ச் 28, வியாழக்கிழமை

’மகஜரை நான் நிராகரித்தேன்’

Gavitha   / 2020 ஒக்டோபர் 30 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பளிக்குமாறு வலியுறுத்தும் மகஜரில் கையொப்பமிட்ட விவகாரம், ஒரு வேண்டுகோளின் பேரில் வழங்கப்பட்ட ஆதர​வாகும் என்று தெரிவித்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார், தவிர அது, ஒரு சட்ட மாற்றத்துக்கு வழிவகுப்பதல்ல என்றும் கை​தியொருவருக்கு பொது மன்னிப்பு வழங்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எத்தனை பேர் கையொப்பமிட வேண்டும் என்ற வரையறை, எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றும், ஜனாதிபதி விரும்பினால் பொது மன்னிப்பு அளிக்கலாமென்றும் கூறினார்.

துமிந்த மீதான மகஜர், வெறும் வேண்டுகோள் பத்திரமென்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டதால், ஜனாதிபதிக்கு எவ்வித கட்டாயமோ சட்ட ஏற்பாடோ ஏற்படப்போவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் நேற்று (29) நடத்திய ஊடகச் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், இலங்கை அரசமைப்பின் 20ஆவது திருத்தம் என்பது, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டுப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டியதென்றும் அதிலே ஒரு வாக்கு குறையுமாக இருந்தாலும், யாராலும் அதனை நிறைவேற்ற முடியாது என்றும் தெரிவித்த அவர், 20ஆவது திருத்தம் என்பது, ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம், நாடாளுமன்றத்துக்குரிய அதிகாரம், நீதித் துறைக்கான அதிகாரம் என, நாட்டின் மொத்த அதிகாரத்தின் தலையெழுத்தைத் தீர்மானிப்பதென்றும் சுட்டிக்காட்டினார்.

“நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் இருபதையும் சட்ட ஏற்பாடே இல்லாத துமிந்தவின் மகஜரையும் சமப்படுத்தி, பிழையான அரசியல் கருத்தை மக்கள் மத்திக்குக் கொண்டுசெல்ல வேண்டாம். இரண்டையும் வேறு பிரித்து, அதன் தாக்கத்தை வெளிக்காட்டுவதே பொருத்தமானதாகும்.

“எவ்வாறாயினும் 20க்கு எதிராக நின்ற நான், துமிந்தவின் மகஜரையும் நிராகரித்தேன். ஆழமான எண்ணத்தோடு துமிந்தவின் மகஜருக்கு, தலைவர் மனோ கணேசன் கையொப்பமிட்டு இருந்தார். அதன் புரிதலுக்கு புரியாத நிலை ஏற்பட்டதால், தனது கையொப்பத்தை வாபஸ் வாங்கிக்கொண்டார். தலைவர் மனோ கணேசனின் நேர்மையான துணிச்சலான முன்னெடுப்பை வரவேற்று, எனது கௌரவத்தை முன்வைக்கின்றேன்” என்று, வேலு குமார் எம்.பி மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X