2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

யாழ். கோட்டையின் மறு சீரமைப்பு பணிகள் ஆரம்பம்-தேசிய புராதன விவகார அமைச்சு

Super User   / 2010 ஜூன் 16 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாண நகரில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க கோட்டையின் மறு சீரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்க தொல்பொருள் ஆய்வியல் துறை தீர்மானித்துள்ளதாக தேசிய கலாச்சார மற்றும் புராதன விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்தது.

இந்நிலையில் குறித்த பணிகள் இரு கட்டங்களாக மேற்கொள்ளப்படவுள்ளன என்று கூறிய மேற்படி அமைச்சு, இதன் முதற்கட்டமாக 104மில்லியன் ரூபா செலவில் தொல்பொருள் ஆய்வியல் துறை அலுவலகமொன்று யாழ்ப்பாண நகரில் அமைக்கப்படவுள்ளதாகவும் இதற்கான பணியாளர் ஒருவரையும் இத்துறை நியமித்துள்ளது என்றும் குறிப்பிட்டது.

இந்த யாழ். கோட்டையின் மறுசீரமைப்புப் பணிகள் 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்ப்பதாகவும் தேசிய கலாச்சார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாண கோட்டையானது 1618ஆம் ஆண்டு போர்த்துக்கேயர்கள் இலங்கை மீது படையெடுத்து யாழ்பாணத்தை கைப்பற்றிய போது சிறியதாக கட்டப்பட்டதாகும். பின்னர் அது 1658ஆம் ஆண்டு டச்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் விரிவுபடுத்தப்பட்டது. அதன் பின்னர் 1795ஆம் ஆண்டு பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் வந்தது.

இந்நிலையில் 1986இல் அங்கிருந்த இராணுவத்தினரை விரட்டியடித்த தமிழீழ விடுதலைப்புலிகள் அதனைக் கைப்பற்றினர். இருப்பினும் 1996ஆம் ஆண்டு மீண்டும் அப்பிரதேசத்தைக் கைப்பற்றிய இராணுவத்தினர் மேற்படி கோட்டையையும் தம்வசமாக்கிக்கொண்டனர்.

இந்த கோட்டையின் சுவர்கள் பழுதுபார்க்கும் நிலையில் இருந்த போதிலும் கோட்டையினுள் உள்ள மிக பழமை வாய்ந்த டச்சு தேவாலயம் பழுது நீக்க முடியாத நிலையில் காணப்படுவதாக தொல்பொருள் துறை இயக்குனர் செனரத் திஸாநாயக்கா தெரிவித்தார்.

இந்த பணிகளுக்காக 400 மில்லியன் ரூபா செலவாகும் எனவும் நெதர்லாந்து அரசு இதற்கான உதவிகளை வழங்க இருப்பதாகவும் தெரியவருகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--