2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

சிறுபான்மையினருக்கு பாதிப்பு என்பதால் உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களித

Super User   / 2010 ஒக்டோபர் 20 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(றிப்தி அலி, கே.எஸ்.வதனகுமார்)

உத்தேச உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்ட மூலத்தினால்  சிறுபான்மையினருக்கு பாதிப்பு என்ற அடிப்படையிலேயே எதிராக  வாக்களித்ததாக கிழக்கு மாகாண சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம்  காங்கிரஸ் உறுப்பினர்  கே.எம்.ஜவாத், தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

இச்சட்ட மூலத்தின் மூலம் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி  மன்றங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரம் பறிக்கப்பட்டு,  நாடாளுமன்றத்திற்கு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இச்சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த மற்றும் வாக்கெடுப்பில் கலந்து  கொள்ளாத சிறுபான்மையின கட்சிகளின் மாகாண சபை  உறுப்பினர்கள் சமூகத்தை காட்டி கொடுத்துள்ளதாகவும் ஜவாத்  குறிப்பிட்டார்.

இச்சட்ட மூலத்தின் ஊடாக உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் பதிவு செய்யப்பட்ட கட்சியின் ஒரு வேட்பாளர் கட்டுப் பணமாக 5,000 ரூபாவும் சுயேட்சைக் குழுவின் ஒரு வேட்பாளர் கட்டுப் பணமாக 20,000 ரூபாவும் செலுத்த வேண்டும். இதனால் எல்லோரும் போட்டியிடும் சந்தர்ப்பம் இல்லாமல் செய்யப்படுகின்றது என கே.எம்.ஜவாத், தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு குறிப்பிட்டார்.

இதேவேளை, உத்தேச உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்ட மூலத்திற்கு கிழக்கு  மாகாண சபையில் ஆதரவாக வாக்களித்த முதலமைச்சர்  சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட ஆளும் தரப்பு உறுப்பினர்கள்  அனைவரும் சிறுபான்மை மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளனர் என  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரட்ணம், தமிழ்மிரர்  இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

"சட்ட மூலம் சபையில் விவாதத்திற்கு எடுக்கப்பட்ட போது  முதலமைச்சர் உட்பட ஆளும் தரப்பினர் இது சிறுபான்மை  சமூகத்திற்கு செய்யும் துரோகம் என தெரிவித்த போதும், எதுவும்  செய்யமுடியாது ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்  என்றார்கள்.

ஆளும் தரப்பினர் மக்களிடம் வாக்கு கேட்ட போது திருத்தச்  சட்டத்திற்கு எதிர்த்து வாக்களிப்போம் என்று கூறிவிட்டு, தற்போது  ஆதரவாக வாக்களித்தமை சிறுபான்மை மக்களுக்கு செய்யும் துரோகம்" என்றார் இரா.துரைரட்ணம்.

"உத்தேச உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்ட மூலத்தை 10  நாட்களுக்குள் நிறைவேற்றித் தருமாறு ஜனாதிபதி பணித்தார்  என்பதற்காக ஆதரவளிக்கும் ஆளும் தரப்பினர் ஏன் ஜனாதிபதியின் அங்கீகாரத்திற்காக வேண்டி இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆளுநரிடம்  சமர்ப்பிக்கப்பட்டுள்ள, திருத்தப்பட்ட கிழக்கு மாகாண சபைக்  கொடியை பெறமுடியாமல் உள்ளார்கள் என அவர் கேள்வி எழுப்பினர்.

முடியுமானால் ஆதரவளிக்கும் தரப்பினர்  10 நாட்களுக்குள்  கொடிக்குரிய அங்கீகாரத்தை ஜனாதிபதியிடமிருந்து பெற்றுத்தருமாறு  சவால் விடுகின்றேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  இரா.துரைரட்ணம் கூறினார்.

இச்சட்ட மூலத்தில் பின்வரும் விடயங்களில்  திருத்தங்கள் மேற்கொள்ளப்பட  வேண்டும் என மாகாண சபை உறுப்பினர்களான கே.எம்.ஜவாத் மற்றும் இரா.துரைரட்ணம் ஆகியோர் தெரிவித்தனர்.


• தேசிய ரீதியான நிர்ணய ஆணைக்குழுவில் சிறுபான்மையினரான  தமிழ், முஸ்லிம், மலையகத்தினர் உள்ளடக்கப்பட வேண்டும்.

• 5% வெட்டுப்புள்ளி நீக்கப்பட வேண்டும்.

• உள்ளூராட்சி மன்றங்களின் வரவுசெலவுத் திட்டம் தொடர்ந்து இரண்டு தடவைகள்  தோல்வியடையும் பட்சத்தில் உள்ளூராட்சி    சபைகள் கலைக்கப்பட்டு  ஆணையாளரின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்பதற்குப்  பதிலாக மாகாணசபையின் கீழ் கொண்டுவரப்பட்டு 06  மாதங்களுக்குள் மீள்தேர்தல் நடாத்தப்பட வேண்டும்.

• 70 : 30 விகிதாசாரம் தொடர்பாக தெளிவின்மை காணப்படுகின்றது. இது  திருத்தியமைக்கப்பட வேண்டும்.

• வட்டார எல்லைகள் பிரிக்கும் போது அங்குள்ள சிறுபான்மையினரின்  நலன் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--