2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

மாவை எம்.பி.யின் அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு ஏற்பு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 12 , பி.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.செல்வநாயகம்)

1992ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கை காரணமாக தான் விட்டுச் சென்ற சொத்துக்களை மீளப்பெற்று அதில் வாழ்வதைத் தடுத்ததனால் தனதும் வேறு பலரினமும் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தாக்கல் செய்த மனு, விசாரணைக்கு ஏற்கத்தக்கது என உயர்நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை அறிவித்தது.

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா, கே.ஸ்ரீபவன் மற்றும் பிரியசத் டெப் ஆகிய நீதிபதிகள் குழுமத்தின் முன் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இலங்கையினும் நடமாடும் சுதந்திரம், வாழ்விடத்தை தீர்மானிக்கும் சுதந்திரம் என்பவற்றுக்கான அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டதாக மனுதாரர் கூறியது விசாரிக்கத்தக்கதென நீதிபதிகள் குழுமம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த மனுவானது, கடந்த 2003ஆத் ஆண்டு டிசம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. அப்போதைய பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தலைமையிலான நீதிபதிகள் குழுமம், கடந்த 2006ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்த அடிப்படை உரிமை மீறல் பிரச்சினையை கருத்தில் எடுத்துக்கொண்டது.

'அரசாங்கத்துக்கு பெரும் பொருளாதார நட்டம் உண்டாக்குவதாக இந்த மனு அமைந்துள்ளதாக கருத்திற்கொண்டு நீதிமன்றின் அறிவுறுத்தலுக்கேற்ப மீள்குடியேற்றம் செய்யும்வரையில் இணக்கம் காணப்பட வேண்டும்' என கட்டளை பிறப்பித்தது.

இந்த கட்டளையையும் நீதிபதிகள் குழுமம் நேற்று கருத்திற்கொண்டது. இந்நிலையில், இந்த மனு தொடர்பில் பிரதிவாதிகள் எதிர்வரும் ஆறு வாரங்களுக்குள் தமது ஆட்சேபனையை தாக்கல் செய்ய வேண்டும்.

மனுதாரர்கள் இதற்கு எதிரான சத்தியக் கடதாசியை ஒரு மாதத்தினுள் தாக்கல் செய்ய வேண்டும். இந்நிலையில், 2013 மார்ச் 11ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் குழுமம் அறிவித்தது.

இந்த மனுவில், முன்னாள் ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் இராணுவ தளபதி லயனல் பலகல்ல, மேஜர் ஜெனரல் பாரமி குலதுங்க மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .