2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

தினமும் 400 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள்

Super User   / 2010 ஒக்டோபர் 01 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt

  (றிபாயா நூர்)

நாளொன்றுக்கு 400 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் தேசிய சிறுவர் அதிகார சபைக்கு கிடைப்பதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு தமிழ் மிரருக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் கருத்துத் தெரிவித்த பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா,
 
"தாய்மார்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக பிள்ளைகளை விட்டுச் செல்கின்ற போது பிள்ளைகள் மீது துஷ்பிரயோகங்கள் இடம்பெறுகின்றன. ஒரு மாத, இரண்டு மாத குழந்தைகளையும் விட்டு விட்டு தாய் வெளிநாட்டு வேலைவயாப்புப் பெற்று செல்லும் போது அக்குழந்தை மிகவும் கூடுதலான துன்பத்துக்கு ஆளாகின்றது.

இந்நிலை மாற வேண்டும். தமது பிள்ளைகளை முறையாக பராமரிக்க ஆளில்லாத சந்தர்ப்பத்தில் தாய் வெளிநாடு செல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு மாத, இரண்டு மாத குழந்தைகளை விட்டு விட்டு வெளிநாடு செல்ல முற்படும் தாய்மார் தொடர்பில் சிறுவர் அதிகார சபைக்கு அறிவித்தால் குறித்த தாய் மீது அதிகார சபை நடவடிக்கை எடுப்பதுடன் விமான நிலையத்தில் வைத்து வீட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்.

சிறுவர்கள் தாய் தந்தை அரவணைப்பில் வாழ்பவர்கள். அவர்களுக்கு சரியாக வழிகாட்ட வேண்டிய பொறுப்புள்ளது என்பதை பெற்றோர் மறந்து விடக்கூடாது. இன்று சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக சிறுவர் அதிகார சபைக்கு வரும் முறைப்பாடுகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

சிறவர்கள் மீதான வண்முறை, சிறுவர் துஷ்பிரயோகம் என்பவற்றில் ஈடுபடுபவர்களுக்கு கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

சிறுவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக சிறுவர் அதிகார சபைக்கு அறிவித்தால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.இதற்காக வேண்டி தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

யுத்தத்தினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் மிகக்கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள சிறுவர்களின் கல்வி, கலை, கலாசாரம் என்பவற்றை விருத்தி செய்வதற்காக எமது அமைச்சு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி அநுராதபுரத்தில் 500இற் மேற்பட்ட சிறுவர்களை ஒன்று கூடியுள்ளனர். நாட்டின் நாலாபுறத்திலிருந்து ஒன்று கூடியுள்ள சிறுவர்கள் மூன்று நாட்களுக்கு அங்கு நின்று பல் வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.

இதேபோன்று இம்மாதம் இறுதிப் பகுதியில் கிழக்கு மாகாணத்தை மைய்யப்படுத்தி மட்டக்களப்பிலும் சிறுவர் தின நிகழ்வினை நடத்த எமது அமைச்சு திட்டமிட்டுள்ளது" எனக் கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--