2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இந்தியாவின் மத்தியஸ்த முயற்சி

என்.கே. அஷோக்பரன்   / 2017 ஒக்டோபர் 23 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 115)

தொண்டமானின் இந்திய விஜயம் 

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசமைப்புக்கான ஆறாம் திருத்தத்தைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தைப் புறக்கணித்த வேளையில், நாடாளுமன்றத்திலிருந்த தமிழ்க்குரல் சௌமியமூர்த்தி தொண்டமானுடையதாக இருந்தது.   

இதற்கு அர்த்தம், வேறு தமிழர்கள் இருக்கவில்லை என்பதல்ல. ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியில் பலம் வாய்ந்ததொரு அமைச்சராக, கிழக்கு மாகாணத்தின் கல்குடா தொகுதியில், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கே. டபிள்யூ.தேவநாயகம் இருந்தார்.   

இவரைவிடவும், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு, வெற்றியீட்டி, பின்னர் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட சீ. இராஜதுரையும் ஜே.ஆரின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். ஆயினும், இவர்களிடமிருந்து தொண்டமான் அளவுக்குக்கூட, தமிழ் மக்கள் சார்பான கருத்துகள் வந்திருக்கவில்லை.   

கோபால்சாமி பார்த்தசாரதியின் அழைப்பின் பேரில், இந்தியா சென்றிருந்த தொண்டமான், டெல்லியில் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் வெளிவிவகார அமைச்சர் நரசிம்ம ராவ் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.   

அதன் பின்னர் தமிழ் நாட்டுக்கு வந்த அவர், முதலமைச்சர் எம்.ஜி. இராமசந்திரனைச் சந்தித்துப் பேசியதுடன், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதியையும் சந்தித்திருந்தார்.   

முக்கியமாக, தமிழ்நாட்டில் தங்கியிருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், எம். சிவசிதம்பரம் மற்றும் இரா. சம்பந்தன் ஆகியோரைச் சிலமுறை சந்தித்துப் பேசினார். தொண்டமான், நாடு திரும்புவதற்கு முன்னதான சந்திப்பின் போது, நாடாளுமன்றத்தில் தமிழர்களின் நலனைக் கவனித்துக் கொள்ளுமாறு, தொண்டமானிடம் அமிர்தலிங்கம் கேட்டுக் கொண்டிருந்தார்.   

இது, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிச்சயமாக ஆறாம் திருத்தத்தின் கீழான சத்தியப்பிரமாணத்தை எடுத்துக் கொண்டு, மீண்டும் நாடாளுமன்றம் வரப்போவதில்லை என்பதை உணர்த்துவதாக இருந்தது.   

இதைவிடவும், தொண்டமான் நடத்திய இன்னொரு சந்திப்பு, இலங்கை திரும்பியவுடன் அவருக்கு பெரும் சிக்கலைத் தோற்றுவிப்பதாக அமைந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தை (PLOTE) ஸ்தாபித்திருந்த உமா மகேஸ்வரனையும் தமிழ்நாட்டில் சந்தித்துப் பேசியிருந்தார்.   

இந்த இடத்தில், தொண்டமான் என்ற தமிழ்த் தலைவரோ அல்லது தொண்டமான் என்கிற தொழிற்சங்கத் தலைவரோ ஒரு தமிழ் இளைஞர் ஆயுதக் குழுவின் தலைவரோடு சந்தித்துப் பேசினார் என்பதைவிட, இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் வகித்த அமைச்சரொருவர், பிரிவினை கோரி ஆயுதம் ஏந்திய, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுவொன்றின் தலைவர் ஒருவரைச் சந்தித்தப் பேசியிருந்தார் என்ற பார்வையே, இலங்கையில் தொண்டமானுக்கு சிக்கலை ஏற்படுத்தியது.   

ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை உண்மையில் இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில், சாதகமானதொன்றாக இருந்ததாகவே தொண்டமானின் கருத்துகளிலிருந்து தெரிகிறது.   

இலங்கை திரும்பிய தொண்டமான்   

தனது, பத்து நாள் இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்ட தொண்டமான், 22 ஆம் திகதி இலங்கை திரும்பியிருந்தார். மறுநாள், ஜனாதிபதி ஜே.ஆரைச் சந்தித்த தொண்டமான், அன்று மாலை ஊடகங்களைச் சந்தித்து, தனது இந்தியப் பயணத்தைப் பற்றி விவரித்தார்.   

அதன்போது, இலங்கையின் தமிழர் பிரச்சினை தொடர்பில், தமிழ் நாட்டு மக்கள் கடும் கரிசனையைக் கொண்டுள்ளதாகவும் இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள், தமிழர்களை அடக்குமுறைக்குள்ளாக்குவதிலும், அவர்களை அழிப்பதிலுமே எண்ணம்கொண்டிருப்பதாகவே இந்திய மக்களின் உணர்வுகள் இருப்பதாகவும், தற்போது இது வெறுமனே தமிழர்கள் மற்றும் இந்தியா மட்டும் கரிசனை கொண்டுள்ள விடயமாக அல்லாது, சர்வதேச சமூகமே கரிசனை கொள்ளும் விடயமாக மாறியிருப்பதாகத் தெரிவித்தார்.   

தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தவர், இலங்கை அரசாங்கமானது, சிங்கள இனவாத சக்திகளால், தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளைக் கண்டும் காணாதிருந்ததாகவே தமிழ் நாட்டு மக்கள் கருதுகின்றனர்.

சிங்களவர்கள் இரவிலே “சில்” (பௌத்த வழிபாடு) எடுத்துவிட்டுக் காலையிலே “கில்” (கொலை) பண்ணுகிறார்கள் என்பதே அங்குள்ளவர்கள் எனக்குச் சொன்னது. நடந்துமுடிந்த கலவரங்கள் கூட, “போயா” (பூரணை) தினத்துக்கு மறுநாள் ஆரம்பித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது என்றார்.   

அரசாங்கத்தின் அமைச்சர் என்பதைத் தாண்டி சௌமியமூர்த்தி தொண்டமான், தமிழர் தரப்பின் கருத்துகளை, தனது பாணியில் எடுத்துரைக்கும் பேச்சாளராகவே மாறியிருந்தார் எனலாம். அதை, அவரே ஊடகங்களிடம் ஒத்துக் கொண்டிருந்தார். தற்போதுள்ள சூழலில், தமிழர்களின் ஒரே பிரதிநிதி தான்தான் என்று அவர் ஊடகங்களிடம் சொல்லியிருந்தார்.   
இதன்போது ஊடகங்களிடம், தான், புளொட் இயக்கத்தின் தலைவர் உமா மகேஸ்வரனைச் சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தியதைக் குறிப்பிட்டவர், தனி நாட்டுக்கு மாற்றான தீர்வொன்றை ஏற்றுக் கொள்ள, உமா மகேஸ்வரன் தயாராக இருப்பதாகத் தன்னிடம் தெரிவித்திருந்ததாக தொண்டமான் கூறினார்.   

இதில் பேசப்பட்டிருக்க வேண்டியது, பிரிவினை வேண்டிய முக்கியமான தமிழ் இளைஞர் ஆயுதக் குழுவொன்றின் தலைவர், பிரிவினைக்கு மாற்றான தீர்வொன்றுக்குத் தயாராக இருக்கிறார் என்பதாகும். ஆனால், பலரிடையே தொண்டமான், ஓர் அமைச்சர், ஒரு தமிழ் இளைஞர் ஆயுதக் குழுவின் தலைவரைச் சந்தித்துப் பேசியது, அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.   

சிலருக்கு, தொண்டமான், இந்தியாவுக்குச் சென்று இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி மிகக்குறைந்தளவு பேசியிருந்ததே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.   

இந்தியத் தலையீட்டை எதிர்த்த அமைச்சர்கள்   

இந்த நிலையில், 1983 ஒக்டோபர் 24 ஆம் திகதி, ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தின் போது, ஜே.ஆரின், இந்திரா காந்தியுடனான தொலைபேசி உரையாடல் பற்றியும், இந்தியாவின் செல்வாக்குடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவது பற்றியும் குறித்த அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்பட்டது.   

இலங்கையிலுள்ள பிரச்சினையில் இந்தியா தலையிடுவதை அமைச்சரவையின் முக்கிய அமைச்சர்கள் விரும்பவில்லை. குறிப்பாக, பிரதமர் ரணசிங்ஹ பிரேமதாஸ, அமைச்சர்களான காமினி ஜயசூர்ய, காமினி திசாநாயக்க, ரஞ்சித் அத்தபத்து ஆகியோரும் இதற்குத் தமது கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். உணர்ச்சி மிகுந்தெழுந்த அமைச்சர் காமினி ஜயசூர்ய, “இந்தியாவின் தலையீட்டை நாம் ஏற்றுக் கொண்டால், நாம் வீதியில் நடக்க முடியாது போய்விடும்” என்று கூறினார். இது ஜே.ஆரை எரிச்சலூட்டியது.   

இந்தியா மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என்று சிறிமாவோ பண்டாரநாயக்க சொல்கிறார். இலங்கை அரசாங்கம் பயங்கரவாதிகளோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், இந்திரா காந்தியின் விசேட ஆலோசகர் பார்த்தசாரதியை நாம் அழைக்க வேண்டும் என்றும் திருமதி பண்டாரநாயக்க சொல்கிறார். அவர் வீதியில் சுதந்திரமாகத்தானே நடமாடுகிறார்? என்று ஜே.ஆர் கோபத்துடன் பதிலுரைத்திருந்தார்.   

 உண்மையில், ஜே.ஆருக்கு இந்தியா இந்த விடயத்தில் தலையிடுவதில் துளிகூட விருப்பமில்லை. ஆனால், வேறு வழி இல்லை என்பதை ஜே.ஆர் அறிந்திருந்தார். பெரும் நாடுகளின் தலையீடுகள், பெரியண்ணன் தன்மைகள், சிறிய நாடுகளின் கையறு நிலை என கொஞ்சக் காலமாகவே ஜே.ஆர் ‘புலம்பிக் கொண்டுதான்’ இருந்தார்.   

சில நாட்கள் முன்பு நடந்த ஊடகச் சந்திப்பின் போது கூட, “நாம் ஒரு சிறிய தேசம்; ஆகவே இவற்றைச் சகித்துதான் ஆக வேண்டும். ஒருவேளை சிறிய தேசங்களின் தலைவிதி இதுதானோ என்று இந்திய தலையீட்டைச் சுட்டி, ஜே.ஆர் புலம்பியிருந்தமையும்” இங்கு குறிப்பிடத்தக்கது.   

அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் பிரமேதாஸவின் நிலைப்பாடு கொஞ்சம் வேறுபட்டதாக இருந்தது. இந்திய தலையீட்டை பிரேமதாஸ எதிர்த்தார். பிரேமதாஸவின் இந்திய எதிர்ப்பு மனநிலை யாரும் அறியாததல்ல. பிரேமதாஸவின் நிலைப்பாடானது, தமிழர் பிரச்சினை என்பது இலங்கையின் உள்நாட்டு விவகாரம்; அதில் இந்தியா தலையிடுவதானது இலங்கையின் இறைமையை மீறும் செயலாகும்; நாங்கள் தமிழர்களோடு பேசித் தீர்வைக் காண்போம்; இந்தியாவை இந்த விடயத்தில் தலையிட அனுமதிக்கக் கூடாது என்றார்.   

 அமைச்சரவையில் இருந்த தமிழ் அமைச்சர்களான கே.டபிள்யூ. தேவநாயகத்தையும், சீ. இராஜதுரையையும் சுட்டிய பிரதமர் பிரேமதாஸ, இவர்களுடன் பேசிப் பிரச்சினைக்கு ஒரு முடிவைக் காண்போம் என்றார். இதைக் கேட்ட அமைச்சர் தேவநாயகம், அப்படியானால் நீங்கள் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு தரத் தயாராக இருந்த தீர்வை விடக் கூடுதலான தீர்வொன்றை தரத் தயாராக இருக்க வேண்டும் என்று பதிலுரைத்தார்.   

 ஜே.ஆர் எல்லாத் தரப்பினதும் கருத்துகளையும் செவிமடுத்திருந்தாலும், அவர் ஏற்கெனவே இந்த விடயத்தில் முடிவெடுத்து விட்டிருந்தார்.   

இந்திரா காந்தியின் கோரிக்கையை ஏற்று, கோபால்சாமி பார்த்தசாரதியின் மத்தியஸ்தத்தை முதலில் வரவேற்பதைத் தவிர அவருக்கு வேறு உடனடி மார்க்கமேதுமிருக்கவில்லை. இறுதியில் ஜே.ஆர் தனது முடிவை அமைச்சரவைக்குத் தெரிவித்தார்.   

கடமைகளைத் தொடங்கிய பார்த்தசாரதி   

மறுபுறத்தில், இந்தியாவில் கோபால்சாமி பார்த்தசாரதி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர்களோடு பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கியிருந்தார். அவரது பணி, ஜே.ஆர் அரசாங்கம் மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியிடையே பேச்சுவார்த்தைகள் மூலம், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு இருதரப்பும் ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வொன்றை எட்டச் செய்தல் ஆகும். தன்னுடைய அமைச்சர்கள் மற்றும் ஏனைய அரசியல் தலைவர்களைத் தாண்டி இந்திரா காந்தி, கோபால்சாமியைத் தெரிவு செய்தமைக்குக் காரணம், அவரது பேச்சுவார்த்தைக் கலைத் திறன் என்று சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள்.   

ஆனால், இந்தத் தெரிவில் ஒரு சிக்கல் இருந்ததை, இந்திரா அன்று உணர்ந்திருப்பாரோ தெரியாது, ஆனால், அந்த ஆயுதத்தை ஜே.ஆர் கையிலெடுக்க நீண்ட காலமாகவில்லை.   

தமிழ் நாட்டிலிருந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் டெல்லிக்கு அழைக்கப்பட்டனர். டெல்லி புறப்பட முன்பு, சென்னை விமான நிலையத்தில் ஊடகங்களிடம் பேசிய அமிர்தலிங்கம், இந்திரா காந்தி “ஒன்றுபட்ட” நாட்டுக்குள் தீர்வு என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டார். 

இந்தியாவுக்கு மதிப்பளித்து, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும், தனிநாடு என்பதற்கு மாற்றானதொரு தீர்வு பற்றிப் பரிசீலிக்கத் தயாராக இருக்கிறது. ஆனால், மாற்றுத் தீர்வு ஏற்றுக்கொள்ளப்படும் வரை நாம் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிடப் போவதில்லை என்றார்.   

மேலும், “இலங்கையைத் தமிழர்கள் பிரிக்கவில்லை; மாறாகச் சிங்களக் காடையர்களின் நடவடிக்கைகளும், இலங்கை அரசாங்கத்தின் கொள்கைகளும் தான் நாட்டை பிளவடையச் செய்கின்றன. நடைமுறை யதார்த்தத்தை சட்ட ரீதியில் ஏற்றுக்கொள்ளுமாறு தான் நாங்கள் கேட்கிறோம்” என்று சொன்னவர், இனியும் கலவரங்கள் தொடருமானால், இந்தியா தனது படைகளை அனுப்பிப் பாதுகாக்க வேண்டும் என்றார்.   

அமிர்தலிங்கத்தின் நிலைமையும் மிகவும் தர்மசங்கடம் நிறைந்ததாக இருந்தது. இந்திரா காந்தியுடனான சந்திப்பின் போது, இந்தியாவின் நிலைப்பாட்டைத் தெட்டத் தெளிவாக இந்திரா காந்தி எடுத்துரைத்துவிட்டார்.   

 இந்தியா படைகளை அனுப்பப் போவதுமில்லை; தனிநாடு பெற்றுத்தரப் போவதுமில்லை. மாறாக இந்தியா பேச்சுவார்த்தை மூலம் தனிநாட்டுக்கு மாற்றான தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள வலியுறுத்துகிறது; இதை மறுக்கவும் முடியாது. ஆனால், இதனை முற்றுமுழுதாக உடனடியாக ஏற்றுக் கொள்ளவும் முடியாது.   

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைத் தொடர்ந்து, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி தனிநாட்டுக் கோரிக்கையை தனது கொள்கையாக முன்னிறுத்தியது. 1977 பொதுத் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அதனை முன்னிறுத்தியே தமிழ் மக்களிடம் மக்களாணையைப் பெற்றுக் கொண்டது.

இந்தச் சூழலில் கட்சி மாநாடு கூட நடத்தாது அமிர்தலிங்கம், தனித்துக் கொள்கை நிலைப்பாடொன்றை, அதுவும் அவர்களது அடிப்படைக் கொள்கையை இல்லாது செய்து விடக்கூடிய புதிய கொள்ளை நிலைப்பாட்டை எடுப்பது சாத்தியமல்ல என்பதை விட, அது மக்களால், குறைந்தபட்சம் அவரது கட்சியினரில் பெரும்பகுதியினரால் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது சந்தேகம்தான்.  

இதனால்தான், அமிர்தலிங்கம் மிகக் கவனமாக “மாற்றுத்தீர்வு ஏற்றுக்கொள்ளப்படும் வரை நாம் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிட மாட்டோம்” என்று ஊடங்களிடம் பதிவு செய்தார். கோபால்சாமி பார்த்தசாரதியைச் சந்தித்த போது, அவர் நீங்கள் மாற்றுத் தீர்வொன்றை ஏற்றுக்கொள்ள தயாராகிவிட்டீர்கள், இப்பொழுது நீங்கள் எந்த அடிப்படையிலான தீர்வை எதிர்பார்க்கிறீர்கள் என்று வினவினார்.

அதனை அடிப்படையாகக் கொண்டு இலங்கை அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்துவதுதான் பார்த்தசாரதியின் எண்ணம்.   

 (அடுத்த திங்கட்கிழமை தொடரும்)   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X