இந்திய நிறுவனத்துக்கு அனுமதி: சிக்கலில் காலணித் தொழிற்றுறை

புலனாய்வு

- நிர்மலா கன்னங்கர

இலங்கைச் சந்தையில் காலணிகளை உற்பத்தி செய்யும் திட்டமொன்றுக்கு, வீகேஸி ஸ்லிப்பர்ஸ் லங்கா (தனியார்) நிறுவனத்துக்கு, இவ்வாண்டு செப்டெம்பர் 25ஆம் திகதி, முதலீட்டுச் சபை அனுமதி வழங்கியது. இந்தத் தொழிற்றிட்டம், நாட்டின் வழக்கமான சட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் ஆண்டுதோறும் 2.145 மில்லியன் சோடி காலணிகளை, உள்ளூர்ச் சந்தைக்கு வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதிலுமுள்ள பல காலணி உற்பத்தி நிறுவனங்கள், மூடப்படும் நிலை உருவாகலாம்.

இலங்கையின் காலணி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் தர்மச்சந்திர நிமலசிறி கருத்துத் தெரிவிக்கும் போது, இலங்கையில் காலணி உற்பத்தி வணிகத்தில், நேரடியாகவும் மறைமுகமாகவும், 300,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்திய முதலீட்டாளர், தனது நடவடிக்கைகளை ஆரம்பித்ததும், நாட்டிலுள்ள காலணி உற்பத்தியாளர்களில் கணிசமான சதவீதத்தினர், தங்களுடைய வணிகங்களைக் கைவிட வேண்டி வருமென, நிமலசிறி தெரிவிக்கிறார். இது, நாட்டில் வேலையின்மை அளவை அதிகரிக்கும். அரசாங்கத்தின் முடிவை விமர்சித்த நிமலசிறி, உள்ளூர்ச் சந்தையின் கட்டுப்பாட்டை, இந்தியர்களுக்கு வழங்குவதாக இது அமையுமெனத் தெரிவித்தார். 

“இவ்வாறான நிறுவனங்கள், 1978ஆம் ஆண்டின் முதலீட்டுச் சபைச் சட்டம் 4இன் 16ஆம் பிரிவின்படி அனுமதிக்கப்படுகின்றன. பிரிவு 16இன் கீழ் வழங்கப்படும் அனுமதிகள், பணிப்பாளர் ஒருவரால் வழங்கப்படுகின்றன. இந்தியாவின் கேரளா, கோழிக்கோடு, போஸ்ட் ஒலவான்னா, கோடிநட்டுமுக்கு, பிரபா என்ற இடத்தைச் சேர்ந்த வி. அப்துல் ரஸாக் என்ற முதலீட்டாளரின் விண்ணப்பம், ஜனவரி 5, 2017இல் சமர்ப்பிக்கப்பட்டு, அதற்கான அனுமதிக் கடிதம், பெப்ரவரி 2, 2017இல் வழங்கப்பட்டது” என, தகவலறிந்த வட்டாரங்கள், இப்பத்திரிகைக்கு, அநாமதேய முறையில் தெரிவித்தன.

இந்த முதலீட்டாளருக்கு அனுமதி வழங்கப்பட்டால், உள்ளூர் உற்பத்தியாளர்கள் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள் என்பது தொடர்பாக, முதலீட்டுச் சபையின் அப்போதைய தலைவர் உபுல் ஜயசூரியவிடம் கூறினார் எனவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

“உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புத் தொடர்பில் தலைவருக்கு விளங்கப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, முன்னர் வழங்கப்பட்ட அனுமதிக் கடிதம் இரத்துச் செய்யப்பட்டது. அதன் பின்னர், உற்பத்தி செய்கின்ற காலணிகளில் 90 சதவீதமானவற்றை ஏற்றுமதி செய்ய வேண்டுமெனவும், மிகுதி 10 சதவீதமானவற்றை மாத்திரமே உள்ளூர்ச் சந்தையில் விற்பனை செய்ய முடியுமெனவும் நிபந்தனை வழங்கி, ஜூலை 7, 2017இல், கடிதமொன்றை ஜயசூரிய வழங்கினார். இது, உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு ஓரளவு நிம்மதியை வழங்கிய போதிலும், தற்போதைய முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், பெப்ரவரி 2, 2017இல் வழங்கப்பட்ட கடிதத்துக்கே மீண்டும் சென்றுள்ளனர்” என, தகவல்கள் மூலங்கள் குறிப்பிட்டன.

ஜயசூரியவின் கடிதத்தின் உட்பிரிவு 3, “இந்த நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படுகின்ற உற்பத்திகளில் 90 சதவீதமானவற்றை, நீங்கள் ஏற்றுமதி செய்ய வேண்டும். 

அதன்மூலமான வருமானத்துக்கு, ஏற்றுமதி வருமானம் தொடர்பில் காணப்படும் தற்போதைய வரி விதிக்கப்படும்” எனக் கூறுகிறது. சுங்கத் தீர்வை, துறைமுகங்கள் மற்றும் விமானநிலையங்கள் அபிவிருத்தித் தீர்வை, பெறுமதிசேர் வரி, தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி, கூட்டாண்மை வருமான வரி உட்பட, பொருந்தக் கூடிய வரிகள், தீர்வைகள் ஆகியவற்றைச் செலுத்திய பின்னர், உற்பத்தியில் அதிகபட்சமாக 10 சதவீதத்தை, உள்ளூர்ச் சந்தையில் விற்பனை செய்ய முடியுமென, உட்பிரிவு 4 கூறுகிறது.

“பெப்ரவரி 2, 2017இல் வழங்கப்பட்ட அனுமதிக் கடிதம், இத்தால் வாபஸ் பெறப்படுகிறது என்பதைக் கவனிக்குக. ஏற்கெனவே வீகேஸி ஸ்லிப்பர்ஸ் லங்கா (தனியார்) நிறுவனம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள நிறுவனத்தின் செயற்றிட்ட சங்க அமைப்பு விதிகளின் நோக்கங்களில், இதற்கேற்ப மாற்றங்களை மேற்கொள்ளுமாறு வேண்டப்படுகிறீர்கள்” என, அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்படுகிறது.

தொடர்ந்து அக்கடிதத்தில், “வீகேஸி ஸ்லிப்பர்ஸ் லங்கா (தனியார்) நிறுவனத்தின் திருத்தப்பட்ட சங்க அமைப்பு விதிகளை, முதலீட்டுச் சபையின் சட்டத் திணைக்களத்தின் அங்கிகாரத்துக்காக அனுப்பும்படி கோரப்படுகிறீர்கள். அத்தோடு, அங்கிகரிக்கப்பட்ட திருத்தங்களை, 14 நாட்களுக்குள் கம்பனிப் பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதைச் செய்யாத பட்சத்தில், இச்செயற்றிட்டத்துக்கான வழங்கப்பட்ட அனுமதியை இரத்துச் செய்ய வேண்டியிருக்கும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூர் உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பதற்காக, மேற்படி நிபந்தனைகள், முதலீட்டுச் சபையால் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், சபையின் தற்போதைய தலைவர் துமிந்த்ர இரத்நாயக்கவால் செப்டெம்பர் 25, 2017இல் வழங்கப்பட்ட கடிதத்தில், இச்செயற்றிட்டம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட மீளாய்வுகளைத் தொடர்ந்தும், முதலீட்டுச் சபையின் பல்வேறு பங்குதாரர்களுடனும் அதிகாரிகளுடனும் நடத்தப்பட்ட கலந்துரையாடலைத் தொடர்ந்தும், ஜூலை 7, 2017இல் வழங்கப்பட்ட கடிதத்தில் உட்பிரிவு 3, 4 ஆகியவற்றைத் திருத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.

உட்பிரிவு 3, “உங்களுடைய பணியாற்றும் கொள்ளளவை, உள்ளூர்ச் சந்தைக்கு, ஆண்டுக்கு 2.1 மில்லியன் சோடிகள் என்ற அளவில் மட்டுப்படுத்த வேண்டும். உங்கள் உற்பத்தி தொடர்பானதும் உள்ளூர் விற்பனை தொடர்பானதுமான காலாண்டு விவரங்களை, முதலீட்டுச் சபையின் கண்காணிப்பு, முதலீட்டுத் திணைக்களங்களுக்கு அனுப்ப வேண்டும்.

“உங்களுடைய பணியாற்றும் கொள்ளளவை விரிவுபடுத்த விரும்பினால், அதற்கான முன்மொழிவையும், முன்மொழியப்படும் உற்பத்தியில் ஏற்றுமதி தொடர்பான திட்டத்தையும், முன் அனுமதிக்காக, முதலீட்டுச் சபைக்கு அனுப்ப வேண்டும். விரிவுபடுத்துவதற்கான எந்த முயற்சியை எடுக்க முன்னர், இது சமர்ப்பிக்கப்பட வேண்டும்” என்று திருத்தப்பட்டது.

உட்பிரிவு 4, “உட்பிரிவு 3இல் குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் விற்பனைகளின் வரும் வருமானத்துக்கு, சுங்கத் தீர்வை, துறைமுகங்கள் மற்றும் விமானநிலையங்கள் அபிவிருத்தித் தீர்வை, பெறுமதிசேர் வரி, தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி, கூட்டாண்மை வருமான வரி உட்பட, பொருந்தக் கூடிய வரிகள், தீர்வைகள் ஆகியவற்றைச் செலுத்த வேண்டும். அத்தோடு, நாட்டின் உண்ணாட்டு அரசிறைச் சட்டத்தின் கீழ் வரி அறவிடப்படக்கூடியது. ஜூலை 7, 2017இல் வழங்கப்பட்ட அனுமதிக் கடிதத்தில், 4ஆம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சங்க அமைப்பு விதிகளைப் புறக்கணிக்குக” என்று மாற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்திய நிறுவனமொன்றுக்கு அனுமதி வழங்குவதற்கான முடிவு எடுக்கப்பட முன்னர், கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சுக்கு அறிவிக்க, முதலீட்டுச் சபை ஏன் தவறியது என, நிமலசிறி கேள்வியெழுப்பினார். “உள்ளூர்த் தொழிற்றுறைகளைக் கவனிக்க வேண்டிய ஆணை, கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சுக்குக் காணப்படும் நிலையில், உள்ளூர்த் தொழிற்றுறைகளைப் பார்த்துக் கொள்ளும் அமைச்சுக்கு அறிவிக்காமல், தன்னிச்சையான முடிவை, முதலீட்டுச் சபை எடுத்தமைக்குக் காரணம் என்ன?

“செப்டெம்பர் 25ஆம் திகதி அனுப்பிய கடிதத்தில், முதலீட்டுச் சபையின் தலைவர், ‘சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன’ எனக் கூறுகிறார். அது தவறானது. தற்போதுள்ள சந்தை அளவை விட, மிக அதிகமான எண்ணிக்கையான, 2.145 மில்லியன் என்ற, உயர்ந்த அளவிலான வருடாந்த எல்லையை, முதலீட்டுச் சபை எவ்வாறு விதித்தது என, தெளிவில்லாமல் இருக்கிறோம். சந்தையின் எதிர்கால வாய்ப்புகள், தற்போதைய உள்ளூர் உற்பத்தி ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, இந்த எல்லை வழங்கப்பட்டதா? அவ்வாறாயின், தன்னிச்சையான இந்த முடிவுக்கு வித்திட்ட தரவுகளைப் பார்வையிடுவதற்கு நாம் ஆர்வமாக இருக்கிறோம்” என, நிமலசிறி தெரிவித்தார்.

நிமலசிறியின் கருத்துப்படி, காலணித் தொழிற்றுறையை, ஆடைத் தொழிற்றுறை போன்று, நாட்டின் பொருளாதாரத்துக்கு வெற்றிகரமாகப் பங்களிக்கும் ஒரு தொழிற்றுறையாக, கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையும் கருதுகின்றன. “முதலீட்டுச் சபையின் விவேகமற்ற இந்த முடிவு, கைத்தொழில் அபிவிருத்திச் சபையின், கிராமங்களுக்குக் கைத்தொழில்களை எடுத்துச் செல்லும் திட்டத்தில், பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்” என, நிமலசிறி குறிப்பிட்டார்.

முதலீட்டுச் சபையின் பதில்கள்

கே: உட்பிரிவு 3, 4 ஆகியவற்றைத் திருத்தி, முதலீட்டாளர், உள்ளூர்ச் சந்தைக்காக உற்பத்திகளை மேற்கொள்ள, துமிந்த்ர இரத்நாயக்க, எதற்காக அனுமதி வழங்கினார்?

ப: முதலீட்டாளருக்கு முதலீட்டுச் சபையால் வழங்கப்பட்ட, பெப்ரவரி 2, 2017ஆம் திகதியிடப்பட்ட ஆரம்பக் கடிதம், ஜனவரி 5, 2017இல் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்துக்கான பதிலாக, உள்ளூர்ச் சந்தைக்காகப் பொருட்களை விற்பதற்கு அனுமதி வழங்கியது. முதலீட்டுச் சபைச் சட்டத்தின் 16ஆவது பிரிவின் கீழ், இந்த அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது. இப்பிரிவின் கீழ் வழங்கப்படும் அனுமதிகளுக்கு, முதலீட்டாளருக்கு வரிச் சலுகைகள் வழங்கப்படுவதில்லை. இதன்படி முதலீட்டாளர், சுங்கத் தீர்வை, துறைமுகங்கள் மற்றும் விமானநிலையங்கள் அபிவிருத்தித் தீர்வை, பெறுமதிசேர் வரி, தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி, கூட்டாண்மை வருமான வரி உட்பட, பொருந்தக் கூடிய வரிகள், தீர்வைகள் ஆகியவற்றைச் செலுத்த வேண்டும்.

வெளிநாட்டுக் கட்டுப்பாட்டுச் சட்டம் (அத்தியாயம் 423)இன் கீழ் வெளியிடப்பட்ட 2002ஆம் ஆண்டின் 1232/14ஆம் இலக்க வர்த்தமானியின் அடிப்படையில், மேற்படி அனுமதி வழங்கப்பட்டது. இலங்கையில் நிறுவப்படவுள்ள வெளிநாட்டுப் பங்குகளைக் கொண்ட வணிக நிறுவனங்களின் பங்குபற்றலில் தடைகள், கட்டுப்பாடுகள் தொடர்பாக, மேற்படி வர்த்தமானி குறிப்பிடுகிறது. ஆனால், காலணித் தொழிற்றுறை, மேற்படி வர்த்தமானியின் கீழ், எந்தவிதமான கட்டுப்பாடுகளுக்கு உட்படவில்லை. ஆகவே, எந்த வெளிநாட்டு முதலீட்டாளரும், கம்பனிப் பதிவாளரின் அங்கிகாரத்துடன், உள்ளூர்ச் சந்தைக்காகக் காலணிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை ஆரம்பிக்கலாம்.

முதலீட்டுச் சபையின் அங்கிகாரம் தேவையில்லை. ஆனால், பிரிவு 16 நிறுவனங்களுக்கான விசா வழங்கல் காரணங்களுக்காக, முதலீட்டுச் சபையால் வழங்கப்படும் சேவைகளைப் பெறுவதற்காக, நிறுவனங்கள், முதலீட்டுச் சபையூடாகச் செயற்படுகின்றன. முதலீட்டுச் சபையின் தலையீட்டால், நிறுவனங்களுக்கு மேலதிகமான நன்மைகள் இல்லை.

ஆரம்பத்தில் வழங்கப்பட்ட அனுமதிக்காக, காலணி உற்பத்தியாளர்கள் சங்கம், எதிர்ப்பை வெளிப்படுத்திய போது, ஆரம்பத்தில் வழங்கப்பட்ட அனுமதியை வாபஸ் பெற்று, ஜூலை 7, 2017இல், புதிய அனுமதிக் கடிதத்தை வழங்கியது. இதன்மூலம், உற்பத்தியின் 90 சதவீதமானவற்றை, வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டுமென அறிவிக்கப்பட்டது.

ஆனால், அந்த நேரத்தில் முதலீட்டாளர், தொழிற்சாலைக் கட்டடத்தை உருவாக்குவதற்கான முதலீட்டை மேற்கொண்டு, இயந்திரங்களை நிறுவி, பணியாளர்களைப் பணிக்கமர்த்தியிருந்தார். ஆரம்பத்தில் வழங்கப்பட்ட அனுமதியை இரத்துச் செய்வது சட்டவிரோதமானது எனத் தெரிவித்து, சட்ட வழக்காடல் கடிதம் அனுப்பியிருந்தனர். சட்டமா அதிபரிடம், இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டது. முதலீட்டாளரினதும் நாட்டினதும் நன்மைக்காக, இவ்விடயத்தைச் சுமூகமாக முடித்துக் கொள்ளுமாறு, அவர் ஆலோசனை வழங்கினார்.

இவ்விடயம், ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில், செப்டெம்பர் 11, 2017ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்திலும் கலந்துரையாடப்பட்டது. காலணி உற்பத்தியாளர் சங்கத்தின் பிரதிநிதிகள், சம்பந்தப்பட்ட ஏனைய முகவராண்மைகளின் அதிகாரிகள் ஆகியோரும், இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். இந்நிலைமை தொடர்பாகவும், சட்டமா அதிபரின் பரிந்துரை தொடர்பாகவும், முதலீட்டாளரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படின் நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புத் தொடர்பாகவும், ஜனாதிபதிக்கு, முதலீட்டுச் சபை விளக்கமளித்தது.

சட்ட நடவடிக்கைக்குச் செல்லாமல், முதலீட்டாளருடன் இவ்விடயத்தைச் சுமூகமாக முடித்துக் கொள்ளுமாறு, முதலீட்டுச் சபைக்கு, ஜனாதிபதி பணித்தார். அதன் காரணமாக, ஜூலை 7, 2017இல் வழங்கப்பட்ட கடிதத்தைத் திருத்தி, செப்டெம்பர் 25, 2017இல், புதிய கடிதத்தை வழங்கியது. அதில், முதலீட்டாளரின் உற்பத்தி, மாதாந்தம் 175,000 சோடி காலணிகள் (ஆண்டுக்கு 2.1 மில்லியன் சோடிகள்) என மட்டுப்படுத்தப்பட்டது. அத்தோடு, ஏற்றுமதிச் சந்தைக்கான மேலதிகமாக விரிவுபடுத்தல் நடவடிக்கைக்கு, முதலீட்டுச் சபையின் அனுமதி தேவையெனவும் அறிவிக்கப்பட்டது.

கே: உள்ளூர்த் தொழிற்றுறையை அழித்து, நாட்டுக்குத் தேவையான காலணிகளை, இந்திய நிறுவனமொன்று வழங்குவதற்கான அனுமதி வழங்கும் செயற்பாடு தானே இது?

ப: உள்ளூர் காலணி உற்பத்தியாளர்கள், ஆண்டொன்றுக்கு 55 மில்லியன் சோடிகளுக்கும் மேற்பட்ட காலணிகளை உற்பத்தி செய்கின்றனர். அவர்கள், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து, ஆண்டுதோறும் 3.3 மில்லியன் சோடிகளுக்கும் மேற்பட்ட காலணிகளை (மாதாந்தம் 275,000 சோடிகள்) இறக்குமதி செய்கின்றனர்.

இம்முதலீட்டாளரால் உள்ளூர்ச் சந்தைக்கென உற்பத்தி செய்யப்பட அனுமதிக்கப்பட்டுள்ள தொகை, ஆண்டுதோறும் 2.1 மில்லியன் சோடிகள் ஆகும்.

கே: வீகேஸி ஸ்லிப்பர்ஸ் லங்கா (தனியார்) நிறுவனத்துக்கு, முதலீட்டுச் சபையின் தலைவர் வழங்கிய கடிதத்தில், அனுமதிக் கடிதம் வழங்குவதற்கு முன்னர், பங்குதாரர்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன என்று கூறப்படுகிறது. ஆனால், இலங்கை காலணி மற்றும் தோல் உற்பத்திகள் உற்பத்தியாளர் சங்கம், அதை மறுப்பதோடு, மேற்படி முடிவு, தன்னிச்சையாக எடுக்கப்பட்டது என்று கூறுகிறதே?

ப: ஜனாதிபதியால் தலைமை தாங்கப்பட்டு, ஜனாதிபதி செயலகத்தில் செப்டெம்பர் 11, 2017ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தின் குறிப்பு, ஜனாதிபதியின் மேலதிக பதில் செயலாளர் நாலக களுவேவவால் எழுதப்பட்டது. அது, முதலீட்டுச் சபையின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்துகிறது.

கே: ஊறுவிளைவிக்கக்கூடியதும் உள்ளூர் உற்பத்தியாளர்களைப் பாதிக்கக்கூடியதுமான அந்த அனுமதிக் கடிதத்தை, முதலீட்டுச் சபை ஏன் வழங்கியது?

ப: உள்ளூர் உற்பத்தியாளர்களைப் பாதிக்கக்கூடிய எக்கடிதத்தையும், முதலீட்டுச் சபை வழங்கவில்லை. நாட்டில் காணப்படும் சட்டங்களுக்கும் விதிமுறைகளுக்கும் ஏற்ப, முதலீட்டுச் சபை நடந்துகொண்டுள்ளது. ஏதாவது பாதிப்புகள் ஏற்படுமாயின், அவற்றை இல்லாது செய்வதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளையும் அது எடுத்துள்ளது.

“இலங்கையிலிருந்து அதிக வேண்டுகோள்கள் கிடைத்தன” என்கிறார் அப்துல் ரஸாக்

வீகேஸி ஸ்லிப்பர்ஸ் லங்கா (தனியார்) நிறுவனத்தின் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான அப்துல் ரஸாக், இப்பத்திரிகைக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது, “வி.கே.சி” வர்த்தக முத்திரை கொண்ட காலணிகளை இலங்கையில் வழங்குமாறு, ஏராளமான கோரிக்கைகள் கிடைத்தமையின் காரணமாக, இலங்கையில் கால்பதிக்க முடிவெடுத்ததாகத் தெரிவித்தார்.

“வி.கே.சி காலணிகளை, 3 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தார். எங்கள் காலணிகளுக்கான கேள்வி, ஆரோக்கியமானதாகக் காணப்பட்டது. 

இலங்கையைச் சேர்ந்த முகவர்கள் சிலரும் கூட, எமக்கு அழைப்பெடுத்து, எமது காலணிகளைக் கோரியிருந்தனர். இதனால் தான், நீர்கொழும்பில் எங்களது காலணி உற்பத்தித் தொழிற்சாலையை வைப்பதற்கு நாம் முடிவெடுத்தோம். அதன் பின்னர் எமது முதலீட்டை மேற்கொண்ட நாம், தேவையான அனுமதிகளையும் பெற்றுக் கொண்டோம்.

எங்களுக்கு முதலில் வழங்கப்பட்ட அனுமதிக் கடிதம் வாபஸ் பெறப்பட்டு, 90 சதவீதமானவை ஏற்றுமதி செய்யப்பட வேண்டுமெனவும், 10 சதவீதமானவை மாத்திரமே, உள்ளூர்ச் சந்தையில் விற்பனை செய்யப்பட வேண்டுமென அதிகாரிகள் எமக்கு அறிவித்தபோது, நாம் ஆச்சரியமடைந்தோம். “எங்களது உற்பத்திகளை ஏற்றுமதி செய்ய நாம் விரும்பவில்லை; அது, அதிக பணச்செலவை ஏற்படுத்தும். அதனாலேயே, இலங்கைக்கு வந்து, உள்ளூர்ச் சந்தையில் முதலிட்டோம். முதலீட்டுச் சபையின் 16ஆம் பிரிவுச் சட்டத்தின்படி, எமக்கு அனுமதிகள் வழங்கப்பட்டன. ஏனைய உள்ளூர் தொழிற்றுறை போல, எங்களுக்கு வரி விலக்களிப்புகள் வழங்கப்படவில்லை.

முதலீட்டுச் சபை நிறுவனமாக நாங்கள் இருப்பதன் காரணமாக, எமக்கு வரிச் சலுகைகள் கிடைத்தன என, உள்ளூர் நிறுவனங்கள் நினைக்கின்றன. நாட்டுக்கு நாங்கள், அந்நியச் செலாவணியைக் கொண்டு வந்தோம். இலாபத்தை மாத்திரமே, இந்தியாவுக்குக் கொண்டு செல்வோம். உள்ளூர்வாசிகளுக்கென, 650 வேலைவாய்ப்புகளை நாம் உருவாக்குவோம். 

ஒருசில இந்தியர்களே வந்து, உள்ளூர்வாசிகளுக்குப் பயிற்சிகளும், உயர்தொழில்நுட்ப இயந்திரங்களை எவ்வாறு செயற்படுத்துவது என்றும் பயிற்சியளிப்பர். “உள்ளூர் உற்பத்தியாளர்களுடனோ அல்லது முதலீட்டுச் சபையுடனோ, எமக்கு எவ்விதமான முரண்பாடுகளும் இல்லை. அதனால் தான், நாம் உற்பத்திசெய்யும் பொருட்களில் 90 சதவீதமானவற்றை ஏற்றுமதி செய்யுமாறு கூறப்பட்ட போது, உள்ளூர்ச் சந்தைக்கு அவற்றை விநியோகிப்பதற்கான வசதிகயை வழங்குமாறு, முதலீட்டுச் சபையிடம் மரியாதையுடன் கோரினோம்” என்று தெரிவித்தார்.


இந்திய நிறுவனத்துக்கு அனுமதி: சிக்கலில் காலணித் தொழிற்றுறை

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.