ஈரான் மீது தடைகள்: நிலைமாறும் சர்வதேச அரசியல்

- ஜனகன் முத்துக்குமார்

ஒபாமா நிர்வாகத்தால் 2015இல் கையெழுத்திடப்பட்ட ஈரான் அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து (JCPOA) ஐக்கிய அமெரிக்கா வெளியேறுகின்றது என, ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் அறிவித்ததோடு, ஈரானுக்கு எதிரான “கடுமையான” பொருளாதாரத் தடைகளை நடைமுறைப்படுத்தும்படியான ஆணை மீதான சட்டமூலத்தில் கையெழுத்திட்டிருந்தார். ஈரானுடனான உடன்படிக்கையிலிருந்து ஐ.அமெரிக்கா வெளியேறினாலும், உடன்படிக்கைக்கு மாறாக அணுவாயுத உற்பத்தியை ஈரான் மேற்கொள்ளுமாயின், அது மிகவும் கடுமையான விளைவுகளை எதிர்நோக்கவேண்டியிருக்கும் எனவும் குறித்த அறிவிப்பில் எச்சரித்திருந்திருந்தார்.

குறித்த ஒப்பந்தமானது, ஐ.அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், சீனா, ரஷ்யா, ஜேர்மனி ஆகிய உலக வல்லரசுகளின் P5 + 1 குழுவுடன், ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து,  ஈரான், அதன் அணுசக்தி திட்டத்தில் அணுவாயுதப் பாவனைக்காக அணுசக்தியைப் பயன்படுத்துவதில்லை என்ற ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அணுவாயுதத்தை உருவாக்க ஈரான் முயன்றதாகக் கூறப்பட்ட பதற்றங்களைத் தவிர்க்கும் முகமாக, இவ்வொப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.

அவ்வுடன்படிக்கையின் கீழ், ஈரான், அதன் முக்கிய அணுசக்தி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த ஒப்புக்கொண்டதுடன், அதற்குப் பதிலாக, சர்வதேச நாடுகள், ஈரானுக்கு எதிராக மேற்கொண்ட பொருளாதாரத் தடைகளை அகற்றுவதற்கு உடன்பாடு காணப்பட்டது. இதன்படி, அப்போதைய ஐ.அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் நிர்வாகம், இரகசியமாக ஓர் அணுசக்தித் திட்டத்தைக் கட்டமைப்பதில் இருந்து, ஈரானை JCPOA தடுக்கிறது என்ற நம்பிக்கையை வெளியிட்டிருந்தது. மறுமுனையில் ஈரான்,  “அசாதாரணமானதும் வலுவானதுமான கண்காணிப்பு, சரிபார்ப்புக்கும் ஆய்வுக்கும்” உறுதியளித்து, அதன் அடிப்படையில் சர்வதேச அணுசக்தி அமைப்பு, ஈரானிய அணுசக்தித் தளங்களை தொடர்ந்து கண்காணிக்கவும், மேலும்  இது தொடர்பில்  சந்தேகத்துக்குரியதாகக் கருதப்படும், நாட்டில் எங்கும் எந்தவோர் இடத்தையும் அணுகுவதற்கு, சர்வதேச அணுசக்தி அமைப்பு ஆய்வாளர்களை அனுமதித்திருந்தது.

இவ்வொப்பந்தத்திலிருந்து ஐ.அமெரிக்காவின் வெளியேற்றம் தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்த ஈரானின் உயர் தலைவர் அயத்தொலா அலி கமெனி, “ஐ.அமெரிக்கா, வலராற்றுத் தவறொன்றைச் செய்துவிட்டது. இது ஐ.அமெரிக்காவைப் பொறுத்தவரை, புதியதொரு நடவடிக்கை இல்லை. மாறாக, ஐ.அமெரிக்காவை நம்ப, ஈரானிய மக்கள் விரும்பாமைக்கு நல்லதோர் எடுத்துக்காட்டே ஐ.அமெரிக்க ஜனாதிபதியின் விபரீதமான இந்த முடிவாகும்” என, சீற்றம் வெளியிட்டிருந்தார்.

அவர் மேலும், குறித்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில், ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து உத்தரவாதங்களைப் பெற, தனது அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், ஐ.அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள், குறித்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேற்றமானது, சர்வதேச அரசியல் களநிலைவரங்களில் எவ்வாறு செல்வாக்குச் செலுத்தப்போகின்றது என்பது பற்றி இப்பத்தி ஆராய்கின்றது.

குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், ஐ.அமெரிக்காவின் முடிவை “ஒரு தவறு” எனத் தெரிவித்தார். ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவுச் செயலாளர் பொரிஸ் ஜோன்சன், ஐக்கிய இராச்சியமானது ஐ.அமெரிக்காவின் ஒருமுகமாக முடிவுக்காக குறித்த ஒப்பந்தத்திலிருந்து விலக மாட்டாது எனக் கூறியுள்ளார். ஜேர்மனியின் சான்செலர் அங்கெலா மேர்க்கெல், குறித்த ஒப்பந்தத்தில் ஈரான் நிலைத்து நிற்கத் தேவையான எல்லாவிதமான நடவடிக்கைகளையும் தனது அரசாங்கம் செய்யும் எனக் கூறியிருந்தார்.

குறித்த விமர்சனங்கள் ஒரு புறமிருக்க, இந்நடவடிக்கையை ஈரானின் பிரதான பிராந்திய போட்டியாளர்களான சவுதி அரேபியாவும் இஸ்‌ரேலும் வரவேற்றுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் அடெல் அல் ஜுபியர், “ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன, ஈரான் அணுவாயுத உற்பத்தியில் எப்போது ஈடுபட்டாலும், அதற்கு எதிராக சவூதி தேவையான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயங்காது” என தெரிவித்திருந்தார். இதே விதமாகன கருத்துகளையே, இஸ்‌ரேலியப் பிரதமரும் தெரிவித்திருந்திருந்தார்.

எது எவ்வாறாயினும், குறித்த ஒப்பந்தத்திலிருந்து ஐ.அமெரிக்காவின் வெளியேற்றம், ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் என்பன, ஐரோப்பிய ஒன்றியத்தையும் இதர நாடுகளைகளையும் பாதிக்காமல் இல்லை. குறித்த தடைகள், ஐக்கிய ஐ.அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்டுள்ள சர்வதேச நிறுவனங்கள்  மேற்கொண்டுள்ள ஈரானுடனான வியாபார நடவடிக்கைகளைப் பாதிப்பதோடு, ஐ.அமெரிக்க டொலரை மதிப்பீட்டு விலை அலகாக கொண்டுள்ள பலதேசிய நிறுவனங்களின் வியாபார முறைமையை வெகுவாகவே பாதிக்கின்றது. மேலும், இது ஐ.அமெரிக்காவை அடிப்படையாக கொண்டுள்ள வங்கிகள் ஈரான் - ஐரோப்பிய சந்தைப் பரிவர்த்தனைகளில் பணப்புரளவு செய்வதற்குத் தடைசெய்யப்பட்டமையைத் தொடர்ந்து, குறித்த வியாபாரத்தில் நிதிமுறைமைகளைக் கையாள்வதில் கடினத்தன்மை ஏற்பட்டமை தொடர்பிலும் பாதிப்பையே ஏற்படுத்தியுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள இப்பிரச்சினை, சர்வதேச அரசியலில் இரண்டு விதமான தாக்கங்களை ஏற்படுத்த முடியும். ஒன்று: ஐ.அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில், அதிகார மையம் தொடர்பான தாக்கம் ஏற்பட வாய்ப்புண்டு. ஐரோப்பிய ஒன்றியம், இணைந்த வல்லரசாக மாறுவதன் மூலம், ஐ.அமெரிக்காவின் சர்வதேச வல்லரசாண்மையை, இரண்டாவது இடத்துக்குத் தள்ளமுடியும்.

இரண்டாவது: மத்திய கிழக்குப் பிராந்தியத்தில், ஈரானுடன் இணைந்த அரசியலே காணப்படுகிறது. எனவே, பிராந்தியத்தில்  முரண்பாடான நிலைகள் மோசமடையுமாயின், பிராந்திய யுத்தத்துக்கே அது வழிவகுக்கும்.


ஈரான் மீது தடைகள்: நிலைமாறும் சர்வதேச அரசியல்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.