ஊழல் எதிர்ப்பு எனும் பாரிய ஊழல்

வழமைபோல் வடக்கில் தேர்தல் மேடைகளில் பேசப்படும் பிரதான விடயம், இனப் பிரச்சினையாகவே இருக்கிறது. தெற்கில் தேர்தல் மேடைகளில் பேசப்படும் முக்கிய பிரச்சினை, அடிக்கடி மாறுவதோடு இம்முறை ஊழல் மற்றும் மோசடிகளைத் தடுப்பதே முக்கிய பிரச்சினையாக அமைந்துள்ளது.

அதிலும் இம்முறை, பிணைமுறி விவகாரமே தேர்தல் மேடைகளில் பாரிய பிரச்சினைகளில் ஒன்றாக அலசப்பட்டு வருகிறது. அது தொடர்பான நாடாளுமன்ற விவாதம் தொடர்பான சர்ச்சையொன்று, கடந்த வாரம் தெற்கில், அரசியல் களத்தில் ஏனைய சகல விடயங்களையும் மூடி மறைத்துவிட்டது. 

பிணைமுறி விவகாரம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையும் முன்னைய அரசாங்கத்தின் காலத்தில், இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட பாரிய ஊழல்கள் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையும் டிசெம்பர் மாதம் 30 ஆம் திகதியும் ஜனவரி மாதம் முற்பகுதியிலும், அந்தந்த ஆணைக்குழுக்களின் தலைவர்களால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டன. 

திட்டமிடப்பட்டு இவ்அறிக்கைகள், ஒரே வாரத்துக்குள் தம்மிடம் கையளிக்கப்படவில்லை என ஜனாதிபதி கூறியிருந்தார். ஒரு அறிக்கையினால், ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்களும் மற்றைய அறிக்கையால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட, அவரது சில ஆதரவாளர்களும் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளமையாலேயே அவர் அவ்வாறு கூறியிருக்கிறார் போலும்.

எவ்வாறாயினும், இந்த இரண்டு அறிக்கைகளும் ஒரேகாலத்தில் சமூகத்தில் ஆராயப்பட்டு வருவதனால் நாட்டில் இரு பிரதான கட்சிகளும் ஊழல், மோசடி என்ற விடயங்களில், உண்மையிலேயே எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர் என்று அறிந்து கொள்ள, சிறந்ததொரு சந்தர்ப்பம், நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சுருக்கமாகக் கூறுவதாக இருந்தால், இந்த நிலைமையின் காரணமாக இரு பிரதான கட்சிகளும் ஏனையவர்களின் ஊழல்களைப் பற்றிக் கூச்சலிட்டுக் கொண்டு இருக்க விரும்புகின்றனவேயன்றி, உண்மையிலேயே ஊழலைத் தடுக்க ஆக்கப்பூர்வமான எதையும் செய்யத் தயாரில்லை என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

பிணைமுறி ஆணைக்குழுவின் அறிக்கை, ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட போது, அது தொடர்பாக நாடாளுமன்ற விவாதம் ஒன்றை நடத்த, மஹிந்தவின் தலைமையிலான கூட்டு எதிரணி அசாதாரண அவசரத்தை காட்டியது. அவர்கள், அது தொடர்பாக எழுப்பிய கோஷத்தின் காரணமாக, அதை விவாதிக்க நாடாளுமன்றம் கூட்டப்பட்டபோது, அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டு, சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் காயமடையவும் நேர்ந்தது.

அன்று, நாடாளுமன்றம் இந்த விவாதத்துக்காகக் கூட்டப்பட்ட போது, பிணைமுறி ஆணைக்குழுவின் அறிக்கை எந்தவோர் உறுப்பினருக்கும் கிடைத்திருக்கவில்லை. ஆனால், மஹிந்த ஆதரவாளர்களும் மக்கள் விடுதலை முன்னணியினரும் விவாதத்தைக் கோரியிருந்த நிலையிலேயே, சபாநாயகர் சபையைக் கூட்டியிருந்தார். இதனால் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக, நாடாளுமன்றத்தில் அடிதடியும் இடம்பெற்றது. 

இது, இரு சாராரினதும் பொறுப்பற்ற தன்மையையே எடுத்துக் காட்டியது. அறிக்கை தம்மிடம் இல்லாமல், கூட்டு எதிரணி விவாதம் ஒன்றை கேட்டிருக்கக் கூடாது. அதேவேளை அறிக்கையில்லாமல் விவாதத்தை நடத்த முடியாது என்பதை ஐ.தே.கவும் கூறியிருக்க வேண்டும். இறுதியில் இரு சாராரையும் பராமரிக்கும் மக்களின் பணத்தில் சுமார் 40 இலட்சம் ரூபாய் அன்றைய கூட்டத்துக்காக வீணாகச் செலவிடப்பட்டது. 

பின்னர், ஜனாதிபதி பிணைமுறி ஆணைக்குழுவின் அறிக்கையையும் பாரிய குற்றங்கள் தொடர்பாக ஆராய்ந்த ஆணைக்குழுவின் அறிக்கையையும் ஒரே நாளில் நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தார். 

எனவே, இரண்டு அறிக்கைகள் மீதும் ஒரேநேரத்தில் விவாதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதுவரை பிணைமுறி விவகாரம் தொடர்பாக, விவாதம் நடத்த அதீத அவசரத்தைக் காட்டிய கூட்டு எதிரணியின் அந்த அவசரம் அத்தோடு காணாமற் போய்விட்டது. பிரதானமாக ஐ.தே.கவினதும் கூட்டு எதிரணியினதும் இணக்கத்துடன் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நடைபெற்று, 10 நாட்களில் அதாவது பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி, அந்த விவாதத்தை நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது.

இந்நாட்களில் நாளுக்கொரு குண்டைத் தூக்கிப் போடும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தத் தீர்மானத்தையும் விமர்சித்து மற்றொரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து இருந்தார். 

தமது ஆட்சி சகாவான ஐ.தே.கவும் கூட்டு எதிரணியும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கு முன்னர், இந்த விவாதத்தை நடத்தத் தயாரில்லை என்று கூறிய அவர், அரசாங்கத்திலும் 
எதிர்க்கட்சியிலும் உள்ள, ஊழலைப் பாதுகாக்கும் ‘உயர் மட்டத் திருடர் கூட்டணியொன்று’ விவாதத்தைத் தாமதப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளதாகவும் கூறினார். 

அத்தோடு, முடியுமென்றால் தேர்தலுக்கு முன்னர் விவாதத்தை நடத்துமாறும் அக்கட்சிகளுக்குச் சவால் விடுத்தார். 

ஐ.தே.க தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அந்தச் சவாலை ஏற்றுக் கொண்டார். பெப்ரவரி எட்டாம்  திகதி விவாதம் நடைபெறும் என அவர் தாமாக முடிவு செய்து, அதற்கு ஏனைய கட்சிகளின் ஒப்புதல் கிடைக்கும் முன்னரே இதை அறிவித்தார். 

ஆனால், அதைத் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய விரும்பவில்லை. அவர் தமது எதிர்ப்பை, உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கும் முன்னரே ஊடகங்களுக்கு அறிவித்தார். 

தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரான 48 மணித்தியாலத்துக்குள், எவரும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என்பது சட்டம். 

ஆனால், 8 ஆம் திகதி விவாதம் நடைபெற்றால் அன்றும் 9 ஆம் திகதியும் ஊடகங்களில் அதன் விவரங்கள் வெளிவரும். எனவே, அது சில அரசியல் கட்சிகளுக்குப் பாதகமாக அமையும் என்றும் அது தேர்தல் விதிமுறைகளுக்கு முரண் என்றும் கூறினார். பின்னர், அவர் அது தொடர்பாக, சபாநாயகர் கரு ஜயசூரியவிடமும் தெரிவித்தார். அதன்படி, விவாதம் ஆறாம் திகதி நடைபெறும் எனத் தீர்மானிக்கப்பட்டது. 

விந்தையான விடயம் என்னவென்றால், முடியும் என்றால் தேர்தலுக்கு முன்னர் விவாதத்தை நடத்துங்கள் என்று சவால் விடுத்த ஜனாதிபதி, விவாதம் 6 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட போது, “அவசரமாக நடத்தப்படும் விவாதம் அர்த்தமற்றது” என்று கூறியிருந்தார். 

இந்த விவாதம் தேர்தலுக்கு முன்னர் நடைபெறுவதால், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கூறியதைப் போல், தேர்தல் முடிவுகளில் பாரிய மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது. ஏனெனில், தேசிய பிரச்சினைகளால் ஓரிரு நாட்களில் வாக்காளர்களில் மனமாற்றம் ஏற்படுவதில்லை. 

அவ்வாறு தேசிய பிரச்சினைகளால் வாக்காளர்களுள் மன மாற்றம் ஏற்படுவதாக இருந்தால், அவர்கள் குறிப்பிட்ட ஒரு கருத்தால் தொடர்ச்சியாக நீண்ட காலமாக அசௌகரியத்துக்கு உள்ளாக வேண்டும். அதன் மூலமும், ஒரு சிலர் மட்டுமே மனதை மாற்றிக் கொள்வர். அவ்வாறு இல்லாமல், மனமாற்றம் ஏற்பட்ட ஒரு சந்தர்ப்பம் இருந்தால், அது அரச படைகள் போரில் வெற்றி பெற்றபோது, தென்பகுதியில் ஏற்பட்ட மனமாற்றமேயாகும்.

ஊழல் என்பது தேசிய பிரச்சினையாக மாறியுள்ளது. ஆனால், சுமார் மூன்று வருடங்களாகப் பிணைமுறி விவகாரம் அரசியல் அரங்கில் பாரிய விவாதம் ஒன்றைத் தோற்றுவித்திருக்கின்ற போதிலும் எமக்குத் தெரிந்த ஒரு ஐ.தே.ககாரராவது அதன் காரணமாக ஐதே.கவை கைவிட்டு இருக்கிறாரா? பிணைமுறி விவகாரத்தினால் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு பாரிய நட்டம் ஏற்பட்டு இருப்பது தெரிந்திருந்தும் ஐ.தே.கவைச் சேர்ந்த எந்தவோர் ஊழியர் சேமலாப நிதிய உறுப்பினரும், தமது எதிர்காலச் சேமிப்பில் கைவைக்க இடமளித்துவிட்டார்களே என்று ஐ.தே.க மீது கோபத்தில் இருப்பதைக் கண்டிருக்கிறோமா? இல்லை.

ஐ.தே.ககாரர்கள் இந்தப் பாரிய ஊழலைக் கண்டு வருந்தவில்லை. மாறாக, அவர்கள் அந்த ஊழல் அம்பலமாகிவிட்டதே என்று தான் வருந்துகிறார்கள். எனவேதான், பிணைமுறி விவகாரம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தால், ஐ.தே.க பாதிக்கப்படுவதில்லை என்று கூறுகிறோம்.

மஹிந்த அணி விடயத்திலும், இதுவே நிலைமையாக இருக்கிறது. மிக் விமானக் கொள்வனவு, எண்ணெய் கொள்வனவுக்கான ஹெஜிங் விவகாரம், கிரீக் பிணைமுறி விவகாரம் ஆகியவை மூலமாகப் பல்லாயிரம் பில்லியன் ரூபாய் மக்களுக்குச் சொந்தமான பணத்தை கொள்ளையடித்ததாக மஹிந்தவின் குடும்பத்துக்கும் ஆதரவாளர்களுக்கும் எதிராகக் குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது. 

ஆனால், அவ்வாறிருந்தும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில், மஹிந்தவுக்கு வாக்களிக்க, இந்த நாட்டில் 58 இலட்சம் மக்கள் இருந்தார்கள். அவர்களில் 47 இலட்சம் பேர், மஹிந்தவைப் பிரதமராக்க, கடந்த பொதுத் தேர்தலில் வாக்களித்தார்கள். 

ஊழியர் சேமலாப நிதியத்தை ஓய்வூதியமாக மாற்றி அமைக்க மஹிந்தவின் அரசாங்கம் சர்ச்சைக்குரிய திட்டம் ஒன்றை கொண்டு வந்தது. அதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மீது, பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதில், ரொஷேன் சானக்க என்ற இளைஞர் கொல்லப்பட்டார். இதுபோன்ற, ஆர்ப்பாட்டங்கள் காரணமாக, மஹிந்த அரசாங்கம் அந்தத் திட்டத்தை கைவிட்டது. 

ஆனால், ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவரான எந்தவோர் ஸ்ரீ ல.சு.ககாரரும் அக்காலத்தில் ரொஷேனுக்காக மனம் வருந்தியதுண்டா? அவர்களில் எவரேனும் இந்தக் கொலையை எதிர்த்தார்களா? அதனால் கட்சி மாறினார்களா? எனவே, நாடாளுமன்ற விவாதம் ஒன்றினால் தேர்தல் முடிவுகளில் உடனடி மாற்றம் ஏற்படப் போவதில்லை.

ஆனால், அவ்வாறானதோர் விவாதம், அந்த விடயம் அல்லது விடயங்கள் தொடர்பாக மக்கள் அபிப்பிராயத்தை கட்டி எழுப்ப உதவலாம். அதற்காக, ஊடகங்களோ அல்லது சிவில் அமைப்புகளோ நீண்ட காலமாகக் கோஷமெழுப்பி வர வேண்டும். 

மஹிந்தவுக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 58 இலட்சம் வாக்காளர்கள் வாக்களித்த போதிலும், எதிர்க்கட்சிகள் நடத்தி வந்த கோஷங்கள், ஆர்ப்பாட்டங்கள் காரணமாக ஓரளவுக்கு அவருக்கு எதிராக மக்கள் அபிப்பிராயமும் கட்டி எழுப்பப்பட்டு இருந்தது. அதனாலேயே அவர் தோல்வியடைந்தார். அதுதான் மக்கள் அபிப்பிராயத்தின் பலம். 

பிணைமுறி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆணைக்குழுவொன்றை நியமிக்கக் காரணமாக இருந்தது, மக்கள் அபிப்பிராயமே. 

ஆரம்பத்தில் அவ்வாறானதோர் ஊழல் நடைபெறில்லை என, மறுத்து வந்த ஐ.தே.க இப்போது ஊழல் நடைபெற்று இருக்கிறது என்றும், ரவி கருணாநாயக்க குற்றமிழைத்து இருக்கலாம் என்றும் ஏற்றுக் கொள்ளக் காரணமாக இருந்ததும் மக்கள் அபிப்பிராயமே.

சுருக்கமாகக் கூறுவதாக இருந்தால், பிணைமுறி விவகாரம் தொடர்பான விவாதம் போன்றவற்றால் உடனடியாக மக்கள் மனம் மாறாவிட்டாலும் அந்த விவகாரம் தொடர்பாக மக்கள் அபிப்பிரயத்தை கட்டி எழுப்ப அந்த விவாதம் உதவும். அந்த சர்ச்சை மேலும் தொடர்ந்தால் மட்டுமே அந்த விவகாரம் தொடர்பான மக்கள் அபிப்பிராயம் கட்டி எழுப்பப்படும். 

இன்றுள்ள மற்றொரு பிரச்சினை என்னவென்றால், ஊழலுக்கு எதிரான மக்கள் அபிப்பிராயம் ஓரளவுக்கு உருவாகியிருந்த போதிலும், அவற்றைத் தடுப்பதிலும் குற்றவாளிகளைத் தண்டிப்பதிலும் அரசாங்கம் காட்டி வரும் அசமந்தப் போக்குக்கு எதிராக மக்கள் அபிப்பிராயம் கட்டி எழுப்பப்படாமல் இருப்பதாகும்.

தமது அரசாங்கத்தில், பிரதான கட்சியான ஐ.தே.க ஊழல் பேர்வழிகளை, குறிப்பாக, ராஜபக்ஷ குடும்பத்தினரைப் பாதுகாப்பதாகவும் ஊழலைத் தடுக்க உருப்படியான நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் ஜனாதிபதியே 2016 ஆம் ஆண்டு முதல் கூறி வருகிறார். அதேவேளை, ஊழல் மோசடிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தாமதமாவதற்கு காரணம் என்ன என்று தமக்கு தெரியாது என ஐ.தே.க கூறுகிறது. கடந்த நவம்பர் மாதத்தில், பொலிஸ் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களங்களில் ஏற்படும் இந்தத் தாமதத்துக்கான காரணத்தை ஆராய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு குழுவையும் நியமித்திருந்தார். 

ஆனால், அந்தக் குழுவுக்கு என்ன நடந்தது என்று இப்போது ஆராய வேண்டியுள்ளது.
அதாவது, மூன்று ஆண்டுகளாகியும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் ஏன் முன்னேறவில்லை என ஜனாதிபதி, பிரதமர் ஆகிய நாட்டின் இரண்டு பிரதான தலைவர்களுக்கும் தெரியாத அவல நிலை உருவாகியிருக்கிறது. 

இது ஊழலானது ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் இதயத்துக்குள்ளும் ஊடுறுவியுள்ளதையே காட்டுகிறது.    


ஊழல் எதிர்ப்பு எனும் பாரிய ஊழல்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.