கொள்கையை மறந்துவிட்டு அஷ்ரபை நினைவுகூர்தல்

தந்தை மரணித்த பிற்பாடு, அந்தத் தந்தையின் கொள்கைகள், சிந்தனைகள், வழிகாட்டல்கள், நல்லொழுக்கம், சமூக சிந்தனை, மக்கள் நலன் எல்லாவற்றையும் ஏகத்துக்கு மறந்துவிட்டு, அவரது பிறந்த தினத்தையும் இறந்த தினத்தையும் நினைவுகூர்கின்ற பிள்ளைகளைப் போலவே, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் அரசியல் வாரிசுகளின் செயற்பாடுகள் தென்படுகின்றன.   

மர்ஹூம் அஷ்ரப், தவறுகளுக்கு அப்பாற்பட்டவரோ, விமர்சனங்களுக்கு உட்படாதவரோ அல்லர். தவறு காண்பதென்றால், அவர் மீதும் பல தவறுகளைக் காண முடியும்.   

ஆனால், ஒப்பீட்டு அடிப்படையில் தனித்துவ அடையாள அரசியலை, மக்கள் மயப்படுத்திய ஒருவராகவும் குறிப்பாக, வடக்கு, கிழக்கில் வாழும் முஸ்லிம்களின் குரலாகவும் அவர் ஒலித்தார்.   

அது மட்டுமன்றி, இன்றுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளின் உரிமைசார், அபிவிருத்திசார் சேவைகளை, அளப்பதற்கான ஓர் ‘அளவுகோலாக’வும் அஷ்ரப் திகழ்கின்றார்.   

ஆனால் இன்று, அஷ்ரபின் கொள்கைகள் மறக்கடிக்கப்பட்டு உள்ளதுடன், அக்கொள்கைகள் மூன்று சந்தர்ப்பங்களில் மட்டுமே நினைவு கூரப்படுகின்றன. அத்துடன், அவரின் அடிச்சுவட்டை பின்பற்றுதல் என்ற தார்ப்பரியமும் பந்தாக்களுடன் முடிவடைந்து விடுகின்றன.   

அதாவது, அவரது பிறந்த தினமான ஒக்டோபர் 23ஆம் திகதியும் அவர் மறைந்த நாளான செப்டெம்பர் 16ஆம் திகதியும் தேர்தல் காலங்களிலும் மாத்திரமே, மர்ஹூம் அஷ்ரப் நினைவுகூரப்படுவதுடன், அவரது கொள்கைகளும் உயர்த்திப் பிடிக்கப்படுகின்றன.   

இவ்வாறான நினைவுகூரல்கள், கடந்த மாதம், அவர் மறைந்த தினத்தில் மேற்கொள்ளப்பட்டன. இந்த மாதம் அவர் பிறந்த நாளிலும், அவருடைய புகழ்பாடப்படும். அத்தோடு சரி.  

தனித்துவ அரசியலில் அஷ்ரப்பின் கொள்கைகள், வழிகாட்டல்களை மறந்து செயற்படுவதை பார்க்கின்ற போதும், ஒழுக்க ரீதியாகவும் சமூக ரீதியாகவும் நோக்கும் போது, பல முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு, அஷ்ரபை நினைவு கூருகின்ற தகுதி, இருக்கின்றதா என்பது சந்தேகமாகவே இருக்கின்றது.   

பிழையான அரசியலில் இருந்துகொண்டு, அஷ்ரபின் (ஓரளவுக்கேனும் சமூகம்சார்) அரசியலைப் புகழ்பாடுவதை பார்க்கும் போது, மதுக் கோப்பையைக் கையில் ஏந்திக் கொண்டு “எனது தந்தை குடிக்கக் கூடாது என்று சொன்னார்” எனத் தந்தையைப் பெருமை பாராட்டுவது போலிருக்கின்றது.   

அஷ்ரபோடு உண்மையில் மிக நெருக்கமாக இருந்த பலர், இன்று செயற்பாட்டு அரசியல் களத்தில் இல்லை; அல்லது, பின்வந்தவர்களால் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.   

இருப்பினும், சிலர் இன்னும் அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்குள் அநேகர், அவரையே தம்முடைய அரசியல் முன்மாதிரியாகக் குறிப்பிடுகின்றனர். ஆனால், அஷ்ரபிடம் இருந்த சில முன்மாதிரிகளையாவது, நடைமுறையில் கடைப்பிடிக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளைக் கண்டுபிடிப்பது மிகச் சிரமமாகவே உள்ளது.   

மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் தனித்துவ அடையாள அரசியலை, மக்கள் மயப்படுத்தினார். பின்னர், இணக்க அரசியல் மூலம், சிலவற்றைச் சாதித்தார். ஆனால், இன்று அவரால் உருவாக்கப்பட்ட கட்சியும் அவரது சிஷ்யர்களின் அரசியலும் அவ்விதம் பயணிக்கின்றதா என்று பார்த்தால், ‘இல்லை’ என்றுதான் சொல்ல வேண்டும்.   

‘தனித்துவம்’ என்னவென்று தெரியாமல், அதை முற்றாக, முஸ்லிம் அரசியல் இழந்து கொண்டிருக்கின்றது. அதற்குச் சமாந்தரமாக, அஷ்ரப் காட்டித் தந்த இணக்க அரசியல் பாணியிலிருந்து விடுபட்டு, ‘சோரம்போகும்’, ‘கலந்து கரைந்துபோகும்’ அரசியலில், அநேகமான முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.   

முஸ்லிம்களின் அடையாளத்தை அரசியல் ஊடாகவும் அரசியலையே ஒருவகையான அடையாளமாகவும் அஷ்ரப் முன்னிலைப்படுத்தினார் என்றால், இன்றிருக்கின்ற பலர், தனித்துவம், அடையாளம் பற்றியெல்லாம் இன்னும் கற்றுணர வேண்டியிருக்கின்றது.   

பிரத்தியேக விருப்பு வெறுப்புகள் கொண்ட தனித் தேசியமாக, இனக் குழுமமாக முஸ்லிம்களை அடையாளப்படுத்துவதும், முஸ்லிம் இளைஞர்கள், ஆயுதப் போராட்டத்தின் பக்கம் செல்லாமல் ஒன்றுதிரட்டி, நல்வழிப்படுத்துவதும், முஸ்லிம்களின் அபிலாஷைகளை அரசியல் ஊடாக அடைவதும், பெருந்தேசியத்தாலும் தமிழ்த் தேசியத்தாலும் மறுக்கப்படும் உரிமைகளுக்கு எதிராகக் குரல்கொடுப்பதும், வடக்கு, கிழக்கில் முஸ்லிம்களின் இருப்பை உறுதிப்படுத்துவதும், ஆரம்பத்தில் அஷ்ரபின் நோக்கங்களாக இருந்ததாகக் குறிப்பிட முடியும். அதற்காகத் தன்னால் இயன்றளவு, அவர் செயற்பட்டார் என்பதை மறுப்பதற்கில்லை.   

ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி ஆகிய தேசியக் கட்சிகளோடு முன்னனுபவங்களைப் பெற்றிருந்த அவர், தமிழர் அரசியலோடும் சிலகாலம் பயணித்தார். தமிழரசுக் கட்சி, முஸ்லிம்களின் விடயத்தில் கரிசனை காட்டிய காலத்தில், “அண்ணன் அமிர்தலிங்கம், தமிழீழத்தைப் பெற்றுத்தரவில்லை என்றால், தம்பி அஷ்ரப் பெற்றுத் தருவான்” என்ற தொனியில் உரையாற்றி இருந்தார்.   

ஆனால், தமிழ்த் தேசியம், தான் நினைத்தது போல் இல்லை என்ற நிலைப்பாட்டுக்கு அவர் வந்தபோது, முஸ்லிம்களை ஆயுதக் குழுக்கள் இலக்கு வைத்த போது, அதற்கெதிராகக் ‘கரிநாளை’ பிரகடனப்படுத்தவும், எதிர்ப்புத் தெரிவிக்கவும் அஷ்ரப் பின்வாங்கவில்லை.   

சமகாலத்தில், பெரும்பான்மையினச் சக்திகளோடு, மிகக் கவனமான உறவைக் கொண்டிருந்த மு.காவின் ஸ்தாபக தலைவர், பௌத்த சக்திகளின் கடும்போக்குக் கேள்விகளுக்கு, மென்போக்குடன் பதிலளித்து வந்தார். கடும்போக்குவாதத்தை மிகவும் நூதனமாகக் கையாண்டார் என்றும் சொல்லலாம். அந்தளவுக்குப் பக்குவப்பட்ட அரசியல் கோட்பாடு, அவரிடமிருந்தது.   

ஆனால், முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு பாதிப்பு, அநியாயம் நடக்கின்ற போது, அஷ்ரப் ஓடி ஒழிந்து கொள்ளும் கொள்கையைக் கொண்டிருக்கவில்லை. முஸ்லிம்களுக்கு ஏதாவது நடந்தால், அரசியலுக்காகவோ, சமூகச் சிந்தனை அடிப்படையிலோ அவர், அதற்கெதிராக எழுந்து நின்றார். தொலைபேசியை ‘ஓப்’ செய்து வைத்துவிட்டு, ஓடி ஒழித்துவிட்டதாக, இன்றிருக்கின்ற அரசியல்வாதிகள் மீது இருக்கும் குற்றச்சாட்டுகள், அவர் மீது இருந்ததில்லை.   

சந்திரிகா பண்டாரநாயகவின் ஆட்சியில் முதுகெலும்பாக இருந்த அவர், கடைசித் தருணத்தில் சந்திரிகாவையும் எதிர்த்தார். “ரணில் விக்கிரமசிங்கவோடு, பயணிக்க முடியாது” எனக் கூறியதாக, முன்னாள் அமைச்சர் ஒருவர், அடிக்கடி கூறுவதுண்டு.   

அந்தத் தைரியம், அவருக்கிருந்தது. ஆயினும், அவரை நினைத்து, அழுது வடிக்கின்ற இன்றைய அரசியல்வாதிகள், அவருடைய வழிகாட்டல்களைப் பின்பற்றியதாகத் தெரியவில்லை.   

வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டிருக்குமானால் முஸ்லிம்களுக்குத் தனி மாகாண அலகு வேண்டுமென்ற, எம்.ஐ.எம். மொஹிதீனின் கோட்பாட்டை, அஷ்ரப் பிரசித்தப்படுத்தி அதற்காகத் தொடர்ந்து குரல்கொடுத்தார்.   

அம்பாறை மாவட்டத்தை மய்யமாகக் கொண்டு, தென்கிழக்கு அலகாவது அமையப் பெற வேண்டும் என்று கோரி வந்தார். அத்துடன், 1960களில் அம்பாறை மாவட்டம் உருவானபோது, முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயத்துக்குப் பிராயச்சித்தமாக, கரையோர (கல்முனை) மாவட்டம் உருவாக வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.   

மிகக் குறிப்பாக, தக்க சமயத்தைப் பயன்படுத்தி, விகிதாசாரத் தேர்தல் முறையின் பிரதிநிதித்துவத்தைத் தெரிவு செய்வதற்கான வெட்டுப்புள்ளி மட்டத்தை ஐந்து சதவீதமாகக் குறைத்ததன் மூலம் சிறுபான்மை, சிறுகட்சிகள் தமது பிரதிநிதித்துவத்தை அதிகரித்துக் கொள்ள வழியை ஏற்படுத்தி, சாதனையை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.   

ஆனால், அப்படியான எந்த முன்னெடுப்புகளையும் ‘அஷ்ரபைப் பின்பற்றுகின்றோம்’ என்று கூறுவோர் மேற்கொள்வதைக் காண முடியவில்லை.   

ஒலுவிலில் தென்னந்தோட்டங்களாக இருந்த நிலப்பரப்பில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை நிறுவினார். ஒலுவிலில் வெளிச்சவீட்டை நிறுவி, ஒரு துறைமுகத்துக்கான அடித்தளத்தை இட்டார். (அது பின்னர், செயற்றிறன் அற்ற விதத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது.)  

பெரிய தகுதிகளையோ, பட்டங்களையோ மேற்கொண்டிராமல், தொழிலற்றுத் தேங்கிக் கிடந்தவர்களும் உள்ளடங்கலாக, பல நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு தொழில்வழங்கினார். தொழிற்பயிற்சி மய்யங்கள், சமூகத்துக்கு நன்மை பயக்கக் கூடிய பல அபிவிருத்திகளை, கிழக்குக்குக் கொண்டு வந்தார் என்பதை, யாரும் மறந்து விட முடியாது.  

ஆனால், இன்று அப்படிப்பட்ட பெரிய வேலைத்திட்டங்களை, இரண்டோர் அரசியல்வாதிகளைத் தவிர, வேறு எந்த சிஷ்யர்கள் மேற்கொள்கின்றனர்? அஷ்ரபை கொண்டாடும், அவருக்காக கண்ணீர்விடும், நினைவுக் கூட்டங்கள் நடத்தும், எத்தனை முஸ்லிம் அரசியல்வாதிகள், இவ்விதம் அபிவிருத்திகளைக் கொண்டு வருகின்றனர்.   

இன்றிருக்கின்ற சில அரசியல்வாதிகள், வியாபாரிகள் போல, பணம் பெற்றுக் கொண்டு, தொழில் கொடுத்தவராக, அஷ்ரபை யாரும் சொல்ல முடியாது.   

இன்றிருக்கின்ற சில தலைவர்களைப் போல, மக்களுக்குப் பொய் வாக்குறுதிகளைப் கொடுத்து ஏமாற்றியவரல்ல; மக்களைக் கண்டு ஓடியவரல்ல; மக்கள் சந்திப்புகளை நடத்தினால், தலைக்குமேல் வேலைவரும் என நினைத்துக் கொண்டு, கொழும்பில் முடங்கியவரும் அல்ல. ஆனால், இவ்விடயங்களில் இன்றைய அரசியல்வாதிகளில் நிலையைச் சொல்லத் தேவையில்லை.   

இன்று, முஸ்லிம் அரசியல்வாதிகள், எத்தனையோ வருட அனுபவம், தமக்கு இருக்கின்றது என்று சொல்கின்றார்கள். 30 வருட அனுபவம் கொண்ட அரசியல்வாதிகளும் 15 வருடங்களுக்கு மேலாக, நாடாளுமன்றத்தில் இருந்தவர்களும் இன்றிருக்கின்றார்கள்.   

ஆனால், இவர்கள் இன்று கொண்டாடுகின்ற அஷ்ரப், 11 வருடங்களே நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ அரசியலில் இருந்தார். இதில், ஆறு வருடங்களே அமைச்சராகப் பதவி வகித்தார்.  

அந்தக் குறுகிய காலப்பகுதியிலேயே, இந்தச் சேவைகளைச் செய்தார். அவற்றுடன், தற்போதைய அரசியல்வாதிகளை ஒப்பிட்டுப் பார்க்கையில்தான், அஷ்ரபின் கனதியும் இவர்களது வினைதிறனற்ற தன்மையும் புலப்படுகின்றது.   

அஷ்ரபைத் தமது பெருந்தலைவர் என்று சொன்னவர்கள், 2000ஆம் ஆண்டு, அவரது மரணம் இயற்கையானதா? செயற்கையானதா? என்பதைக் கூட, கண்டறிந்து சொல்லவில்லை என்பதில் இருந்து, அஷ்ரபின் சிஷ்யர்களின் திராணியற்ற போக்கு ஆரம்பமாகிறது.    

அந்தவகையில், மர்ஹூம் அஷ்ரப் காட்டித்தந்த அபிவிருத்தி அரசியலை முன்னெடுக்கவும் இல்லை; உரிமை அரசியலை வென்றெடுக்கவும் இல்லை என்பதை, அழுத்தமாகச் சொல்ல வேண்டியிருக்கின்றது.   

அண்மையில் நடைபெற்ற, அஷ்ரப் நினைவு நிகழ்வில் உரையாற்றிய அரசியல்வாதி ஒருவர், “அஷ்ரப் விட்டுச் சென்ற பணிகளை முன்னெடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.   

அஷ்ரபின் கொள்கைகளை நேசிக்கின்ற மக்களுக்கு, இதைக்கேட்டுச் சிரிப்பதா, அழுவதா எனத் தெரியவில்லை. ஏனென்றால், அஷ்ரப் விட்டுச் சென்ற பணிகளை, இவர்கள் இன்னும் ஆரம்பிக்கவில்லையோ என்ற வலுவான சந்தேகத்தை, இவ்வாறான பேச்சுகள் ஏற்படுத்துகின்றன.   

“கருத்து வேறுபாடுகள் எனும் காளான்கள் வந்து, உங்கள் புரிந்துணர்வைச் சீரழிக்கும். மிகவும் புத்திசாதுரியத்துடன் நடந்து கொள்ளுங்கள்” என்று அவர் தன் கவிதையூடாகச் சொல்லியிருந்தார்.   

ஆனால், முஸ்லிம் காங்கிரஸில் இருந்து, கருத்து வேறுபாடுகளோடு பலர் பிரிந்து சென்றுள்ளது மட்டுமன்றி, கட்சிக்குள்ளும் ஆயிரம் கருத்தொவ்வாமைகள் ஏற்பட்டிருக்கின்றன.   

அஷ்ரபின் அரசியல் வாரிசுகள், கருத்து வேறுபாடுகளால், அரசியல் ரீதியாகப் பிரிந்திருப்பதுடன் மக்களையும் கட்சி, பிரதேச வாதங்களால் துண்டாடி வைத்திருக்கின்றனர்.   

ஆக மொத்தத்தில், அஷ்ரப், அவரது கொள்கைகளில் அன்றிருந்த முதல்வரிசை ஆளுமைகள், கண்ட கனவை நிறைவேற்றும் பாதையில், முஸ்லிம்களின் அரசியல் 2000ஆம் ஆண்டுக்குப் பின்னர் பயணிக்கவில்லை.  

அஷ்ரபின் கொள்கை, கோட்பாடுகளை மறந்துவிட்டு, தனித்துவ அரசியல், மக்கள் நலன்சார் இணக்க அரசியல், பேரம்பேசும் ஆற்றல் போன்ற இலட்சணங்கள் இல்லாமல், அவருடைய சிஷ்யர்கள் போய்க் கொண்டிருக்கின்றார்கள். அவரை நினைவு கூர்ந்தால் மட்டும் போதும் என்று நினைக்கின்றனர்.  

இந்நிலைமை மாற வேண்டும். அஷ்ரபை பின்பற்றுவது என்றால், அவரைக் கொண்டாடுவது என்றால், அவருடைய நல்ல அரசியல் முன்மாதிரிகளை, கொள்கைகளை எடுத்து நடக்க வேண்டும் என்பதாகும்.   
அவ்வாறாக, அவரது அடியொற்றிச் செயற்படுகின்ற முஸ்லிம் தலைமைகள், அரசியல்வாதிகளுக்கே ‘நாங்கள் அஷ்ரபின் சிஷ்யர்கள்’ என்று மார்தட்டுவதற்கான தகுதியும் அவரை நினைவுகூர்வதற்கான அருகதையும் இருக்கின்றது என்பதே உண்மை.   


கொள்கையை மறந்துவிட்டு அஷ்ரபை நினைவுகூர்தல்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.