சவூதிக்கு எதிரான ஐ.அமெரிக்காவின் நகர்வு

- ஜனகன் முத்துக்குமார்

ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலை தொடர்பில், சவூதி அரேபியாவுக்கு வெள்ளை மாளிகையால் வழங்கப்படும் ஆதரவைக் கேள்விக்குட்படுத்தும் வகையில், ஐக்கிய அமெரிக்க செனட் சபை நிறைவேற்றவிருக்கும் தீர்மானம், முக்கியமானதாக அமையவுள்ளது. சவூதியின் அண்மைய கொள்கைகள், மத்திய கிழக்குத் தொடர்பான ஐ.அமெரிக்காவின் நலன்களுக்குப் பாதகமாக இருக்குமாயினும், ஐ.அமெரிக்க தார்ப்பரியங்களுக்குக் குறித்த கொள்கைகள் விரோதமானமை என்ற அடிப்படையில், ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொலைசெய்யப்பட்டதில், சவூதியின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் “உடந்தையாக” இருந்தார் எனக் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளமை, மத்திய கிழக்கில் ஐ.அமெரிக்காவின் ஆதிக்கத்தை, வேறு ஒரு திசைக்குத் திருப்புவதிலும், அதன் அடிப்படையில் சவூதி தொடர்ச்சியாக யேமனில் நடாத்தும் யுத்தத்தில், ஐ.அமெரிக்கா பக்கச்சார்பு நிலையொன்றை எடுக்கவேண்டிய நிலைக்கு வருகின்றமையையுமே காட்டுகின்றது.

குறித்த 6 பக்கத் தீர்மானம், இது தவிர, ஊடகவியலாளர்கள் ஒடுக்குமுறை, யேமனில் மேற்கொள்ளப்படும் யுத்தம், மாற்றுக் கொள்கையாளர்களைச் சிறைப்படுத்தல், சவூதியில் மனித உரிமைகளைப் பெருமளவு வரையறைசெய்துள்ளமை என, பல நிரல்களில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு தீர்மானமாக -- வெளிப்படையாகக் கூறின், ஐ.அமெரிக்காவுக்கும் சவூதிக்கும் இடையிலான நட்புறவைத் தகர்க்கக்கூடிய ஒரு வெளிப்பாடாகவே -- பார்க்கப்படுகின்றது. இத்தீர்மானம், இளவரசர் பின் சல்மானின் கொள்கைகளை மட்டுமல்லாமல், அவரது நெருங்கிய நட்பு நாடான ஐக்கிய அரபு இராச்சியத்தின் (கஷோக்ஜி கொலைக்குப் பின்னர், சவூதியின் இளம் தலைவர் விஜயம் செய்த முதல் நாடு, ஐக்கிய அரபு இராச்சியம் என்பது குறிப்பிடத்தக்கது) இளவரசர் மொஹமட் பின் ஸாயீடினின் அரசியல் நிரலுக்கு எதிராக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது. ஐ.அமெரிக்காவின் குறித்த இவ்வாறான நகர்வுக்கு காரணம் என்ன என்பது பற்றியே இப்பத்தி ஆராய்கின்றது.

குறித்த நகர்வு, நான்கு விடயங்களை அடிப்படையாகக் கொண்டது. முதலாவது, சவூதி - ஐ.அமெரிக்க உறவானது, நீண்ட வரலாறு, பிராந்திய மூலோபாய நலன்கள், அரசியல் பிணைப்புகள், எண்ணெய், ஆயுத வியாபாரம் என, பலதரப்பட்ட வகையில் இணங்கிச்செல்வதாகும். அதனடிப்படையில் பார்க்கப்போனால், குறித்த இத்தீர்மானம், தனியாகவே கஷோக்ஜியின் கொலையுடன் மட்டும் சம்பந்தப்பட்டது என்பது, சவூதி - ஐ.அமெரிக்க உறவைப் பொறுத்தவை நம்பமுடியாத ஒன்று.

இரண்டாவது, அண்மையிலேயே சவூதி - கனடா முரண்பாடுகள் ஏற்பட்டு, கனேடியத் தூதுவரை, சவூதி தனது நாட்டிலிருந்து மனிதவுரிமை சம்பந்தமாக கனேடிய அரசாங்கம் சவூதிக்கு எதிராக வெளியிட்ட கூற்றைக் கண்டிக்கும் முகமாக வெளியேற்றியிருந்தது. அது தொடர்பில் இப்பத்தியாளர் முன்னொரு பத்தியில் குறிப்பிடுகையில், “சவூதி - கனடா உறவுகள், எப்போதும் குறிப்பிடத்தக்க அளவில் பேசப்படவில்லை. மத்திய கிழக்கின் பாதுகாப்புக் கட்டமைப்பில் நேட்டோவின் உறுப்புரிமையாகச் செயற்படும் கனடா, அதைத் தாண்டி தனிப்பட்டளவில் சவூதியுடன் எந்தவித பாதுகாப்பு உடன்படிக்கைகளைக் கொண்டிருக்காமை, ஆயுத உற்பத்தி, யேமன் மீதான போரில் சவூதிக்கு நேரடியாக உதவுவதற்கு கனடா விருப்பம் காட்டாதிருந்தமை, இது தவிர கனடா அதன் தளத்தில் இருந்து ஒரு போதும் சவூதிக்கு எதிராகப் பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொள்ளாது என சவூதி கருதுவதுமே காரணமாகும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

மூன்றாவதாக, சவூதி அரேபிய அரசாங்கத்தின் ஆதரவான யேமன் அரசாங்கத்துக்கும் ஹூதி போராளிகளுக்கிடையில் இடையே, போரை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு சுவீடனில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள், சவூதியின்  கைகளையும் மீறி, மிக உடனடியான சாதகமானதும், அதன் காரணமாக சவூதியின் பிராந்தியத் தலைமைத்துவம் தொடர்பில் சவூதியின் நிலைப்பாடு தகர்க்கப்பட்டுள்ளது.

நான்காவதாக, இளவரசர் மொஹமட்டின் சில நட்பு நாடுகளின் மத்தியில், குறித்த தீர்மானம் கோபத்தைத் தூண்டக்கூடிய ஒன்றாக காணப்பட்டாலும், குறித்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அல்லது செயற்படுத்தப்பட்டால், குறிப்பாக அது, ஐக்கிய அரபு இராச்சியத்தை, சவூதியின் நேரடி நட்பு வட்டத்திலிருந்து பிரிக்கவே செய்யும் என்பதுடன், அது ஐக்கிய அரபு இராச்சிய அடிப்படை மூலோபாயங்களை மறுபரிசீலனை செய்ய ஏதுவாய் இருக்கும். அது, அரேபிய, மத்திய கிழக்கின் இஸ்லாமிய நவீனத்துவத்தின் ஒரு வழிகாட்டியாக ஐக்கிய அரபு இராச்சியத்தை நிலைநிறுத்தவும், சவூதியின் இறுக்கமான கொள்கைகளில் இருந்து பிராந்திய நாடுகளை விடுவிக்கவும் உதவும், முன்னிரலொன்றாக அமையும். இவ்வாதத்தைப் பிரதிபலிப்பதாவே, ஐக்கிய அரபு இராச்சிய இளவரசர் மொஹமட்டின் நெருங்கிய நண்பரும் ஐ.அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு இராச்சியத் தூதுவருமான யூசுப் அல்-ஒடிபா, இளவரசருக்கு அனுப்பிய ஒரு (வெளிக்கசிந்த) மின்னஞ்சலில், பின்வருமாறு தெரிவித்திருந்திருந்தார்: “பிராந்திய அரசியலில், சவூதியின் தலைமைத்துவம் தொடர்ச்சியாக இருக்கும் என நான் நினைக்கவில்லை” எனத் தெரிவித்ததோடு, “இது, நீண்ட காலத்தில் சவூதி அரேபியா மீது நாங்கள் நல்லதொரு செல்வாக்குடன் இருக்கவும், சவூதியின் மூலோபாய விடயங்களில் நாங்கள் செல்வாக்குச் செலுத்தக்கூடியதாய் இருக்கும்” எனக் குறிப்பிட்டிருந்தமை, பிராந்தியத்தில் சவூதியில் செல்வாக்குக்கு எதிராக மாற்றுத் தலைமை ஒன்று உருவாகுவதற்கு நிலைமைகள் உண்டு என்பதையே காட்டுகின்றது.

இவற்றின் அடிப்படையில், மேலும் மேற்கத்தேய நாடுகள் (குறிப்பாக கனடா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஜேர்மன்) வெளிப்படையாகவே சவூதியை, கஷோக்ஜியின் மரணம் தொடர்பான விடயங்களில் கைவிட்ட நிலையில், ஐ.அமெரிக்க செனட் சபை, தீர்மானத்தை கொண்டுவந்துள்ளது. இது முதலாவதாக, ஐ.அமெரிக்க நிறைவேற்றுத்துறையை குறுகிய கால நலன்களில் அடிப்படையில், இரு தரப்பு வர்த்தக உடன்படிக்கையில் சவூதியைத் தளர்வு நிலைக்கு கொண்டுவருவதன் மூலம், வர்த்தக இலாபத்தை மீட்டல், மேலும், சவூதியைத் தொடர்ச்சியாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் என்பதற்கான ஓர் உத்தியாகப் பார்க்கப்படுகின்றது.

இரண்டாவதாக, சவூதி, தொடர்ச்சியாகவே தனது இறுக்கமான ஜனநாயகத்துக்கு எதிரான தலைமைத்துவம், மனித உரிமைகளை மறுத்தல் என்பதை நடைமுறைப்படுத்துமாயின், ஐ.அமெரிக்காவும் மேற்கத்தேய நாடுகளும், வேறொரு பிராந்திய நாட்டுடன் நட்பாக செயற்படவேண்டிய அவசியம் ஏற்படும் என்பதைச் சவூதிக்கு சுட்டிக்காட்டுதல் (அதன் காரணமாகவே குறித்த செனட் நடவடிக்கை, சட்டவலுவற்ற ஒரு தீர்மானமாக நிறைவேற்றப்படுகிறது).

மூன்றாவதாக, ஐக்கிய அரபு இராச்சியத்தை, தனது சொந்த மூலோபாய நகர்வுகளை மேற்கொள்ளச் சுதந்திரமளித்தல் - அதன் மூலம், சவூதிக்கு அடுத்ததாக இன்னொரு நாட்டை (குறிப்பாக சவூதிக்கு ஆதரவான ஒரு நாட்டை) தனது பிராந்திய நலன்களுக்குப் பயன்படுத்தல்.

நான்கு, மேற்கத்தேய நாடுகள் வரிசையில், ஐ.அமெரிக்கா தனியாக பிராந்திய நலன்களுக்காக உலக மனித உரிமையையே அடகுவைக்கின்றது என்ற விமர்சனத்திலிருந்து தன்னைப் பாதுகாத்தல் (யேமனில் மேற்கொள்ளப்படும் போரில், சவூதியின் நகர்வுகளில் ஐ.அமெரிக்கா கண்மூடித்தனமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது) என, பல காரணிகளின் அடிப்படையிலேயே குறித்த தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது.

ஆகவே, வெளிப்படையாக இது ஐ.அமெரிக்கா தனது மத்திய கிழக்கு பிராந்திய நலன்களுக்காக, மூலோபாய நட்பு நாடான சவூதிக்கு எதிராக தீர்மானம் மேற்கொள்ளுதல், அதன் வெளிவிவாகார கொள்கைக்கு முரணாக அமையும் என தென்பட்டாலும், அதன் உள்ளார்ந்தம், மிகவும் கணிக்கப்பட்ட செயற்பாடே என்பதே, ஆழமாக நோக்கப்படவேண்டியதாகும்.


சவூதிக்கு எதிரான ஐ.அமெரிக்காவின் நகர்வு

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.