2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சவூதி அரேபியாவின் யுத்தமும் பிரித்தானியாவின் பொருளாதாரமும்

Editorial   / 2018 மார்ச் 19 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஜனகன் முத்துக்குமார்

சவூதி இளவரசர் மொஹமட் பின் சல்மானின் பிரித்தானியாவுக்கான அண்மையில் விஜயம், பல்வேறு வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. இராஜதந்திர, வர்த்தக உறவுகளைத் தவிர, இங்கிலாந்திடம் இருந்து 48 டைஃபூன் போர் விமானங்கள் வாங்குவதற்கு, ஆரம்ப ஒப்பந்தமொன்றில் சல்மான் கையெழுத்திட்டிருந்தார்.

குறித்த ஒப்பந்தமானது, மேற்கத்தேய ஆதரவுடைய ஆயுத உற்பத்தியாளர்கள், பாரசீக வளைகுடாவின் அரேபியப் பிராந்திய ஆயுதச் சந்தைகளைக் கைப்பற்றப் போராடும் நிலைமையைக் காட்டுவதுடன், இது மேலதிகமாக ஏற்கனவே சிக்கல் நிலையில் உள்ள அரேபிய, வடஆபிரிக்க போரியல் நிகழ்வுகளுக்குத் தீனியிடுவதாகவே பார்க்கப்படுகின்றது.

ஒரு புறத்தில் முடிவுக்கு வராத யேமனியப் போர், அதன் அடிப்படையில் சவூதி அரேபியாவுக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் ஆயுதத் தளவாடங்களை விற்பனை செய்வதற்கான இன்னுமோர் இராஜதந்திர உந்துதலாகவே குறித்த ஒப்பந்தம் பார்க்கப்படுகின்றது. இந்தக் காரணத்துக்காக, சர்வதேச மன்னிப்புச் சபை, சவூதி - பிரித்தானிய ஆயுத ஒப்பந்தத்தைக் கண்டித்ததுடன், அது யேமனில் மனிதாபிமான நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், யுத்தத்தை நிறுத்தும் முயற்சிக்கு எதிரான செயற்பாடாகும் எனவும் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் எதிர்க்கட்சிகள் மற்றும் சில மனிதாபிமான அமைப்புகளும் ஒப்பந்தத்தைக் கண்டனம் செய்துள்ளன. பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சி, சவூதி அரேபியாவுடன் 140 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் மதிப்பில் பிரித்தானிய அரசாங்கம், மேலதிகமான மனிதாபிமான உதவி வழங்கும் செயற்பாடானது, பிரித்தானிய அரசாங்கத்தின் கேலியானதொரு செயற்பாடாகும் என வர்ணித்ததுடன், இது மனிதாபிமான உதவியை வழங்குவதில் உலகளாவிய ரீதியில் முன்னணி வகிக்கும் பிரித்தானியாவின் புகழை மழுங்கடிக்கச் செய்யும் நடவடிக்கை எனவும் விமர்சித்துள்ளது.

ஆனால் பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சர், இந்த ஒப்பந்தத்தை ஆதரித்ததுடன், சவூதி அரேபியாவின் இளவரசர் இலண்டனுக்கு விஜயம் செய்திருந்தமை, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் புதியதொரு பக்கத்தைத் திறந்துள்ளது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலதிகமாக, இரு நாடுகளின் தலைவர்களினதும் கூட்டு அறிக்கையில், சவூதி அரேபியாவுக்கு, பிரித்தானிய ஆதரவு என்றைக்கும் உள்ளமை மீள வலியுறுத்தப்பட்டதுடன், சவூதி அரேபியா, மத்திய கிழக்கில் பிரித்தானியாவின் மூலோபாய நட்பு நாடுகளுள் ஒன்று எனவும் குறிப்பிடப்பட்டது. அத்தோடு, பாரசீக வளைகுடா ஒத்துழைப்புக் குழுவின் திட்டம், அதன் உத்திகள் அடிப்படையிலும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைத் தீர்மானம் 2,216 ஆகியவற்றின் அடிப்படையில், யேமன் நெருக்கடியின் அரசியல் தீர்வை இரு தரப்பும் வலியுறுத்தியதுடன், அத்தகைய தீர்வு, யேமனின் பாதுகாப்பையும் ஒருமைப்பாட்டையும் உத்தரவாதம் செய்ய உதவும் எனவும் குறிப்பிட்டிருந்தது.

உண்மையில், யேமனில் தற்போதுள்ள நெருக்கடிகளுக்கு, அரசியல் தீர்வுக்கான இந்தக் கூட்டறிக்கை வலியுறுத்துவது ஒரு புறமிருக்க, சவூதி அரேபியா, யேமனைத் தாக்குவதற்கு, மேற்கத்தேய ஆயுதங்களைத் தொடர்ந்தும் பயன்படுத்துகின்ற செயலானது, அபத்தமானது.

அத்தோடு, குறித்த இந்த யுத்தத்தில், சவூதி அரேபியா மேற்கொண்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானியா அமைதியாக இருப்பது, அதிகமாகக் கவனிக்கப்படுகிறது. மேலும், சவூதி அரேபியாவின் பிராந்திய வல்லரசாண்மைக்கு ஆதரவாக, நீண்டகால இணக்கப்பாட்டுடன் இரு நாடுகளின் கூட்டுச் சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதில் சவூதி அரேபியாவுக்கு அதன் அனுபவங்களை வழங்குவதற்கான பிரித்தானியாவின் உறுதிப்பாடு அமைந்துள்ளமையும், யேமன் யுத்த நிலைமையானது இப்போதைக்கு முடிவை எட்டுவதாக இல்லை என்பதையே காட்டுகின்றது.

இவற்றின் பின்னணியில் தான், பிரித்தானியா - சவூதி அரேபிய மூலோபாய மற்றும் இராணுவ ஒத்துழைப்பு மற்றும் ஆயுத ஒப்பந்தங்கள் என்பனவற்றுக்கான தேவை என்ன என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்.

அடிப்படையில், பிரித்தானியாவின் பாரம்பரிய நட்பு நாடான சவூதி அரேபியா, அந்நாட்டுடன் பல்வேறு வகையான உறவுகளைக் கொண்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் வளர்ச்சியின் தொடக்கமானது, நெருக்கமான பாதுகாப்பு, இராணுவ ஒத்துழைப்பைச் சுற்றி அமைந்துள்ளது. மூலோபாயக் கொள்கை வகுப்பு, இராணுவ ஒத்துழைப்பு, பயங்கரவாதத்துக்கு எதிரான இணைந்த போரியல் நடவடிக்கைகள், ஈரானுக்கு எதிரான இராணுவ காய் நகர்த்தல்களை மேற்கொள்ளுதலில் பிரித்தானியாவின் உலக அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளுதல் என்பனவற்றுக்கு மேலதிகமாக, சவூதி அரேபியா, பிரித்தானியாவுடன் தொடர்ச்சியாக நீடித்து நிற்கக்கூடிய பொருளாதார உறவுகளைப் பேணுதல் தொடர்பில் கவனம் செலுத்துகின்றது.

மறுபுறம், பிரித்தானியாவைப் பொறுத்தவரை, அது ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும் நிலையில், அதன் பொருளாதாரத்தைத் தக்கவைப்பதற்காக திடமானதொரு நட்பு, மற்றும் பொருளாதார வளர்ச்சியுடைய சந்தையில் முதலீடு செய்யவே விரும்புகின்றது. அதன் தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்யும் வகையில் உள்ள நாடுகளில், குறிப்பாக மத்திய கிழக்கு வளைகுடாவில், சவூதி அரேபியா அதன் தெரிவில் முன்னுரிமையில் உள்ளமை வெளிப்படையானதாகும்.

இதற்கிடையில், சவூதி அரேபியாவுக்குத் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் ஆயுதங்கள் விற்பனையானது, பிரித்தானிய பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி பிரித்தானியாவுக்குள் பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை வழங்குகின்றது. மேலும், சவூதி அரேபிய இளவரசரின் மனித உரிமை சார்ந்த உள்நாட்டுச் சீர்திருத்தங்கள், சவூதி அரேபியாவுக்குள் வெளிப்படையானதொரு கலாசார சூழ்நிலையை உருவாக்கிய இந்நிலையில், சவூதி அரேபியாவுடன் உறவுகளை வளர்க்க இலண்டன் ஊக்கம் கொண்டுள்ளமை, ஆச்சரியப்படக்கூடிய ஒன்று கிடையாது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .