தீர்மானம் உங்கள் கையில்

  
வாக்களிப்பு தினத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றோம். அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் உள்ளூராட்சி சபை வேட்பாளர்களின் பரப்புரைகளால் செவிகள் நிரம்பியிருக்கின்ற இச்சூழ்நிலையில், பெரும்பாலான மக்கள் தாம் யாருக்கு வாக்களிப்பது என்பதைத் தீர்மானித்து விட்டனர்.   

இன்னும் சொற்ப அளவான மக்கள், வாக்களிப்பது யாருக்கு என்பதைத் தீர்மானிக்க முடியாத அலைக்கழியும் அல்லது மிதக்கும் வாக்காளர்களாக இருக்கின்றனர். வாக்களிப்பது என்பது, நமது அடிப்படை உரிமை என்பதை முதலில் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த உரிமையை, நமது முன்னைய பரம்பரையினர் நமக்கு பெற்றுத் தந்ததால், சில வேளைகளில் இதன் பெறுமதி நமக்கு விளங்குவதில்லை.   

நமது வாக்களிப்பு சதவீதங்கள் குறைவாக இருப்பதற்கு அதுவே காரணம் எனலாம். ஆனால், இன்னும் உலகில் எங்கோ ஒரு மூலையில் இருக்கின்ற எத்தனையோ இனக் குழுமங்கள் வாக்களிக்கும் உரிமை கேட்டுப் போராடிக் கொண்டுதான் இருக்கின்றன என்பதை நாம் நினைவில் கொண்டு, அதன் பெறுமதியுணர்ந்து வாக்களிக்க வேண்டும்.  

பொதுவாக எல்லாத் தேர்தல்களிலும் மிதப்புநிலை வாக்காளர்களே எந்தக் கட்சி வெற்றிபெறும் என்பதைத் தீர்மானிக்கும் என்று சொல்வார்கள். ஏனென்றால், ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாக்காளர்களைக் கொண்ட ஒரு வாக்குவங்கி இருக்கும். அவர்கள் அந்தந்தக் கட்சிக்கே வாக்களிப்பார்கள் என்ற அடிப்படையில், யாருக்கு வாக்களிப்பது என்ற தீர்மானத்தை எடுக்காத வாக்காளர்கள், அதாவது அலைபாயும் மனதுடனான வாக்காளர்களே இறுதிநேர வெற்றியை உறுதி செய்வார்கள் என்பதே இதன் உட்கிடையான அர்த்தமாகும்.   

அது உண்மைதான். ஆனால், இந்த முறை தேர்தலில் எல்லாக் கட்சிகளின் வாக்குவங்கிகளிலும் ஒரு மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவே தெரிகின்றது. பெரும்பான்மைக் கட்சிகள் முதற்கொண்டு, தமிழ்க் கட்சிகள் தொட்டு முஸ்லிம் கட்சிகள் வரை எல்லோருடைய வாக்காளர் தளங்களிலும் சிறிய, பெரிய அதிகரிப்போ வீழ்ச்சியோ ஏற்பட்டிருப்பதாகவே தெரிகின்றது.   

எனவே, இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வழக்கமான நிலைப்பாடுகளை மீள்பரிசீலனை செய்கின்ற வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனக் கருதலாம்.   

இவர்களையும் ஒருவிதத்தில் தளம்பல்நிலை வாக்காளர்கள் என்றும் அழைக்க முடியும். இந்தநிலையை முஸ்லிம் சமூகத்தில் பரவலாக அவதானிக்க முடிகின்றது.   

என்றுமில்லாதவாறு முஸ்லிம் அரசியல் அரங்கில் ஏற்பட்டிருக்கின்ற களநிலை மாற்றங்களும் புத்திசாலித்தனமான அல்லது பிற்போக்குத் தனமான தேர்தல் வியூகங்களும் அந்தந்த கட்சிகளின் ஆஸ்தான வாக்காளர்களின் தீர்மானங்களில் மாற்றங்களை உண்டுபண்ணியிருப்பதாக ஊகிக்க முடிகின்றது.   

ஆகவே, முஸ்லிம் மக்கள் தாம் யாருக்கு, எந்தக் கட்சிக்கு, எந்தத் தலைவரின் அணிக்கு, எப்படியான வேட்பாளருக்கு இம்முறை வாக்களிக்கப் போகின்றோம் என்பதைத் தீர்மானிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கின்றார்கள்.   

முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில், கட்சிகளை வாழவைப்பதற்கும் தலைவர்களை, அரசியல்வாதிகளை வாழ வைப்பதற்கும் பிரதேச அரசியல்வாதிகளுக்குப் பதவி கொடுத்து அழகுபார்ப்பதற்குமாக வாக்களித்தது போல இம்முறையும் இனியும் வாக்களிக்க முடியாது என்பதை மனதில் ஆழமாகப் பதித்து வைத்துக் கொள்ளவேண்டும்.   

இது கட்சிகளையோ தலைவர்களையோ தக்கவைப்பதற்கான தேர்தல் அல்ல என்பதையும் மற்றையவற்றை இழந்து வாக்களிக்கும் விதத்தில் தலைவர்களும் கட்சிகளும் மக்களுக்கு உண்மைக்குண்மையாக இல்லை என்பதையும் அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.   

மேற்சொன்ன எந்தக் காரணத்துக்காகவும் கண்மூடித்தனமாக, முன்பின் யோசிக்காமல் வாக்களித்து ஒரு பிழையான உள்ளூராட்சி சபை உறுப்பினரை, செயலாற்றல் இல்லாத சபையை உருவாக்கி விடக்கூடாது.   

மக்களாகிய நீங்கள், ஒரு திருடனை, பெண் சபலப் புத்திக்காரனை, மோசடிக்காரனை, சண்டியனை, பணத்தில் மட்டும் குறியாக இருப்பவனை, வியாபார புத்தியுள்ளவனை .... உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதியாகத் தெரிவு செய்வீர்கள் என்றால், அது அவர்கள் எதிர்காலத்தில் நாடாளுமன்றம் செல்வது வரைக்குமான அவர்களுடைய அரசியல் பயணத்துக்கு நீங்கள் வழங்குகின்ற ஆதரவுச் சமிக்கை என்பதை மறந்துவிட வேண்டாம்.  

அதன் அடிப்படையில் இந்த உள்ளூராட்சித் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும், யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதை அவர்களுடைய கடந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் வைத்து கணிப்பிடுங்கள். மக்களுடைய எதிர்கால நலத்துடன் அது ஒத்துப்போனால் மட்டும் நீங்கள் வாக்களிக்க வேண்டும்.   

மதுப் பழக்கமுள்ளவர்கள் ஏனைய போதை வஸ்துகளை உபயோகிப்போர் என்றோ அல்லது அதனது விற்பனையுடன் தொடர்புபட்டவர்கள் என்றோ பரவலாக அறியப்பட்டவர்கள் நிறையப்பேர் இந்தமுறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களமிறங்கியுள்ளதாக ‘கபே’ போன்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன. எனவே, நாம் அவ்வாறானவர்களுக்கு வாக்களித்து, அதன்மூலம் அப்பேற்பட்டவர்களுக்கு அரசியல் அதிகாரத்தையும் கொடுத்துவிடக் கூடாது.   

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய அல்லது ஊருக்குள் கெட்டவர்கள் என்று பெயர் எடுத்த பல வேட்பாளர்கள் இத்தேர்தலில் பூசி மினுக்கிக் கொண்டு மக்கள் மன்றத்துக்கு வந்திருக்கின்றார்கள். அவ்வாறானவர்களுக்கு வாக்களிக்கத் தேவையில்லை. அது, குற்றத்துக்கு முஸ்லிம் மக்கள் ஆதரவளிப்பதற்கு சமமானதாக அமையும் என்பதை மறந்துவிடக் கூடாது.   

குடும்ப ஆட்சியென்பது என்னவென்று இலங்கையருக்கு நல்ல அனுபவம் இருக்கின்றது. குறிப்பாக, அந்த ஆட்சிக்காலத்தில் மிகவும் நெருக்குவாரப்படுத்தப்பட்ட ஒரு சமூகம் என்ற அடிப்படையில் இலங்கை முஸ்லிம்கள் குடும்ப ஆட்சியை வெறுக்கின்றனர்.   

இவ்வாறிருக்க, எல்லா முஸ்லிம் கட்சிகளின் சார்பிலும் குடும்ப வேட்பாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. நெருங்கிய குடும்பத்தினரான மகன், மைத்துனன், மாமா தொடங்கி தூரத்து உறவினர் வரை ஒரு குடும்பத்திலிருந்து பலர் போட்டியிடுவதைக் காண முடிகின்றது.  

இது, அப்பிரதேசத்தில் அந்தக் குடும்பங்கள்தான் ஆள்வதற்குச் சரியானது என்ற மாயைத் தோற்றத்தை ஏற்படுத்துகின்ற முயற்சியாகும். அத்துடன் ஊரில் வேறு ஆள் இல்லை என்ற தோற்றப்பாட்டையும் ஏற்படுத்துகின்றது. எனவே, இவ்வாறான வேட்பாளர்களுக்கு வாக்களித்தால், ஒட்டுமொத்த ஊரின் ஜனநாயக உரிமையையும் அதன்வழிவந்த ஆணையையும் இரண்டு மூன்று குடும்பங்களின் கையில் கொடுப்பது போலாகிவிடலாம்.   

அத்துடன் எதிர்காலத்தில் அப்பகுதியில் அசைக்க முடியாத அரசியல் சக்தியாகவும் புதியவர்களை உள்வாங்காத கலாசாரத்தை பின்பற்றுபவர்களாகவும் அவர்கள் இருப்பார்கள். எனவே, இப்படியானவர்களுக்கு வாக்களிக்க முன், யோசிக்க வேண்டும்.  

அதிக கடன் சுமையோடு இருப்பவர்களுக்கு வாக்களிக்கத் தேவையில்லை என்ற ஒரு நிலைப்பாடு இப்போது முன்வைக்கப்படுகின்றது. உண்மைதான், அரசியலை நல்லதாகவும் செய்ய முடியும் தவறாகவும் பயன்படுத்த முடியும்.   

இவ்வாறிருக்கையில், கடன் சுமையோடு வருகின்றவர்கள் மக்கள் பணத்திலேயே கை வைப்பார். கொந்தராத்துகளில் தரகுக் கூலி பெற்றும், மக்களுக்கு வரும் அபிவிருத்திகளை முறையற்ற விதத்தில் மேற்கொண்டும் பணம் உழைப்பார்கள். அதை வைத்துத் தனது கடனை அடைக்க முனைவார்கள். 

கடன்காரர் என்ற அவர்மீதான பார்வை நீங்குவதற்காக, ஆடம்பரமாக வாழ்வதற்காகவும் உள்ளூராட்சி உறுப்புரிமையைப் பயன்படுத்துவார் என்ற அடிப்படையில் அவர்களுக்கு முஸ்லிம்கள் வாக்களிக்கக் கூடாது.   

முஸ்லிம் அரசியலில் வாக்குறுதி தந்து ஏமாற்றுகின்ற, மக்களை ஏமாற்றுகின்ற, மக்களுக்குச் சேவை செய்வதாக உலகுக்குக் காட்டிக் கொண்டு, தமது வங்கிக் கணக்குகளை மட்டும் நிரப்பிக் கொண்டிருக்கின்ற தேசிய, பிராந்திய அரசியல்வாதிகளை நாமறிவோம்.   

அவர்களைப் போலவே, இப்போது உள்ளூராட்சி சபைகளுக்கும் சிலர் புறப்பட்டு வந்திருக்கின்றார்கள். அவ்வாறானவர்களுக்கும் மக்கள் நலனுக்கும் தொடர்பே இல்லை என்பதை மக்கள் அறிவார்கள். எனவே அவர்களுக்கு அறவே வாக்களிக்கத் தேவையில்லை.   

இன்னும் கொஞ்சப் பேர் வந்திருக்கின்றார்கள். அவர்களைப் பார்த்தால் என்ன சொல்வது என்று தெரியவில்லை. இதுவரை முஸ்லிம்களுக்கு உள்ளூரில் பிரச்சினைகள் வந்தபோது அவர்கள் அது பற்றிப் பேசியவர்களும் இல்லை. வீதியால் செல்கின்றபோது, ஒரு பொதுஇடத்தில் சைக்கிளை, வாகனத்தை நிறுத்தி பத்து நிமிடம் சமூகத்துக்காகப் பேசி ஏதாவது காரியமாற்றியவர்களும் இல்லை. அதுமட்டுமல்ல, பக்கத்து வீட்டுக் காரர்களிடம் கூடச் சிரித்துப் பேசாதவர்கள் கூட, இன்று மக்கள் பிரதிநிதி என்ற கனவுகளோடு மேடைக்கு வந்திருக்கின்றார்கள். அவர்களுக்கு வாக்களிக்க வேண்டிய கடமையில்லை. அவர்கள் வந்தால், அடுத்த ஐந்து வருடங்களுக்கு மக்களுடன் நல்லுறவாடிவிட்டு, அடுத்த முறை வாருங்கள் என்று சொல்லி அனுப்ப வேண்டும் போலுள்ளது.   

யாரோ பெரிய புள்ளி ஒருவரின் செல்வாக்குடனோ அல்லது பெரிய குடும்பத்தில் இருந்து வருகின்றவர்கள் என்ற அடைமொழியுடனோ சிலர் தேர்தல் களத்தில் உலவித் திரிவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. தமது கையில் எந்தச் சரக்கும் இல்லாமல் யாரையோ, எதையோ நம்பித் தேர்தல் கேட்க வந்திருக்கும் இவர்கள், மக்கள் பிரதிநிதியாவதற்கான தார்மீக தகுதியற்றவர்கள் என்ற அடிப்படையில், அவர்களுக்கு வாக்களிப்பதில் இருந்து தவிர்ந்திருக்க வேண்டும்.  

இதேவேளை, அரசியலைப் பற்றியோ முஸ்லிம்களின் பிரச்சினை பற்றியோ தேர்தல் முறைமை பற்றியோ அல்லது தமது வட்டாரம், சபை பற்றியோ எதுவும் அறியாத கத்துக்குட்டி அரசியல்வாதிகளும் போஸ்டர்களில் அரும்பு மீசைகளுடன் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.   

இவ்வாறானவர்கள், அரசியல் பற்றிய கவர்ச்சியாலும் உந்துதலாலும் வருவார்கள். எனவே, இவர்கள் உங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு தகுதியானவர்களாக இல்லாத பட்சத்தில் அவர்களுக்கு வாக்களித்து ஏமாற வேண்டாம்.   

உங்கள் வாக்குகள் என்பது மிகப் பெரிய ஆயுதமும் சக்தியுமாகும். நீங்கள் கட்டாயமாக வாக்களிப்பதுடன் அந்த வாக்குகளை மிகப் பொருத்தமான ஒரு வேட்பாளருக்குப் போடுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது உங்களது கடமையாகும்.  அதேபோன்று, கடந்த காலத்தில் தவறிழைத்த அரசியல் கட்சிகள், தலைவர்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் கற்பிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும் இதைப் பயன்படுத்த வேண்டும்.  

உங்கள் பிரதிநிதிகளை வைத்துத்தான் நீங்கள் எப்பேற்பட்டவர்கள் என்பதை வெளியுலகு தீர்மானிக்கப்போகின்றது. எனவே, உங்களை ஆளக் கூடிய தலைமை தாங்கக் கூடியவர்களைச் சரியாகத் தெரிவு செய்து வாக்களியுங்கள். வீணாய்ப் போனவர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் உங்கள் வாக்குகளை வீணாக்க வேண்டாம்.  


தீர்மானம் உங்கள் கையில்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.