தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி என்ன?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியலுக்கு எதிரான ‘தற்கொலைப்படை’ என்று, இன்னொரு முன்னாள் ஜனாதிபதியான சந்திரிக்கா குமாரதுங்கவினால் அழைக்கப்படுகின்றவர்களில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முக்கியமானவர்கள்.   

அவர்கள் என்ன காரணத்துக்காகவும், மஹிந்த தலைமையேற்கும் எந்த அரசியல் அணியிலும் அங்கம் வகிக்க மாட்டார்கள் என்பது சந்திரிக்காவின் நம்பிக்கை.   

குறித்த பத்துப் பேரும், விரைவில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து விலகி, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவார்கள் என்று கூறப்படுகின்றது.   

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், மஹிந்த தலைமையிலான அணி பெற்றிருக்கின்ற மாபெரும் வெற்றி, நல்லாட்சி அரசாங்கத்தில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதா, இல்லையா என்கிற எந்தக் கேள்வியையும் சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் மத்தியில் ஏற்படுத்தவில்லை.  

 அதுபோல, கட்சித் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்ன முடிவெடுக்கப் போகின்றார் என்பது பற்றி சிந்திப்பதற்கான கால அவகாசத்தையும் வழங்கவில்லை. அப்படியான நிலையில், நல்லாட்சி அரசாங்கத்தின் இறுதி மணித்துளிகள் எண்ணப்படுகின்றன.   

  தென்னிலங்கையில் இவ்வாறான அரசியல் மாற்றத்தை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில், வடக்கு, கிழக்கில் தேர்தல் முடிவுகள் பிரதிபலிப்பது எவற்றை? அவை, எதிர்கால அரசியல் கட்டங்களில் என்ன மாதிரியான தாக்கங்களைச் செலுத்தப் போகின்றன என்று இந்தப் பத்தி ஆராய்கிறது.   

 முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பக்கம் தமிழ் மக்கள் ஒருங்கிணைந்து வந்திருகின்றார்கள். கடந்த கால தேர்தல் முடிவுகளும் அதையே பிரதிபலித்திருக்கின்றன.   

குறிப்பாக, 2012 தொடக்கம் கூட்டமைப்பு பெற்று வந்த வெற்றி, தமிழ்த் தேசியப் பரப்பில் ஏக நிலைக்கு அண்மித்தவை. ஆனால், இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள், 2015 பொதுத் தேர்தல் முடிவுகளோடு ஒப்பிடும் போது 175,000 வாக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதை தெளிவாகக் காட்டுகின்றது.   

அத்தோடு, கடந்த இரண்டு ஆண்டுகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்ற நிலையில், இன்னுமொரு 25,000 வாக்குளை கூட்டமைப்பு இழந்திருப்பதாகக் கொள்ள முடியும்.  

 இந்த இரண்டு இலட்சம் வாக்கு இழப்பில், தமிழரசுக் கட்சிக்கான நேரடி வாக்கு இழப்பாக ஒன்றரை இலட்சம் வாக்குகளைக் கொள்ள முடியும்.   

 மறுவளமாகப் பார்க்கப்போனால், கடந்த பொதுத் தேர்தலில் சுமார் 18,000 வாக்குகளைப் பெற்றிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இம்முறை சுமார் 70,000 அண்மித்த வாக்குகளைப் பெற்றிருக்கின்றது.   

இதன்மூலம் முன்னணி 50,000 வாக்குகளை அதிகமாகப் பெற்றிருக்கின்றது. தமிழ்த் தேசிய வாக்காளர்களின் வாக்களிப்பு வீழ்ச்சிக் காலத்தில், முன்னணி பெற்றிருக்கின்ற வாக்குகள் நிச்சயமாக கூட்டமைப்பின் (தமிழரசுக் கட்சி என்று கோடிட்டுக் கொள்ளலாம்) மீதான அதிருப்தி வாக்குகளாகக் கொள்ளப்பட வேண்டியவை.   

அத்தோடு, தமிழ்த் தேசியப் பேரவை என்கிற அடையாளத்துக்காக வாக்கு அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாகக் கொள்ள வேண்டியதில்லை. அவை, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான முன்னணிக்குக் கிடைத்த வாக்குகள்.  

 முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னரான சூனியக்காலங்களில், இரண்டு ஆண்டுகளைக் கழித்துவிட்டுப் பார்த்தால், கடந்த ஏழு வருடங்களில் தமிழ்த் தேசிய அரசியலில் கூட்டமைப்பே அங்கிகரிக்கப்பட்டு வந்திருக்கின்றது.  

 தென்னிலங்கையுடனான பேச்சுவார்த்தைகளிலும் கூட்டமைப்பே ஈடுபட்டு வந்திருக்கின்றது. பேச்சுகளின் போது, விட்டுக்கொடுக்கின்ற அனைத்து அம்சங்களும், கூட்டமைப்பின் மீதான கேள்வியாகவும், அதிருப்தியாகவுமே மிஞ்சும். அப்படியான நிலையில், கூட்டமைப்புக்கான வாக்களிப்பு வீதம் குறைவடைந்தமையும் அதிருப்தி வாக்குகள் எதிர்தரப்புக்குச் சென்றமையும் ஏற்றுக்கொள்ளக் கூடியவைதான்.   

ஆனால், அந்த வாக்குகளின் அளவில்தான் பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கின்றது. கிட்டத்தட்ட அந்த வாக்குகளின் அளவு ஓர் இலட்சமாக இருந்திருந்தால், அவ்வளவு பிரச்சினை இருந்திருக்காது.   

ஆனால், அது எதிர்பார்க்கப்பட்ட அளவைக் காட்டிலும், இன்னொரு மடங்கு அதிகம். அத்தோடு, அந்த வாக்குகள் எந்தக் கட்சிகளை நோக்கிச் சென்றிருக்கின்றன என்கிற கேள்வியும் முக்கியமானது.   

 தமிழ்த் தேசிய வாக்குகளை, கூட்டமைப்பும் முன்னணியும் சுரேஷ்- சங்கரி கூட்டணியும் தமக்குள் பகிர்ந்திருந்தால் கூட அதிகம் பிரச்சினைகள் இல்லை.  

 ஆனால், ஓர் இலட்சத்துக்கு அண்மித்த வாக்குகள், தமிழ்த் தேசிய நிலையிலிருந்து இழக்கப்பட்டிருக்கின்றன. அவை, ஈ.பி.டி.பி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி, ஏன் மஹிந்த அணிக்கும் சென்று சேர்ந்திருக்கின்றன என்பதும்தான் பெரிய பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கின்றது.  

 நாடாளுமன்றத் தேர்தலையும் தேர்தலுக்கான அலகு மிகவும் குறுகிய அளவில் காணப்படும் வட்டார முறையைக் கொண்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலையும் பெரிய அளவுக்கு ஒப்பிடுவது சரியல்ல என்கிற போதிலும், ஒரு கட்டம் தாண்டி, கணிசமான வாக்கிழப்பு என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதே.   

 போரினால் முப்பது வருடங்களாக அலைக்கழிக்கப்பட்ட சமூகமொன்று எதிர்கொள்ளும் வேலை வாய்ப்பு உள்ளிட்ட வாழ்வாதாரப் பிரச்சினைகள் பெரியளவில் தாக்கம் செலுத்துகின்ற சூழலில், உள்ளூராட்சி மன்றங்களினூடு வேலை வாய்ப்புகளைத் தங்களினால் ஏற்படுத்தித்தர முடியும் என்கிற வாக்குறுதிகள் மிகவும் பின்தங்கிய சூழலில் வாழும் மக்களை அந்தக் கட்சிகளை நோக்கிச் செல்வதற்கு ஏதுகைகளை வழங்கலாம்.  

 இந்த இடத்தில், நல்லூரை முடிவெடுக்கும் தளமாக வைத்துக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய அரசியல் என்பது, பாரிய சிக்கலை எதிர்கொள்ள ஆரம்பிக்கும். ஏனெனில், நல்லூர் அரசியல் என்பது ‘அதிகார அரசியலை’ மாத்திரமே பேசிக் கொண்டிருக்கின்ற போது, வாழ்வாதாரப் பிரச்சினை அதிகார அரசியலையும் தாண்டி அச்சுறுத்தலாக மாறும் போது, வாழ்வாதாரப் பிரச்சினை முதன்மை பெறுவதும், அது, தேர்தல் தெரிவுகளின் போது பிரதிபலிப்பதும் தவிர்க்க முடியாதது.   

அதற்கு, நல்லூர் பிரதேச சபை தேர்தல் முடிவுகளில் ஈ.பி.டி.பி பெற்ற ஆசனங்கள் சிறந்த முன்னுதாரணமாகும். அதுபோல, மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், கூட்டமைப்பு பெற்றிருக்கின்ற வாக்குகளின் அளவின் அரைவாசியைப் பெற்றுக்கொண்டிருப்பது என்பது தவிர்க்க முடியாத உதாரணங்களாகும்.   

 ஆக, கூட்டமைப்பு இழந்திருக்கின்ற இரண்டு இலட்சம் தமிழ்த் தேசிய வாக்குகள், இரண்டு நிலைகளில் பிரிந்திருக்கின்றன. முதலாவது நிலை, புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையில், கூட்டமைப்பு விட்டுக்கொடுப்புகளைச் செய்துவிட்டது என்கிற குற்றச்சாட்டு உள்ளிட்ட கூட்டமைப்பு மீதான அதிருப்தி அரசியல்.   

இரண்டாவது நிலை, வாழ்வாதார சிக்கல்களை எதிர்கொள்ளும் மக்கள் எடுத்திருக்கின்ற தற்காப்பு நடவடிக்கை. தற்காப்பு நடவடிக்கை என்பது உயிர் பிழைத்தலில் இருந்து ஆரம்பித்துத்தான் உரிமை அரசியலைப் பேசுகின்றது. மாறாக, உரிமை அரசியலைப் பேசிக் கொண்டு ஒட்டுமொத்தமாக உயிர் மாய்த்தலைப் பேசுவதில்லை.   

 தெற்கில் மஹிந்த அணி பலம்பெற்றிருக்கின்ற நிலையில், புதிய அரசமைப்புக்கான எந்த வாய்ப்புகளும் இனி சில வருடங்களுக்கு ஏற்படாது.  

 இடைக்கால அறிக்கை அப்படியே கிடப்பில் போடப்படும். அவ்வாறான நிலையில், கூட்டமைப்பு தென்னிலங்கையுடன் எந்தவிதமான பேச்சுகளுக்கும் செல்ல வேண்டியதில்லை.   

அதனால், பாரிய விட்டுக்கொடுப்புகளையும் செய்ய வேண்டி ஏற்படாது. ஆக, அதுசார் குற்றச்சாட்டுகளும் இந்த உள்ளூராட்சித் தேர்தலோடும் முடிந்து போய்விடும்.   

அவ்வாறான நிலையில், மீண்டும் பழையபடி சர்வதேசத்துக்கான செய்தியை தமிழ் மக்கள் ஒருங்கிணைந்து சொல்ல வேண்டும் என்கிற கோசத்தை, பாரிய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளாமல் கூட்டமைப்பு மாகாண சபைத் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் முன்வைக்கத் தலைப்படும். 

சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை மாநகர சபைகளில் ஆளும் தரப்பாக முன்னணியே இருக்கப்போகின்றது என்கிற நிலையில், அவர்களின் நிர்வாகத்திறன் பற்றிய உரையாடல்கள் அடுத்த தேர்தல்களில் பிரதிபலிக்க ஆரம்பிக்கும்.  

 ஏனெனில், முன்னணி ஸ்தாபிக்கப்பட்ட கடந்த எட்டு ஆண்டுகளில் எதிரணி அரசியலை மாத்திரமே செய்து வந்திருக்கின்றது. எதிரணி அரசியல் என்பது நிர்வாக ரீதியில் அவ்வளவு பொறுப்புக் கூறல்களை செய்யப் பணிப்பதில்லை. ஆனால், ஆளும் தரப்பாக இருப்பது பொறுப்புக் கூறல்களை முன்னிறுத்துவது.  

இந்தக் கட்டங்களையெல்லாம் கஜேந்திரகுமார் எப்படி எதிர்கொள்ளப் போகின்றார் என்பதுவும் முன்னணியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். 

இனி வரப்போகின்ற மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னரான மாதங்கள், கூட்டமைப்பு (குறிப்பாக தமிழரசுக் கட்சி) தன்னைச் சீரமைத்துப் பலப்படுத்துவதற்கானதும், முன்னணி தன்னை நிரூபிப்பதற்கான காலமும் ஆகும்.     


தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி என்ன?

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.