எந்நேரத்திலும் வீட்டுக்குச் செல்ல தயார்: ஜனாதிபதி

தனது பதவிக் காலம் குறித்து உயர் நீதிமன்றத்திடம் கருத்துக் கோரியமை தொடர்பில் எவரும் பதட்டப்படத் தேவையில்லை என்றும் நீதிமன்றம் வழங்கும் எந்தவொரு தீர்மானத்தையும் கௌரவத்துடன் ஏற்று ஜனநாயகத்துக்கு தலைசாய்த்து இன்றே பதவி விலகவும் தான் தயாராகவுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அக்குரஸ்ஸ பிரதேசத்தில், நேற்று (12) பிற்பகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

தான் உயர் நீதிமன்றத்திடம் கருத்துக் கோரியது தனக்கு ஜனாதிபதி பதவியில் இருப்பதற்கான வருடங்களின் எண்ணிக்கையை தெரிந்துகொள்வதற்காகவல்ல. 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்துடன் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் குறித்து சமூகத்தில் இரண்டு கருத்துக்கள் இருக்கின்ற காரணத்தினாலாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தான், ஜனாதிபதிப் பதவியில் நிலைத்திருப்பதற்காக  வரவில்லை என குறிப்பிட்ட ஜனாதிபதி, எனினும் தனது கனவான தேசிய நல்லிணக்கத்தை பலப்படுத்துவதற்கும் அனைத்து இனங்களும் சகோதரத்துவத்துடன் வாழும், உலகில் அங்கீகரிக்கப்பட்ட தேசமாக இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவதற்காக பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எப்போதும் அர்ப்பணிப்புடனேயே உள்ளதாக குறிப்பிட்டார்.

இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் அபேட்சகர்களை ஆதரித்து ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் சந்திப்புத் தொடரில் மாத்தறை மாவட்டத்தின் முதலாவது சந்திப்பு அக்குரஸ்ஸயில் நேற்று இடம்பெற்றது.

சிறந்த பிரதேச சபை மற்றும் சிறந்த மாகாண சபையினூடாக எதிர்காலத்தில் சிறந்த அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வழிநடத்தி வருவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்றவகையில் அப்பதவியில் தொடர்ந்து இருக்கவும் தனக்குப் பின்னர் தனது பிள்ளைகளுக்கு அப்பதவியை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்றும் எதிர்காலத்தில் தெரிவு செய்யப்படும் இளம் பிரதிநிதிகளே அந்த தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

தன்னிடம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் கிடையாது என்றும் தன்னிடம் இருப்பது நாட்டின் எதிர்காலத்திற்கான நிகழ்ச்சி நிரலேயாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அதன் மூலம் மக்கள் சார்பு அரசியல் இயக்கத்துக்காக அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

வடக்கில், இராணுவ முகாம்களை அகற்றுவதாக அரசாங்கத்திற்கெதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,  யுத்தத்தில் வெற்றிபெற்ற ஒரு நாட்டில் இராணுவத் தலைமையகம் ஒன்று இல்லையென்றும், இராணுவத் தலைமையகம் இருந்த 6 ஏக்கர் காணியை சங்ரில்லா கம்பனிக்கு உறுதியெழுதி வழங்கியவர்கள் தமது அரசாங்கமன்றி முன்னைய அரசாங்கமேயாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.


எந்நேரத்திலும் வீட்டுக்குச் செல்ல தயார்: ஜனாதிபதி

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.