‘நாட்டில் தரமான ஜனநாயகம் உள்ளது’

க.கமல்  

நாட்டில் தரமான ஜனநாயம் உள்ளது. அது குறித்து மக்களுக்குப் போதிய தெளிவில்லையெனத் தெரிவித்த ஐ.தே.கவின் ஊடகப் பேச்சாளர் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ, “இராணுவ ஆட்சியை விரும்புகின்றவர்களே கோட்டாவை ஆதரிக்கின்றனர்” என்றார்.  

ஐ.தே.க தலைமைக் காரியாலயமான சிறிகொத்தாவில், நேற்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அவர் மேலும் தெரிவிக்கையில்,   

“தற்காலத்தில் நாட்டு மக்கள் அறியாத விடயம் ஒன்று உள்ளது. அது இலங்கையில் காணப்படும் தரமான ஜனநாயகமாகும். அது தொடர்பில் நாட்டு மக்களுக்குப் போதிய தெளிவு இல்லை.  

“முகநூலிலும் ஏனைய சமூக ​வலைத்தளங்களிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தொடர்பில் கடுமையாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவற்றைக் கொண்டு பல விதங்களில் செய்திகள் உருவாக்கப்படுகின்றன. அதனால், தற்போதைய அரசாங்கம் முதுகெலும்பற்றதென மக்கள் கருதுகின்றனர். இது தவறானதொரு எண்ணப்பாடாகும்.  

“ஜனாதிபதி, பிரதமர் என்று வேறுபாடு இல்லாமல், அனைவரையும் பகிரங்கமாகவே விமர்சிப்பதற்கான சுதந்திரம் இன்று பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தான், தரமான ஜனநாயகம் என்று அர்த்தப்படுத்துகின்றோம்.   
“முன்பு சட்டம் இருவகையாக நடைமுறைப்படுத்தப்பட்டது. சட்டக் கோவையின் பிரகாரம்

நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டம் ஒன்று, மற்றையது கோட்டாபயவின் கைகளில் இருந்த சட்டம். கோட்டவின் கைகளில் இருந்த சட்டமே அதிகம் ந​டைமுறைப்படுத்தப்பட்டது.  

“ஆனால், இன்று சட்டக்கோவையின் பிரகாரம் நீதி கட்டமைப்பு செயற்படுகின்றது. அதனால், நாட்டு மக்கள் அரசாங்கம் அசமந்தப் போக்கில் செயற்படுவதாகக் கருதுகின்றனர். இந்தத் தாமதம் திருடர்கள் தூய்மையானவர்களாக தம்மை காட்டிக்கொள்வதற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.   

“எவ்வாறாயினும், ஊழல் மோசடிகள் தொட​ர்பிலான விசேட நீதிமன்றத்தை நிறுவதற்கான சட்டமூலம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதன் பின்னர் மோசடிகள் குறித்த விசாரணைகள் துரிதமாக முன்னெடுக்கப்படும்” என்றார்.  

“அதேநேரம், அண்மையில் கிளிநொச்சியில் இராணுவக் கேர்னல் ஒருவருக்கு புனர்வாழ்வு பெற்ற விடுதலை புலி உறுப்பினர்கள் கண்ணீருடன் விடைகொடுத்தனர். இதனால், ஐக்கிய தேசியக் கட்சி நல்லிணக்கத்தை ஏற்படுத்திவிட்டது என்ற பெருமை பேசவில்லை. இருப்பினும், மக்கள் மத்தியில் புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதை கருத்திற்கொள்ள வேண்டும். இந்த நிலைமை ​மாறி, இராணுவ ஆட்சி வேண்டுமாயின் கோட்டாபயவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தலாம். அதைத் தடுக்கப்போவதும் இல்லை” என, அமைச்சர் மேலும் கூறினார். 


‘நாட்டில் தரமான ஜனநாயகம் உள்ளது’

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.