மஹிந்த, கோட்டா, பொன்சேகா கொலைச் சதி வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரைக் கொலை செய்வதற்குத் திட்டம் தீட்டினார் என்ற குற்றஞ்சாட்டின் பேரில், தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, ஜூலை மாதம் 4ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தில் மேற்படி வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வேளையில், பிரதிவாதி சார்பில் ஆஜராகியிருந்த சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா, கடுமையான ஆட்சேபனைகளை தெரிவித்து, வாதத்தை முன்வைத்தார். இந்நிலையிலேயே, மேற்படி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.   

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரைப் படுகொலை செய்யத் சதித்திட்டம் தீட்டியதாக, பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால், 2009ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட கனகரட்ணம் ஆதித்தனுக்கு எதிராக, சட்ட மா அதிபரால், கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

பிரதிவாதி சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா, மேற்படி வழக்கை விசாரணை செய்வதையே கடுமையாக எதிர்த்தார்.

அவர் தனது வாதத்தில், வழக்கின் பிரதிவாதியான கனகரட்ணம் ஆதித்தன், தன்னுடைய  சுயவிருப்பின் பேரில், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு வழங்கியதாகக் கூறப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டும் அரச சாட்சியமாகக் கொண்டு கொழும்பு மேல் நீதிமன்றில் இரண்டு வழக்குகளும் யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் ஒரு வழக்குமாக, மூன்று வழக்குகள்,  சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மூன்று வழக்குகளிலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக ஒரு குற்றச்சாட்டுப் பத்திரம் உள்ளது.

இதேவேளை,  இலங்கைக்கான, பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் பசீர் அலி மொஹமட் என்பவருக்கு, 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதியன்று மரணத்தை விளைவிப்பதற்கு  உடந்தையாய் செயற்பட்டதாக ஒரு குற்றச்சாட்டுப்பத்திரமும் உள்ளது.
இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில், (எல்.ரீ.ரீ.ஈ) அமைப்பில், 1995ஆம் ஆண்டு, இணைந்து கிளிநொச்சியில் ஆயுதப் பயிற்சி பெற்றதாக ஒரு குற்றச்சாட்டுப்பத்திரம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில்  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு,  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபொழுது, குற்ற ஒப்புதல் வாக்குமூலம், அரச சட்டத்தரணியால் அரச தரப்பு சான்றாக முன்வைக்கப்பட்டது.

இந்தக் குற்ற ஒப்புதல் வாக்குமூலம், பிரதிவாதியால், சுயமாக வழங்கப்படவில்லையென யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், அந்தக் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை, 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதியன்று  நிராகரித்தார்.

இந்நிலையில், அந்த வழக்கானது, மேலதிக விசாரணைக்கு, மீண்டும்  எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில், வழக்கைத் தொடர்ந்து நடத்துவதற்கு வேறு சாட்சியங்கள் இல்லையென அரச சட்டத்தரணி  நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

அதனையடுத்து, வழக்கின் பிரதிவாதியான கனகரட்ணம் ஆதித்தன், 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17ஆம் திகதியன்று நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
சட்டமா அதிபரால், அரசியல் கைதிகளுக்கு எதிராக ஒரு குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டுமே சான்றாகக் கொண்டு நாட்டிலுள்ள பல மேல் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில், அரச தரப்பு சான்றாக முன்வைக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை சான்றாக ஏற்க மறுத்து, பிரதிவாதியை ஒரு மேல் நீதிமன்றம் விடுதலை செய்திருந்தால், மற்றைய மேல் நீதிமன்றங்களில் அதே பிரதிவாதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை சட்டமா அதிபர் திணைக்களம் மீளப்பெறுவதே நடைமுறையாகும்.

இந்த நடைமுறை, பயங்கரவாதத் தடைச்சட்டம் 1979ஆம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட நாளிலிருந்து, கடந்த 35 ஆண்டுகளாக நடைமுறையாக இருக்கின்றது.
ஆனால், சட்டமா அதிபர், இந்த நீதிமன்றில் (கொழும்பு விசேட மேல் நீதிமன்றம்) தாக்கல் செய்த இரண்டு வழக்குகளையும் மீளப் பெறாமல், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட, அரச சட்டத்தரணியின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை, இந்த வழக்கின்  உண்மை விளம்பல் விசாரணைக்கு மீண்டும்   எடுத்துக்கொள்ள வேண்டுமென கோரிக்கையை முன்வைப்பதை நான் கடுமையாக ஆட்சேபிக்கின்றேன்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் 1979ஆம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர், முதல் வழக்காக 1982ஆம் ஆண்டு குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில்  குற்றச்சாட்டுப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

மேற்படி  வழக்கில்,  கனிஷ்ட சட்டத்தரணியாக ஆஜராகியிருந்த நான், இன்றுவரையிலும் கடந்த 35 ஆண்டுகளாக அரசியல் கைதிகளுக்காக, ஆயிரக்கணக்கான வழக்குகளில ஆஐராகியுள்ளேன்.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பால் அரச தரப்பு அதிருப்தியடைந்திருந்தால் அந்தத் தீர்ப்புக்கு, எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மீளாய்வு மனுவையோ அல்லது மேன்முறையீட்டையோ தாக்கல் செய்யவேண்டும். ஆனால்,  யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு,  எதிராக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்யவில்லை என்றும் சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா சுட்டிக்காட்டினார்.

இதன்போது, தனது தரப்பு வாதத்தை முன்வைத்த அரச சட்டத்தரணி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை நடத்த  யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தைத் தவிர வேறு எந்தச் சான்றுமில்லை என்றார்.

எனினும், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்த நீதிமன்றத்தை கட்டுப்படுத்தாதெனவும் இந்த வழக்கை இந்த நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமெனவும் அரச சட்டத்தரணி தனது வாதத்தில் குறிப்பிட்டார்.

குறுக்கிட்ட சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி தவராசா,  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கும், இலங்கைக்கான, பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் பசீர்அலி மொகமட் என்பவருக்கு, 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதியன்று மரணத்தை விளைவிப்பதற்கு  உடந்தையாய் செயல்பட்டதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் மிகவும் பாரதூரமான வழக்குகள் என்பதே சட்டமா அதிபர் திணைக்களத்தின் நிலைப்பாடாகும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்நிலையில், இந்த நாட்டின் அரசியலமைப்படி சட்டத்தின் முன் யாவரும் சமன் என்பதற்கான வரைவிலக்கணத்தை புரிந்து கொள்ள முடியவில்லை என தனது வாதத்தில் குறிப்பிட்டார்.
வாதப்பிரதிவாதங்களை அவதானித்த, கொழும்பு விசேட மேல் நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கை, சட்டமா அதிபர் மீளப் பெறவில்லையெனில் வழக்கை முன்கொண்டு நடத்தவேண்டும் எனத் தெரிவித்து, அந்த வழக்கை ஜூலை மாதம் 4ஆம் திகதிக்கு  ஒத்திவைத்தார்.


மஹிந்த, கோட்டா, பொன்சேகா கொலைச் சதி வழக்கு ஒத்திவைப்பு

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.