‘மொட்டில்’ கூட்டமைப்பு உதயமாகும்

பா.நிரோஸ்

ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளையும் இணைத்து, ஒன்றிணைந்த பொதுஜன பெரமுன என்கிற பலமிக்க புதிய கூட்டமைப்பு உருவாக்கி, மொட்டு சின்னத்தில் எதிர்வரும் தேர்தல்களில் களமிறங்குவதற்குத் தீர்மானித்துள்ளதாக, அவ்வணி அறிவித்துள்ளது.

ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கும். கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, தலைமையில் நேற்று (10) நடைபெற்றது.

இதன்போதே, அவ்வணியின் அனைத்துக் கட்சி தலைவர்களின் ஏகோபித்த ஆதரவுடன் இந்ததீர்மானம் எட்டப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

பொரளையில் என்.எம்.​பெரேரா மத்திய நிலையத்தில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“உத்தியோகப்பூர்வ எதிர்க்கட்சியாக நாடாளுமன்றத்தில் ஒன்றிணைந்த எதிரணியனரை அறிவிக்க வேண்டுமென நாம் ஜனநாயக ரீதியில் கடந்த மூன்றரை வருடங்களாகப் போராடி வருகின்றோம். ஆகவே, அரசாங்கம் எமது கோரிக்கைக்குச் செவிசாய்ப்பதாய் தெரியவில்லை. இதனால், ஒன்றிணைந்த எதிரணியானது சுயாதீனக் குழுவாக நாடாளுமன்றத்தில் இயங்கத் தீர்மானித்துள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.

“நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதியுடன் மூன்றாண்டுகள் நிறைவடைகிறன. இத்தினத்தில் ஒன்றிணைந்த எதிரணியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கொழும்பில் மாபெரும் எதிர்ப்புப் பேரணியை நடத்தத் தீர்மானித்துள்ளனர்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

“இந்த வருடத்தின் முதல் அரையாண்டில் 1,260 கொள்ளைச் சம்பவங்களும், பெண்களுக்கு எதிராண 714 துஷ்பிரயோகச் சம்பவங்களும், 274 கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. நாட்டில் சராசரியாக இரண்டு நாள்களில் மூன்றுபேர் கொலை செய்யப்படுகின்றனர்.

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் காலத்தில் கொழும்பு நகரம் பாதுகாப்பானதாகவும் அழகானதாகவும் இருந்தது. ஆனால், நல்லாட்சியாளர்கள் பொறுப்பேற்ற பின்னர், கொழும்பு பாதுகாப்பற்ற நகரமாக உருவாகியுள்ளது.

“பாதாள உலகக் கும்பலுக்கு எதிராக கருத்துத் தெரிவிக்க வேண்டிய பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பாதாள உலகக் கும்பலின் பேச்சாளர்போல நடந்துகொள்கிறார். அரசியல் நிகழ்ச்சிக்கு நிரலுக்கமைய பொலிஸார் செயற்பட்டு வருகின்றனர்.

“தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை, பாதாள உலகக் குழு மற்றும் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுப்பட்டிருந்தார். அவரைப்போல வேறெவரும் ஆபத்தானவராக இருந்திருக்கவில்லை.

“தற்போது நாடு மீண்டும் அவ்வாறான ஆபத்தை நோக்கி நகர்கிறது. ஆகவே, நாட்டு மக்களை அதிலிருந்து மீட்க வேண்டும்” எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.


‘மொட்டில்’ கூட்டமைப்பு உதயமாகும்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.