ராஜிவ் கொலை வழக்கு : ’7 பேரை விடுவிக்க முடியாது’ - மத்திய அரசு

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட ஏழு பேரை விடுவிக்க முடியாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ராஜிவ் காந்தி கொலைவழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவெடுத்தபோது மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது.

மத்திய அரசிடம் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என்றது நீதிமன்றம். மேலும் ஏழு பேரை விடுவிக்க இடைக்காலத்தடை விதித்தது.

நாங்கள், மத்திய அரசிடம் எங்கள் கோரிக்கையை தெரிவித்திருந்தோம். அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை. அவர்கள் பதிலளிக்காமல் நேரடியாக நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கிவிட்டார்கள் . மத்திய அரசின் நிலைப்பாடு தெரியவேண்டும் என்றது தமிழக அரசு.

இந்நிலையில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை உச்சநீதிமன்றத்தில் இன்று(10) தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு, நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான பெஞ்சிற்கு வந்தது. இதன் போது, மத்திய அரசு வாதிடுகையில்,

இந்திய நாட்டின் முன்னாள் பிரதமரை கொன்றது மிகக்கடுமையான குற்றம். அயல்நாட்டைச் சேர்ந்தவர்கள் தீவிரவாத இயக்கங்களின் உதவியோடு கொன்றுள்ளனர். ஏற்கெனவே இவர்களுக்கு கருணை வழங்கப்பட்டு விட்டது.

மரண தண்டனை ஆயுள் தண்டனையாகிவிட்டது. இனி இன்னொரு முறை கருணை காண்பிக்கமுடியாது. ஏனெனில் இவர்களை விடுவித்தால் அது ஒரு தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். ஆகவே இவ்வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றது.

கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் திகதியே இம்முடிவை தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பிவிட்டது. இந்நிலையில் நீதிமன்றத்திலும் இன்று(10) வழக்கு விசாரணையின்போது தனது கருத்தை தெரிவித்திருக்கிறது மத்திய அரசு.

ஏழு பேரை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் மனுவை குடியரசு தலைவர் நிராகரித்துள்ளார்.

இந்நிலையில், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை குறித்து மீண்டும் மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து திகதி குறிப்பிடாமல் இவ்வழக்கை ஒத்திவைத்துள்ளது மத்திய அரசு.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார்.

இவ்வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கு தூக்குத்தண்டனையும், மற்ற நால்வருக்கும் ஆயுள்தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.

தூக்குத் தண்டனையை இரத்துச் செய்யக்கூறி மூன்று பேரும் ஜனாதிபதிக்கு மனு அனுப்பியிருந்தனர். இம்மனு குறித்து ஜனாதிபதி முடிவு எடுக்க காலமானதாக கூறி உச்ச நீதிமன்றம் கடந்த 2014 ஆம் ஆண்டில் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.


ராஜிவ் கொலை வழக்கு : ’7 பேரை விடுவிக்க முடியாது’ - மத்திய அரசு

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.