2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

இலங்கையை வென்றது பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 04 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் ஆசியக்கிண்ணப் போட்டிகளில், மிர்பூர் ஷேரே பங்களா தேசிய அரங்கில் பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கிடையே இன்று இடம்பெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் ஷாகித் அப்ரிடி, தமது அணி களத்தடுப்பில் ஈடுபடும் என அறிவித்தார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, ஒரு கட்டத்தில் 14 ஓவர்களில் எதுவித விக்கெட்டினையும் இழக்காமல் 110 ஓட்டங்களை பெற்றிருந்த போதும், அடுத்த ஆறு ஓவர்களில் 40 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களையே பெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கையணி சார்பாக, டி.எம்.டில்ஷான் ஆட்டமிழக்காமல் 56 பந்துகளில் ஒரு ஆறு ஓட்டம் பத்து நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 75 ஓட்டங்களையும் இன்றைய போட்டியில் இலங்கையணித் தலைவராக கடமையாற்றிய தினேஷ் சந்திமால், 49 பந்துகளில் ஒரு ஆறு ஓட்டம் ஏழு நான்கு ஓட்டங்கள் உள்ளடங்களாக 58 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக, மொஹம்மட் இர்பான் 2, ஷோய்ப் மலிக், வகாப் றியாஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 19.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து இலகுவாக வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, உமர் அக்மல், 37 பந்துகளில் இரண்டு, ஆறு ஓட்டங்கள், நான்கு, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 48 ஓட்டங்களையும் சஃப்ராஸ் அஹ்மெட், 27 பந்துகளில் ஆறு, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 38 ஓட்டங்களையும் பெற்றனர்.

போட்டியின் நாயகனாக உமர் அக்மல் தெரிவானார். நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (06), இலங்கை நேரப்படி மாலை ஏழு மணிக்கு இதே மைதானத்தில் இடம்பெறவுள்ள இறுதிப்போட்டியில், போட்டியை நடாத்தும் நாடான பங்களாதேஷும் இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் முதற்தர அணியான இந்தியாவும் மோதவுள்ளன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--