2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

மெஸ்ஸியைத் தோற்கடித்து பலூன் டோரை வென்றார் ரொனால்டோ

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 13 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

போர்த்துக்கல்லுக்கு யூரோக் கிண்ணத்தையும், றியல் மட்ரிட்டுக்கு சம்பியன்ஸ் லீக்கையும் இவ்வாண்டு பெற்றுக் கொடுத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, இலங்கை நேரப்படிஇன்று நள்ளிரவு, தனது நான்காவது பலூன் டோர் விருதைப் பெற்றுக் கொண்டார்.

அதிகமாக, பலூன் டோரை ஐந்து தடவைகள் வென்ற பார்சிலோனாவின் ஆர்ஜென்டின வீரரான லியனல் மெஸ்ஸி இம்முறை இரண்டாமிடம் பெற்றார். 2011ஆம் ஆண்டிலிருந்து, ரொனால்டோவும் மெஸ்ஸியுமே முதலிரண்டு இடங்களைப் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

யூரோ 2016 இறுதிப் போட்டிகளிலும், இவ்வருட சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியிலும் ரொனால்டோவிடம் தோல்வியுற்ற , அத்லெட்டிகோ மட்ரிட்டின் பிரெஞ்சு வீரரான அந்தோனி கிறீஸ்மன் மூன்றமிடத்தைப் பெற்றார். பார்சிலோனாவின் உருகுவே வீரரான லூயிஸ் சுவாரஸ் நான்காமிடத்தைப் பெற்றதுடன், பார்சிலோனாவின் பிரேஸில் வீரரான நெய்மர் ஐந்தாமிடத்தைப் பெற்றார். கழகத்துக்காகவும், நாட்டுக்காகவும் இவ்வாண்டு 54 போட்டிகளில் பங்குபற்றிய ரொனால்டோ 51 கோல்களைப் பெற்றிருந்தார். 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு ரொனால்டோ குறைவாக கோல் பெற்ற ஆண்டு இதுவேயாகும்.

இந்நிலையில், கருத்துத் தெரிவித்த ரொனால்டோ, " எனக்கு, எனது நான்காவது தங்கப் பந்தைப் பெறுவது சிறந்த கௌரவம். முதலாவதைப் போன்ற உணர்ச்சி, இது ஒரு கனவு மீண்டும் உண்மையாக வந்துள்ளது. நான்கு தடவைகள் வெல்வேன் என எனது மனதில் எப்போதும் நினைத்ததில்லை. நான் மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளேன்" என்று கூறியுள்ளார். இதற்கு முன்னர், 2008, 2013, 2014ஆம் ஆண்டுகளிலும் பலூன் டோரை ரொனால்டோ வென்றுள்ளார்.

றியல் மட்ரிட், போர்த்துக்கல்லுடன் சேர்த்து, தனது வாழ்நாளில் மிகச்சிறந்த ஆண்டு இவ்வாண்டு என ரொனால்டோ தெரிவித்துள்ளார். "றியல் பட்டங்களை வென்றுள்ளது. ஆனால், பிரதான பட்டமொன்றை போர்த்துக்கல் ஒருபோதும் வென்றதில்லை. எனவே, இது (யூரோ 2016) சிறப்பானது. சம்பியன்ஸ் லீக்குக்கு குறைவான மதிப்பளிப்பது தொடர்பில் நான் விரும்பவில்லை. ஆனால், போர்த்துக்கல்லுடனான பட்டம் ஒரு படி மேலானது" என்று ரொனால்டோ கூறியுள்ளார்.

2010ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரை பீபாவின் வருடத்தின் சிறந்த வீரருடன் இணைக்கப்பட்டிருந்த பலூன் டோர், இவ்வாண்டு பீபாவிலிருந்து பிரிந்து பிரான்ஸ் கால்பந்தாட்ட சஞ்சிகையாலேயே வழங்கப்பட்டிருந்தது. இவ்விருதுக்கான வாக்குகளை, மொத்தமாக 173 ஊடகவியலாளர்களே வாக்களித்திருந்தனர். பீபா விருது போன்று தேசிய அணியின் பயிற்சியாளர்கள், தலைவர்கள் வாக்களித்திருக்கவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .