2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

தென்னாபிரிக்காவிற்கெதிராக இலங்கைக்கு 128 ஓட்டங்களால் அபார வெற்றி

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 01 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணிக்கும், இலங்கை அணிக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 5ஆவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை அணி 128 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.
 
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
 
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 307 ஓட்டங்களைக் குவித்தது.
 
முதலாவது விக்கெட்டாக குஷால் ஜனித் பெரேராவை ஆரம்பத்திலேயே இழந்த இலங்கை அணி சார்பாக 2ஆவது விக்கெட்டுக்காக 163 ஓட்டங்கள் பகிரப்பட்டன. அதன் பின்னர் டில்ஷான், சங்கக்கார இருவரும் அதிரடியாக ஆடியதோடு, சங்கக்கார இறுதிவரை ஆட்டமிழக்காது காணப்பட்டுச் சிறப்பான அதிரடியை வெளிப்படுத்தினார்.
 
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக திலகரட்ண டில்ஷான் 110 பந்துகளில் 99 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து தனது 18ஆவது சதத்திற்கான வாய்ப்பை மயிரிழையில் தவறவிட்டார். தவிர, குமார் சங்கக்கார 45 பந்துகளில் அதிரடியாக 75 ஓட்டங்களையும், லஹிரு திரிமன்ன 93 பந்துகளில் 68 ஓட்டங்களையும் பெற்றனர்.
 
பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பாக மோர்னி மோர்க்கல், றயன் மக்லரன், லொன்வபோ சொற்சொபி, ஆரொன் ஃபங்கிசோ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
 
308 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 43.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 179 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 128 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.
 
முதலாவது விக்கெட்டுக்காக 5.4 ஓவர்களில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்த தென்னாபிரிக்க அணி, ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட்டை இழந்து 60 ஓட்டங்களுடன் பலமான நிலையில் காணப்பட்ட போதிலும், ஹசிம் அம்லா ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து விக்கெட்டுக்களைத் தொடர்ச்சியாக இழந்து தடுமாறித் தோல்வியடைந்தது.
 
துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க அணி சார்பாக ஏபி.டி.வில்லியர்ஸ் 51 பந்துகளில் 51 ஓட்டங்களையும், றயன் மக்லரன் 73 பந்துகளில் 29 ஓட்டங்களையும், குயின்டன் டீ கொக் 21 பந்துகளில் 27 ஓட்டங்களையும் பெற்றனர்.
 
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக அஜந்த மென்டிஸ், சுரங்க லக்மால் இருவரும் தலா 3 விக்கெட்டுக்களையும், சச்சித்திர சேனநாயக்க 2 விக்கெட்டுக்களையும், திலகரட்ண டில்ஷான், திஸர பெரேரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
 
5 போட்டிகள் கொண்ட இத்தொடரை இலங்கை அணி இதன் மூலம் 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
 
இப்போட்டியின் நாயகனாக திலகரட்ண டில்ஷான் தெரிவானதோடு, இத்தொடரின் நாயகனாக குமார் சங்கக்கார தெரிவானார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X