கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 3 மாதங்கள் நீடித்த சர்ச்சை முடிந்தது

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், கே.எல்.ரி.யுதாஜித்   

கிழக்குப் பல்கலைக் கழகம் வந்தாறுமூலை வளாகத்தில் கடந்த 3 மாதங்களாக இடம்பெற்று வந்த அசாதாரண சூழ்நிலை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனையடுத்து, அப்பல்​கலைக்கழகத்தின், கல்விச்செயற்பாடுகள், மீளவும் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.   

அதனடிப்படையில், இறுதியாண்டு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் செப்டெம்பர் 18ஆம் திகதியிலிருந்தும் அனைத்து ஆண்டுகளையும் சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஒக்டோபர் 02 ஆம் திகதியிலிருந்தும் மீளவும் ஆரம்பமாகும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது. 

​இதேவேளை, அசாதாரண நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், விவகாரத்துடன், சம்பந்தப்பட்ட முத்தரப்பும் கைச்சாத்திட்டுள்ளதாக, கிழக்குப் பல்கலைக்கழக பிரதி உப வேந்தர் வைத்திய கலாநிதி கே.ஈ. கருணாகரன், நேற்று (10) தெரிவித்தார்.   

கிழக்குப் பல்கலைக்கழகப் பேரவை, இப்பிரச்சினையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட மத்தியஸ்த குழு மற்றும் மாணவர் பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற முத்தரப்புப் பேச்சுவார்த்தையின் விளைவாக அனைத்துத் தரப்பினருக்கும் சாதகமான முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.   

இந்த முடிவுகளின்படி பின்வரும் தீர்மானங்களில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.   
பல்கலைக் கழகத்தை மீளத் திறப்பதற்காக, மாணவர்கள் தாம் ஆக்கிரமித்துள்ள பல்கலைக்கழக பேரவை, நிர்வாகக் கட்டடத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை(நேற்று) நண்பகல் 12 மணிக்கு முன்னர் வெளியேறிவிட வேண்டும்.   

தற்போது கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கற்றுக் கொண்டிருக்கும் சகல மாணவர்களுக்கும் முதலாமாண்டு, இறுதியாண்டு, மூன்றாமாண்டு, இரண்டாமாண்டு என்ற ஒழுங்கின் முன்னுரிமை அடிப்படையில் விடுதி வசதி வழங்கப்பட வேண்டும்.   

இடைநிறுத்தப்பட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள மாணவர்களின் விவகாரத்தைக் கையாள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள வைத்திய கலாநிதி எச்.ஆர். தம்பவித்த, ஓய்வு பெற்ற பேராசிரியர் எஸ். மௌனகுரு, சங்கைக்குரிய அடிகளார் போல் ரொபின்ஸன் ஆகியோரடங்கிய மத்தியஸ்தக் குழு சர்ச்சைக்குரிய மாணவர் விவகாரங்களைக் கவனித்து அடுத்த ஒரு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.   

புதிய மாணவர்களின் அடையாள அட்டையில், கல்வி அனுமதிக்கான திகதியும் அனுமானிக்கக் கூடிய முடிவுறும் திகதியையும் குறிப்பிடப்படவேண்டும்.   

மஹாபொல மாணவர் ஊக்குவிப்புக் கொடுப்பனவை சீராகப் பேணுதல் வேண்டும்.   
பேரவைக் கட்டடத்தை ஆக்கிரமித்த மாணவர்களுக்கெதிராக எதுவித ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்காதிருத்தல் வேண்டும்.   

மாணவர்களுக்கு விடுதி வசதி வழங்கப்படுவது என்ற இணக்கப்பாட்டின் அடிப்படையில் மாணவர்கள் நிர்வாகக் கட்டடத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள் என்பது பற்றி பொலிஸாருக்கு அறிவித்து, அந்த விடயம் அடுத்த நீதிமன்றத் தவணையில் நீதிமன்றத்துக்குத் தெரியப்படுத்தல் வேண்டும்.   

மாணவர்களின் துயரங்களை அறிந்து கொள்வதற்காக கவுன்ஸிலால் குழு ஒன்று நியமிக்கப்படவேண்டும்.   

தற்போது மூடப்பட்டுள்ள கிழக்குப் பல்கலைக்கழகம், இறுதியாண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள், செப்டெம்பர் 18ஆம் திகதியிலிருந்தும் அனைத்து ஆண்டுகளையும் சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஒக்டோபர் 02ஆம் திகதியிலிருந்தும் மீள ஆரம்பிக்கப்படும்.   

பல்கலைக்கழக ஒழுங்கு விதிகளை ஏற்றுக் கொண்டு எதிர்காலத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொள்வதற்கும் இதன்போது மாணவர்கள் உடன்பட்டுள்ளனர்.   

இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக 2017 ஓகஸ்ட் 08ஆம் திகதி இடம்பெற்ற பரீட்சைக்குத் தோற்ற முடியாமற்போன மாணவர்களுக்கு விஷேட தேர்வொன்றை நடத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.   

அதனடிப்படையிலேயே, பிரச்சினைகளுடன் தொடர்புடைய முத்தரப்பும் இந்த உடன்பாட்டில் கைச்சாத்திட்டுள்ளது.‪   

இந்த உடன்பாட்டின்படி, தாம் ஆக்கிரமித்துள்ள நிர்வாக பேரவைக் கட்டடத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை (10) அகன்று விட்டதாகவும், பல்கலைக்கழக நுழைவாயிலில் கடந்த 3 மாதகாலமாக அமைக்கப்பட்டிருந்த சத்தியாக்கிரகப் பந்தலையும் கறுப்புக் கொடிகளையும் அகற்றி விட்டதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.   

உடன்பாடு எட்டப்பட்டதன் பின்னர் மாணவர்கள் பட்டாசு கொளுத்தி, தமது மகிழ்ச்சி ஆரவாரத்தையும் வெற்றிப் பிரகடனத்தையும் வெளிப்படுத்தினர்.   


கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 3 மாதங்கள் நீடித்த சர்ச்சை முடிந்தது

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.