அவுஸ்திரேலியாவின் ODI தலைவராகவும் பெய்ன்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணித்தலைவராகவுள்ள விக்கெட் காப்பாளர் டிம் பெய்ன், இங்கிலாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான அவுஸ்திரேலிய அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த தொடருக்கான உப அணித்தலைவராகவும் இங்கிலாந்துக்கெதிரான ஒற்றை இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிக்கானதும் சிம்பாப்வேயில் இடம்பெறவுள்ள சிம்பாப்வே, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா பங்கேற்கும் முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கானதும் அவுஸ்திரேலிய அணியின் தலைவராக ஆரோன் பின்ஞ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதவிர, இங்கிலாந்துக்கெதிரான ஒற்றை இருபதுக்கு – 20 போட்டிக்கான, சிம்பாப்வேயில் இடம்பெறவுள்ள முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான அவுஸ்திரேலிய அணியினது உப தலைவராக அலெக்ஸ் காரே நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஒருநாள் சர்வதேசப் போட்டிக் குழாமுக்கு சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் ஷோன் மார்ஷ், சுழற்பந்துவீச்சாளர் நேதன் லையன் ஆகியோர் மீள அழைக்கப்பட்டுள்ளதுடன், இளம் துடுப்பாட்ட வீரரான டார்சி ஷோர்ட் முதன்முறையாக குழாமில் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில், இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான குழாமில், துடுப்பாட்ட வீரர் நிக் மடின்ஸன், சகலதுறை வீரர் ஜக் வில்டர்முத், சுழற்பந்துவீச்சாளர் மிற்சல் சுவப்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதேவேளை, துடுப்பாட்ட வீரர் கிறிஸ் லின்னும் சுழற்பந்துவீச்சாளர் அடம் ஸாம்பாவும் இரண்டு குழாம்களிலும் இடம்பெறவில்லை என்பதோடு, வேகப்பந்துவீச்சாளர் பற் கமின்ஸும் மிற்சல் ஸ்டார்க்கும் காயங்களிலிருந்து குணமடைந்து வருவதன் காரணமாக குழாம்கள் தேர்வுசெய்யப்படும்போது கருத்திற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், மேற்படி தெரிவுகள் குறுகிய காலத்துக்கானவை என்றவாறான கருத்துகளை தேர்வுக் குழுத் தலைவர் ட்ரெவர் ஹோன்ஸ் வெளிப்படுத்தியுள்ளார்.

ஒ.நா.ச.போ குழாம்: டிம் பெய்ன் (அணித்தலைவர், விக்கெட் காப்பாளர்), ஆரோன் பின்ஞ் (உப அணித்தலைவர்), அஸ்தன் அகர், அலெக்ஸ் காரே (விக்கெட் காப்பாளர்), ஜொஷ் ஹேசில்வூட், ட்ரெவிஸ் ஹெட், நேதன் லையன், கிளென் மக்ஸ்வெல், ஷோன் மார்ஷ், ஜஹை றிச்சர்ட்ஸன், கேன் வில்லியம்சன், டார்சி ஷோர்ட், பில்லி ஸ்டான்லேக், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், அன்றூ டை.

இ-20.ச.போ குழாம்: ஆரோன் பின்ஞ் (அணித்தலைவர்), அலெக்ஸ் காரே ( உப அணித்தலைவர், விக்கெட் காப்பாளர்), அஸ்தன் அகர், ட்ரெவிஸ் ஹெட், நிக் மடின்ஸன், கிளென் மக்ஸ்வெல், ஜஹை றிச்சர்ட்ஸன், கேன் றிச்சர்ட்ஸன், டார்சி ஷோர்ட், பில்லி ஸ்டான்லேக், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், மிற்சல் சுவப்ஸன், அன்றூ டை, ஜக் வில்டர்முத்.

 


அவுஸ்திரேலியாவின் ODI தலைவராகவும் பெய்ன்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.