2019 ஒக்டோபர் 16, புதன்கிழமை

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதிபெறுமா இங்கிலாந்து?

Editorial   / 2019 ஜூலை 11 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் 12ஆவது உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி பேர்மிங்ஹாமில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் மூன்று மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

இவ்வுலகக் கிண்ணத்தைப் பொறுத்தவரையில் சம்பியனாக அதிக வாய்ப்புகள் கொண்ட அணியாக உலகக் கிண்ணத்தை ஆரம்பித்த இங்கிலாந்து, லீக் சுற்றுப் போட்டிகளின் இடையில் தடுமாறி, பின்னர் இந்தியா, நியூசிலாந்தை கட்டாயம் வென்றாக வேண்டிய கட்டாயத்திலிருந்து அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.

மறுபக்கமாக, உலகக் கிண்ணத்துக்கு சற்று முன்னர் வரை தடுமாறிக் கொண்டிருந்த அவுஸ்திரேலியா, உலகக் கிண்ணத்துக்கு முன்னரான இந்தியா, பாகிஸ்தானுக்கெதிரான தொடர்களில் பிரகாசித்து தன்னம்பிக்கையுடன் உலகக் கிண்ணத்துக்குள் நுழைந்து வழமை போலவே உலகக் கிண்ணத்தில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டி முதல் அணியாக அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்திருந்தது.

அந்தவகையில், இந்த அரையிறுதிப் போட்டியை தீர்மானிப்பதாக மிற்சல் ஸ்டார்க் தலைமையிலான அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சுக் குழாமை ஜேஸன் றோய், ஜொனி பெயார்ஸ்டோவை ஆரம்பத் துடுப்பாட்டவீரர்களாகக் கொண்ட இங்கிலாந்தின் துடுப்பாட்டவரிசை எவ்வாறு எதிர்கொள்கின்றது என்பதிலேயே தங்கியிருக்கின்றது.

ஜேஸன் றோய், ஜொனி பெயார்ஸ்டோ அதிரடியான ஆரம்பமொன்றை வழங்கி இங்கிலாந்து ஓட்டக் குவிப்பை மேற்கொண்டால், அடில் ரஷீட், லியம் பிளங்கெட் போன்ற விக்கெட்டுகளைக் கைப்பற்றக்கூடிய பந்துவீச்சாளர்களைக் கொண்டு அவுஸ்திரேலியாவை வீழ்த்துவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்ற நிலையில், நாணயச் சுழற்சி முக்கியமானதாக காணப்படுகின்றது.

எனெனில், அரையிறுதிப் போட்டி போன்ற அழுத்தமான போட்டியொன்றில் வெற்றியிலக்கை துரத்திச் செல்வது மிகவும் அழுத்தத்துகுரியதாகவே காணப்படுகின்ற நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடும் அணிக்கு சாதகங்கள் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

பேர்மிங்ஹாம் ஆடுகளமானது அதிக ஓட்டங்கள் பெறப்படக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகையில், இது இங்கிலாந்துக்கு சாதகமானதொன்றாகக் காணப்படுகிறது. ஏனெனில், கடந்தாண்டு உலகக் கிண்ணத்தைத் தொடர்ந்து இங்கிலாந்து அதிரடி காட்டி வருகின்றபோதும் பந்துவீச்சுக்கு ஓரளவு சாதகமான ஆடுகளங்களிலேயே இங்கிலாந்து தடுமாறுவது யாவரும் அறிந்ததாக இருக்கின்றது.

அவுஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரையில் காயமடைந்த உஸ்மான் கவாஜாவை பீற்றர் ஹன்ட்ஸ்கொம்ப்பும், கிளன் மக்ஸ்வெல்லை மத்தியூ வேட்டும் பிரதியீடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரையில் மாற்றமிருக்காது என்றே கருதப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .