2019 ஒக்டோபர் 16, புதன்கிழமை

இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நியூசிலாந்து

Editorial   / 2019 ஜூலை 10 , பி.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் 12ஆவது உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு இரவீந்திர ஜடேஜாவின் அதிரடியான துடுப்பாட்டத்துக்கு மத்தியிலும் நியூசிலாந்து தகுதிபெற்றுள்ளது.

மன்செஸ்டரில் நேற்று  ஆரம்பமான இப்போட்டியில்  46.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 211 ஓட்டங்களை நியூசிலாந்து பெற்றிருக்கும்போது மழை குறுக்கிட்டதால் போட்டி இடைநிறுத்தப்பட்டது.

அந்தவகையில், இடைநிறுத்தப்பட்ட இடத்திலிருந்து போட்டி இன்று மீண்டும் ஆரம்பித்த நிலையில்,  50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ஓட்டங்களை முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த நியூசிலாந்து பெற்றது.

பதிலுக்கு, 240 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்தியா, மற் ஹென்றி, ட்ரெண்ட் போல்ட்டிடம் ரோஹித் ஷர்மா, விராத் கோலி, லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக்கின் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 10 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 24 ஓட்டங்களைப் பெற்றுத் தடுமாறியது.

பின்னர் கட்டுக்கோப்பாக பந்துவீசிய மிற்செல் சான்ட்னெரிடம் றிஷப் பண்ட், ஹர்டிக் பாண்டியா ஆட்டமிழக்க 30.3 ஓவர்களில் 92 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியவண்ணம் இருந்தது.

இந்நிலையில், ஏழாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த மகேந்திர சிங் டோணி 50 (72), இரவீந்திர ஜடேஜா 77 (59) ஆகியோர் தமக்கிடையே 116 ஓட்டங்களைப் பகர்ந்து வெற்றி நோக்கி இந்தியாவை நகர்த்தியபோதும், ட்ரெண்ட் போல்ட் வீசிய 48ஆவது ஓவரில் ஜடேஜா ஆட்டமிழந்ததுடன், 49ஆவது ஓவரின் மூன்றாவது பந்தில் இரண்டாவது ஓட்டத்தைப் பெறும்போது மார்டின் கப்திலின் அபார களத்தடுப்பால் டோணி ஆட்டமிழக்க 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 221 ஓட்டங்களையே பெற்ற இந்தியா 18 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: நியூசிலாந்து

நியூசிலாந்து: 239/8 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: றொஸ் டெய்லர் 74 (90), கேன் வில்லியம்சன் 67 (95) ஓட்டங்கள். பந்துவீச்சு: புவ்னேஷ்வர் குமார் 3/43 [10], ஜஸ்பிரிட் பும்ரா 1/39 [10], இரவீந்திர ஜடேஜா 1/34 [10])

இந்தியா: 221/10 (49.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: இரவீந்திர ஜடேஜா 77 (59), மகேந்திர சிங் டோணி 50 (72), றிஷப் பண்ட் 32 (56), ஹர்டிக் பாண்டியா 32 (62) ஓட்டங்கள். பந்துவீச்சு: மற் ஹென்றி 3/37 [10], மிற்சல் சான்ட்னெர் 2/34 [10], ட்ரெண்ட் போல்ட் 2/42 [10], லொக்கி பெர்கியூசன் 1/43 [10])

போட்டியின் நாயகன்: மற் ஹென்றி


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .