இந்தியா எதிர் தென்னாபிரிக்கா தொடர் இன்று ஆரம்பம்:

இந்தியா, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி, கேப் டெளணில் இலங்கை நேரப்படி இன்று மதியம் இரண்டு மணிக்கு ஆரம்பிக்கின்றது.

அந்தவகையில், தொடர்ச்சியாக ஒன்பது டெஸ்ட் தொடர்களில் வென்று சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான தரப்படுத்தலில் முதலிடத்திலிருக்கும் இந்தியா இவ்வாண்டு எதிர்கொள்ளவுள்ள முதலாவது சவாலாக தென்னாபிரிக்காவுக்கெதிரான தொடர் காணப்படுகின்றது.

ஏனெனில் இந்தியா பெற்ற வெற்றிகளில், மேற்கிந்தியத் தீவுகளில் பெறப்பட்டது தவிர ஏனையது அனைத்தும் தெற்காசியாவிலேயே பெறப்பட்டதாகும். எனவே, தென்னாபிரிக்கா போன்ற வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கக்கூடிய ஆடுகளங்களைக் கொண்ட இடங்களில் இந்தியா சிறப்பாகச் செயற்படுவதிலேயே சோதனையை எதிர்கொள்கிறது.

குறிப்பாக, வழமையாகக் கூறப்படுவது போன்று இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் எதிரணியின் விக்கெட்டுகளைக் கைப்பற்றுவதிலேயே இந்திய அணியின் வெற்றி வாய்ப்புகள் பெரும்பாலும் தங்கியிருக்கின்றன. இது தவிர, இந்திய அணியின் தலைவர் விராத் கோலி எவ்வாறு வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் இந்தியாவின் வெற்றிவாய்ப்பு தங்கியிருக்கின்றது. இவை தவிர, இந்திய அணியின் அண்மைய தொடர்களிலெல்லாம் முன்வரிசை வீரர்கள் தவிர, பின்வரிசை வீரர்களும் முக்கியமான நேரத்தில் ஓட்டங்களைப் பெறுவது இந்திய அணிக்கு சாதகமானதாகக் காணப்படுகிறது.

இறுதியாக இந்தியா வெளிநாட்டுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும்போது ஓட்டங்களைப் பெற்ற அஜின்கியா ரஹானே தற்போது ஓட்டங்களைப் பெறத் தடுமாறி வருகின்றபோதும் அவர்மீது இந்திய அணி நம்பிக்கை கொண்டுள்ளது. இதுதவிர, சகலதுறை வீரர் ஹர்டிக் பாண்டியாவை அணியில் தெரிவு செய்யாமல், அவருக்குப் பதிலாக மேலதிகத் துடுப்பாட்ட வீரராக ரோகித் ஷர்மாவை இந்தியா களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக முரளி விஜயும் லோகேஷ் ராகுலுமே களமிறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

 வேகப்பந்துவீச்சாளர்களில், இஷாந்த் ஷர்மா, மொஹமட் ஷமி, புவ்னேஷ்வர் குமார் ஆகியோரே களமிறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.  இது தவிர, சுழற்பந்துவீச்சாளராக இரவீந்திர ஜடேஜாவே களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்குத் தொற்று ஏற்பட்டிருந்ததன் காரணமாக இரவிச்சந்திரன் அஷ்வினே சுழற்பந்துவீச்சாளராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கம், பங்களாதேஷ், சிம்பாப்வேயையே அண்மையில் எதிர்கொண்ட தென்னாபிரிக்காவுக்கு இந்தியத் தொடர் சவாலனதாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெறுபேறுகளை விட அணித் தெரிவிலேயே மிகுந்த சிக்கலை தென்னாபிரிக்கா எதிர்நோக்குகிறது.

இதில், டேல் ஸ்டெய்ன் இப்போட்டியில் விளையாட மாட்டார் என்ற கருத்தை தென்னாபிரிக்க அணியின் பயிற்சியாளர் ஒட்டிஸ் கிப்ஸன் வெளிப்படுத்தியிருந்த நிலையில், வேகப்பந்துவீச்சாளர்களை தெரிவு செய்வதில் பெரிதாக சிக்கலிருக்காது. மோர்னி மோர்கல், கஜிஸ்கோ றபடா, வேர்ணன் பிலாந்தர் ஆகியோரே களமிறங்குவர்.

எனினும் துடுப்பாட்ட வரிசையிலேயே சிக்கல் காணப்படுகிறது. அணித்தலைவர் பப் டு பிளெஸி காயத்திலிருந்து குணமடைந்துள்ள நிலையில், மீண்டும் ஏழு துடுப்பாட்ட வீரர்கள் என்ற நிலைக்குச் செல்ல வேண்டியதொரு நிலை காணப்படுகிறது. இல்லாவிடில் தெம்பா பவுமாமையே பப் டு பிளெஸி பிரதியீடு செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். அடுத்து ஆறு துடுப்பாட்ட வீரர்களுடன் விளையாடினாலும் அன்டிலி பெக்லுவாயோவுக்குப் பதிலாக கிறிஸ் மொறிஸ் அணியில் இடம்பெறும் வாய்ப்புகள் காணப்படுகின்றன.

எதிர்பார்க்கப்படும் இரண்டு அணிகளினதும் வரிசை பின்வருமாறு:

இந்தியா: 1. முரளி விஜய், 2. லோகேஷ் ராகுல், 3. செட்டேஸ்வர் புஜாரா, 4. விராத் கோலி (அணித்தலைவர்), 5. அஜின்கியா ரஹானே, 6. ரோகித் ஷர்மா, 7. இரவிச்சந்திரன் அஷ்வின், 8. ரித்திமான் சஹா (விக்கெட் காப்பாளர்), 9. புவ்னேஷ்வர் குமார், 10. மொஹமட் ஷமி, 11. இஷாந்த் ஷர்மா.

தென்னாபிரிக்கா: 1. டீன் எல்கர், 2. ஏய்டன் மர்க்ரம், 3. ஹஷிம் அம்லா, 4. ஏ.பி டி வில்லியர்ஸ், 5. பப் டு பிளெஸி (அணித்தலைவர்), 6. தெம்பா பவுமா 7. குயின்டன் டி கொக் (விக்கெட் காப்பாளர்), 8. வேர்ணன் பிலாந்தர் 9. கஜிஸ்கோ றபடா 10. மோர்னி மோர்கல், 11. கேஷவ் மஹராஜ்.


இந்தியா எதிர் தென்னாபிரிக்கா தொடர் இன்று ஆரம்பம்:

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.