இன்னிங்ஸ் வெற்றியுடன் தொடரை வசப்படுத்தியது இந்தியா

சுற்றுலா இந்திய கிரிக்கெட் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனடிப்படையில் அந்த அணி, மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2 க்கு 0 என்ற அடிப்படையில் வென்று தொடரை வசப்படுத்தியுள்ளது.

கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் கடந்த 3 ஆம் திகதி ஆரம்பமாகிய இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.

அதன் பிரகாரம் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 622 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இந்திய அணியின் சார்பாக புஜாரா 133 ஓட்டங்களையும் ரெஹானே 132 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்த அதேவேளை, ராகுல், அஷ்வின், சஹா, ஜடேஜா ஆகியோ அரைச்சதங்களை பூர்த்தி செய்தனர்.

இலங்கை அணியின் சார்பில் பந்து வீச்சில் ரங்கன ஹேரத் அதிக பட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 183 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இலங்கை அணியின் சார்பாக நிரோஷன் திக்வெல்ல மாத்திரம் அதிகபட்சமாக 51 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பாக ரவிச்சந்திரன் அஷ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன் பின்னர் ஃபலோ ஒன் முறையில் மீண்டும் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பு இலங்கைக்கு வழங்கப்பட்டது.

போட்டியின் நான்காவது நாளான இன்று இலங்கை அணி 386 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

இலங்கை அணி சார்பாக திமுத் கருணாரத்ன 141 ஓட்டங்களையும் குசல் மென்டிஸ் 110 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் ரவிந்திர ஜடேஜா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் 12ஆம் திகதி பல்லேகலையில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இன்னிங்ஸ் வெற்றியுடன் தொடரை வசப்படுத்தியது இந்தியா

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.