உலகக் கிண்ணம்: பெனால்டியில் ரஷ்யாவை வென்று அரையிறுதியில் குரோஷியா

ரஷ்யாவில் இடம்பெற்றுவரும் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு குரோஷியா தகுதிபெற்றுள்ளது. நேற்றிரவு இடம்பெற்ற ரஷ்யாவுடனான காலிறுதிப் போட்டியில் பெனால்டியில் வென்றமையைத் தொடர்ந்தே அரையிறுதிப் போட்டிக்கு குரோஷியா தகுதிபெற்றுள்ளது.

இப்போட்டியின் 31ஆவது நிமிடத்தில், பெனால்டி பகுதிக்கு வெளியேயிருந்து டெனிஸ் செரஷெவ் பெற்ற அபாரமான கோல் காரணமாக ரஷ்யா முன்னிலை பெற்றது. எனினும் அடுத்த எட்டாவது நிமிடத்தில் மரியோ மண்டூஸிக்கிடமிருந்து வந்த பந்தை அன்ட்ரே கிரமரிச் தலையால் முட்டிக் கோலாக்க கோலெண்ணிக்கையை குரோஷியா சமப்படுத்தியது. இதற்கு பின்னர் போட்டியின் வழமையான நேர முடிவு வரைக்கும் கோலெதுவும் பெறப்படாத நிலையில், போட்டி மேலதிக நேரத்துக்குச் சென்றது.

அந்தவகையில், போட்டியின் 100ஆவது நிமிடத்தில், குரோஷியாவின் அணித்தலைவர் லூகா மோட்ரிச்சின் மூலையுதையை டொமகோ விடா தலையால் முட்டிக் கோலாக்க குரோஷியா முன்னிலை பெற்றுக் கொண்டது. ஆயினும் 115ஆவது நிமிடத்தில், பிறீ கிக்கின் மூலம் வந்த பந்தை தலையால் முட்டி மரியோ பெர்ணான்டஸ் கோலாக்க கோலெண்ணிக்கையை ரஷ்யா சமப்படுத்த அரையிறுதிக்கு தேர்வாகும் அணியைத் தேர்வு செய்ய பெனால்டி வரை செல்ல வேண்டிய நிலையேற்பட்டது.

பெனால்டியில், ரஷ்யா சார்பாக அலன் ஸக்வீவ், சேர்ஜியா இக்னாசிவாச், டலேர் குஸ்யாவ் ஆகியோர் தமதுதைகளை கோல் கம்பத்துக்குள் செலுத்தியிருந்ததுடன், பெடோர் ஸ்மோலோவ்வின் உதையை குரோஷியாவின் கோல் காப்பாளர் டானியல் சுபாசிச் தடுத்திருந்ததுடன், மரியோ பெர்னாண்டஸ் தனதுதையை கோல் கம்பத்துக்கு வெளியே செலுத்தியிருந்தார்.

மறுபக்கமாக, குரோஷியா சார்பாக மார்சலோ பிரஸ்னோவிச், லூகா மோட்ரிச், டொமகோ விடா, இவான் றகிட்டிச் ஆகியோர் தமதுதைகளை கோல் கம்பத்துக்குள் செலுத்தியதுடன், மட்டியோ கொவாசிச்சின் உதையை ரஷ்ய கோல் காப்பாளர் இகர் அகினிஷியேவ் தடுத்திருக்க, 4-3 என்ற ரீதியில் பெனால்டியில் வெற்றிபெற்று அரையிறுதிப் போட்டிக்கு குரோஷியா தகுதிபெற்றது.

இதேவேளை, நேற்று  இடம்பெற்ற மற்றொரு காலிறுதிப் போட்டியில், ஹரி மக்கியூரி, டெலெ அல்லியின் கோல்களோடு 2-0 என்ற கோல் கணக்கில் சுவீடனை வென்ற இங்கிலாந்தும் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.

இதுதவிர, தத்தமது காலிறுதிப் போட்டிகளில் உருகுவேயை வென்று பிரான்ஸும் பிரேஸிலை வென்று பெல்ஜியமும் அரையிறுதிப் போட்டிகளுக்கு தகுதிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

 


உலகக் கிண்ணம்: பெனால்டியில் ரஷ்யாவை வென்று அரையிறுதியில் குரோஷியா

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.