எல் கிளாசிகோ சமநிலையில் முடிவடைந்தது

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், பார்சிலோனா, றியல் மட்ரிட் அணிகளுக்கிடையே இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற எல் கிளாசிகோ என்றழைக்கப்படும் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

தமது மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில், சேர்ஜி றொபேர்ட்டோ கொடுத்த பந்தை லூயிஸ் சுவாரஸ் போட்டியின் 10ஆவது நிமிடத்தில் கோலாக்க போட்டியின் ஆரம்பத்திலேயே பார்சிலோனா முன்னிலை பெற்றது. எனினும் அடுத்த நான்காவது நிமிடத்தில் கரிம் பென்ஸீமா தலையால் முட்டிக் கொடுத்த பந்தை கோலாக்கிய கிறிஸ்டியானோ ரொனால்டோ கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.

இந்நிலையில், முதற்பாதி முடிவடையும் தருணத்தில் றியல் மட்ரிட்டின் மார்ஷெலோவைத் தள்ளி வீழ்த்திய சேர்ஜி றொபேர்ட்டோ நேரடியாக சிவப்பு அட்டை காட்டப்பெற்று மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். அந்தவகையில் 1-1 என்ற கோல் கணக்கில் முதற்பாதி சமநிலையில் முடிவடைந்ததுடன், முதற்பாதியுடன் கோல் பெறும்போது கணுக்காலில் உபாதைக்குள்ளாகிய கிறிஸ்டியானோ ரொனால்டோ மார்கோஸ் அஸென்ஸியோவால் பிரதியீடு செய்யப்பட்டிருந்தார்.

இரண்டாவது பாதி ஆரம்பித்த ஏழாவது நிமிடத்தில், றியல் மட்ரிட்டின் ரபேல் வரானேயிடமிருந்து பறித்து லூயிஸ் சுவாரஸ் கொடுத்த பந்தை லியனல் மெஸ்ஸி கோலாக்க பார்சிலோனா முன்னிலை பெற்றது.

இந்நிலையில், அன்ரே இனியஸ்டாவின் கணுக்காலைத் தாக்கியதுடன் சாமுவேல் உம்டிட்டியுடன் மோதியபோதும் மஞ்சள் அட்டை காட்டப் பெறாமல் தப்பித்திருந்த கரித் பேல், மாற்று வீரராகக் களமிறங்கிய நெல்சன் செமிடோவை வீழ்த்தியபோது மஞ்சள் அட்டை காட்டப் பெற்றிருந்தார். மறுபக்கம் மார்ஷெலோவை ஜோர்டி அல்பா வீழ்த்தியபோது றியல் மட்ரிட்டுக்கு பெனால்டி வழங்கப்படவில்லை. இச்சந்தர்ப்பத்தில், போட்டியின் 72ஆவது நிமிடத்தில் கரித் பேல் பெற்ற கோலோடு இறுதியில் 2-2 என்ற கோல் கணக்கில் போட்டியை றியல் மட்ரிட் சமநிலையில் முடித்துக் கொண்டது.


எல் கிளாசிகோ சமநிலையில் முடிவடைந்தது

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.