ஐந்தாமிடத்துக்கு முன்னேறினார் மிற்சல் ஸ்டார்க்

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில், அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளரான மிற்சல் ஸ்டார்க் ஐந்தாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

தென்னாபிரிக்காவுக்கெதிரான முதலாவது டெஸ்டுக்கு முன்பதாக, 10ஆம் இடத்திலிருந்த மிற்சல் ஸ்டார்க், குறித்த போட்டியில் ஒன்பது விக்கெட்டுகளைக் கைப்பற்றியமையைத் தொடர்ந்தே ஐந்து இடங்கள் முன்னேறி ஐந்தாமிடத்தைப் பிடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் சபையின் தரப்படுத்தலொன்றில் தனது இதுவரையான விளையாடும் காலத்தில் மிற்சல் ஸ்டார்க் பெறும் சிறந்த இடம் இதுவாகும்.

அந்தவகையில், டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் இரவிச்சந்திரன், தென்னாபிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் நீல் வக்னர், இலங்கையின் சுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் ஆகியோர் முறையே ஆறாவது, ஏழாவது, எட்டாவது, ஒன்பதாவது இடங்களில் காணப்படுகின்றனர்.

இதேவேளை, தென்னாபிரிக்காவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நேதன் லையனும் தென்னாபிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் மோர்னி மோர்கலும் தலா 755 புள்ளிகளையே பெற்றுள்ளபோது தசம புள்ளிகள் வித்தியாசத்தில் நேதன் லையன் பத்தாமிடத்தில் காணப்படுகின்றார்.

டெஸ்ட் போட்டிகளுக்கான முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ஜேம்ஸ் அன்டர்சன் (இங்கிலாந்து), 2. கஜிஸோ றபடா (தென்னாபிரிக்கா), 3. இரவீந்திர ஜடேஜா (இந்தியா), 4. ஜொஷ் ஹேசில்வூட் (அவுஸ்திரேலியா), 5. மிற்சல் ஸ்டார்க் (அவுஸ்திரேலியா), 6. இரவிச்சந்திரன் அஷ்வின் (இந்தியா), 7. வேர்ணன் பிலாந்தர் (தென்னாபிரிக்கா), 8. நீல் வக்னர் (நியூசிலாந்து), 9. ரங்கன ஹேரத் (இலங்கை), 10. நேதன் லையன் (அவுஸ்திரேலியா)

இதேவேளை, டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில், முதல் 10 இடங்களில், அவுஸ்திரேலியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் சோபிக்காத ஹஷிம் அம்லா, ஏழாமிடத்திலிருந்து மூன்று இடங்கள் கீழிறங்கி 10ஆம் இடத்துக்குச் சென்றுள்ளார். எட்டாம், ஒன்பதாம், 10ஆம் இடங்களிலிருந்த பாகிஸ்தானின் அஸார் அலி, இங்கிலாந்தின் அலிஸ்டயர் குக், நியூசிலாந்தின் றொஸ் டெய்லர் ஆகியோர் முறையே ஏழாம், எட்டாம், ஒன்பதாம் இடங்களுக்கு முன்னேறியுள்ளனர்.

டெஸ்ட் போட்டிகளுக்கான முதல் 10 துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ஸ்டீவ் ஸ்மித் (அவுஸ்திரேலியா), 2. விராத் கோலி (இந்தியா), 3. ஜோ றூட் (இங்கிலாந்து) 4. கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து), 5. டேவிட் வோணர் (அவுஸ்திரேலியா), 6. செட்டேஸ்வர் புஜாரா (இந்தியா), 7. அஸார் அலி (பாகிஸ்தான்), 8. அலிஸ்டயர் குக் (இங்கிலாந்து), 9. றொஸ் டெய்லர் (நியூசிலாந்து), 10. ஹஷிம் அம்லா (தென்னாபிரிக்கா)

 


ஐந்தாமிடத்துக்கு முன்னேறினார் மிற்சல் ஸ்டார்க்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.