சம்பியனானது றியல் மட்ரிட்

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் கூட்டமைப்பின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட்டுக்கும் யூரோப்பா லீக் சம்பியன்களான மன்செஸ்டர் யுனைட்டெட்டுக்குமிடையிலான சுப்பர் கிண்ணப் போட்டியில், றியல் மட்ரிட் வெற்றிபெற்றுள்ளது.  

மசிடோனியாவின் தலைநகர் ஸ்கொப்பேயில், இலங்கை நேரப்படி, நேற்று அதிகாலை இடம்பெற்ற போட்டியில், போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய றியல் மட்ரிட், போட்டியின் 24ஆவது நிமிடத்தில் கஸேமேரோ பெற்ற கோலின் மூலம் முன்னிலை பெற்றது. இக்கோல் பெறப்படுவதற்கு முன்பு, கஸேமேரோவின் உதையொன்று, கோல் கம்பத்தில் பட்டிருந்தது. இது தவிர, கரித் பேலின் உதையொன்று கோல் கம்பத்துக்கு வெளியால் சென்றிருந்தது. இந்நிலையில், குறித்த கோலுடனேயே போட்டியின் முதற்பாதி முடிவடைந்திருந்தது.  

முதற்பாதியில், மன்செஸ்டர் யுனைட்டெட்டில் புதிதாக இணைந்து கொண்ட முன்கள வீரரான றொமேலு லுக்காக்குவின் உதையொன்று, றியல் மட்ரிட்டின் கோல் காப்பாளர் கெய்லர் நவாஸிடம் நேரடியாகச் சென்றது.  

இதன்பின்னர், கரித் பேலுடன் பந்தைப் பரிமாறிக் கொண்டு சென்ற இஸ்கோ, போட்டியின் 52ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்று, றியல் மட்ரிட்டின் முன்னிலையை இரட்டிப்பாக்கினார். இதன்பின்னர், கரித் பேலின் உதையொன்று கோல் கம்பத்தில் பட்டிருந்ததுடன், டொனி க்ரூஸ், கரிம் பென்ஸீமா, மார்கோ அஸென்ஸியோ ஆகியோரின் உதைகளை, மன்செஸ்டர் யுனைட்டெட்டின் கோல் காப்பாளர் டேவிட் டி கியா தடுத்திருந்தார்.  

தொடர்ந்து, போட்டியின் 62ஆவது நிமிடத்தில், றொமேலு லுக்காக்கு கோலொன்றைப் பெற்றார். பின்னர், போட்டி முடிவடைய ஒன்பது நிமிடங்கள் இருக்கையில், இரண்டாவது பாதியில் மாற்று வீரராகக் களமிறங்கிய மார்க்கஸ் றஷ்போர்ட்டின் உதையொன்று, கோல் கம்பத்துக்கு வெளியால் செல்ல, 2-1 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் வென்றது. இரண்டாவது பாதியில், மேம்படுத்தப்பட்ட ஆட்டத்தை மன்செஸ்டர் யுனைட்டெட் வெளிப்படுத்தியபோதும், தொடர்ந்தும் கோல் பெறும் வாய்ப்புகளை றியல் மட்ரிட் உருவாக்கிருந்தது.  

அந்தவகையில், கடந்தாண்டும் சுப்பர் கிண்ணத்தை வென்ற றியல் மட்ரிட், 1990ஆம் ஆண்டுக்குப் பின்னர், முதலாவது அணியாக சுப்பர் கிண்ணத்தைக் தக்க வைத்துள்ளது.  

இப்போட்டியின்போது வெப்பநிலைகள், 30 செல்சியஸுக்கும் மேலாக இருந்த நிலையில், 30ஆவது நிமிடத்திலும் 72ஆவது நிமிடத்திலும், இரண்டு அணியின் வீரர்களும் பானங்களைப் பெறுவதற்காக, போட்டி இடைநிறுத்தப்பட்டிருந்தது.     


சம்பியனானது றியல் மட்ரிட்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.