சிற்றியை வென்றது யுனைட்டெட்

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று   மன்செஸ்டர் சிற்றி, மன்செஸ்டர் யுனைட்டெட் அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டு கோல்கள் பின்தங்கியிருந்து வந்து மன்செஸ்டர் யுனைட்டெட் வெற்றிபெற்றுள்ளது.

தமது மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றிபெற்றால் நடப்பு பருவகாலத்தின் இங்கிலாந்து பிறீமியர் லீக் பட்டத்தை மன்செஸ்டர் சிற்றி கைப்பற்றியிருக்க முடியுமென்ற நிலையில், தற்போது பட்டத்தைக் கைப்பற்றுவதற்கு ஆகக் குறைந்தது இவ்வாரயிறுதிவரை காத்திருக்க வேண்டியுள்ளது.

இப்போட்டியின் 25ஆவது நிமிடத்தில் தமது அணித்தலைவர் வின்சென்ட் கொம்பனி தலையால் முட்டிப் பெற்ற கோலின் மூலம் முன்னிலை பெற்ற மன்செஸ்டர் சிற்றி, அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் தமதணியின் மத்தியகள வீரர் இல்கி குன்டோகன் பெற்ற கோலின் மூலமாக தமது முன்னிலையை இரட்டிப்பாக்கிக் கொண்டது.

இதைத் தொடர்ந்து, மன்செஸ்டர் சிற்றியின் முன்கள வீரர் ரஹீம் ஸ்டேர்லிங், கோல் பெறுவதற்கான இலகுவான இரண்டு வாய்ப்புகளை கோல் கம்பத்துக்கு மேலால் செலுத்தியதுடன், மன்செஸ்டர் யுனைட்டெட்டின் கோல் காப்பாளர் டேவிட் கியா மாத்திரம் தனித்திருந்தபோது, இல்கி குன்டோகன் தனதுயை நேரே அவரிடமே செலுத்தியிருந்தார். இவ்வாறாக முதற்பாதியை 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையுடன் மன்செஸ்டர் சிற்றி முடித்துக் கொண்டது.

இரண்டாவது பாதியில் சுதாகரித்துக் கொண்ட மன்செஸ்டர் யுனைட்டெட் இப்பாதி ஆரம்பித்த எட்டாவது நிமிடத்திலேயே தமது மத்தியகள வீரர் போல் பொக்பாவின் மூலம் கோலொன்றைப் பெற்றதுடன், அடுத்த நிமிடத்தில் போல் பொக்பா தலையால் முட்டிப் பெற்ற கோலின் மூலம் கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தியது,

இதையடுத்து, போட்டியின் 69ஆவது நிமிடத்தில், மன்செஸ்டர் யுனைட்டெட்டின் அலெக்ஸிஸ் சந்தேஸ் உதைந்த பிறீ கிக்கை, கிறிஸ் ஸ்மோலிங் தலையால் முட்டிக் கோலாக்கி மன்செஸ்டர் யுனைட்டெட்டுக்கு முன்னிலையை வழங்கினார்.

இந்நிலையில், போட்டியின் இறுதித் தருணங்களில் மன்செஸ்டர் யுனைட்டெட்டின் பின்கள வீரர் அஷ்லி யங், மாற்று வீரராகக் களமிறங்கிய மன்செஸ்டர் சிற்றியின் சேர்ஜியோ அகுரோவுடன் பெனால்டி பகுதிக்குள் வேண்டுமென்றே முட்டியபோதும் அதை மத்தியஸ்தர் மார்ட்டின் அட்கின்ஸன் கவனத்தில் கொண்டிருக்கவில்லை.

தொடர்ந்தும் மன்செஸ்டர் சிற்றி தாக்குதல் ஆட்டத்தை மேற்கொண்டபோதும் சேர்ஜியோ அகுரோவின் உதையொன்றை ஒரு கையால் டேவிட் டி கியா அபாரமாகத் தடுக்க, மன்செஸ்டர் சிற்றியை மேலதிக கோலெதுவும் பெறாமல் பார்த்துக் கொண்ட மன்செஸ்டர் யுனைட்டெட் இறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

அந்தவகையில், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸின் மைதானத்தில் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள அவ்வணியுடனான போட்டியில் தாம் வென்று, மன்செஸ்டர் யுனைட்டெட் தமது மைதானத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியன் அணியுடனான போட்டியில் தோற்றால் இங்கிலாந்து பிறீமியர் லீக் பட்டத்தை இவ்வாரயிறுதியில் மன்செஸ்டர் சிற்றி கைப்பற்றும்.

இதேவேளை, எவெர்ற்றனின் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற அவ்வணிக்கும் லிவர்பூலுக்குமிடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில் இப்போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

இந்நிலையில், ஸ்டோக் சிற்றியின் மைதானத்தில்நேற்று நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸ் வென்றது. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸ் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் கிறிஸ்டியன் எரிக்ஸன் பெற்றதோடு, ஸ்டோக் சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலை மமெ பியரம் டியெள பெற்றிருந்தார்.


சிற்றியை வென்றது யுனைட்டெட்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.