டென்மார்க்கை வென்று காலிறுதியில் குரோஷியா

ரஷ்யாவில் இடம்பெற்றுவரும் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டிகளுக்கு குரோஷியா தகுதிபெற்றுள்ளது. நேற்றிரவு இடம்பெற்ற டென்மார்க்குடனான இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில், தமதணியின் கோல் காப்பாளர் டானியல் சுபசிச் மூன்று பெனால்டிகளைத் தடுத்து வெற்றியை வழங்கிய நிலையிலேயே காலிறுதிப் போட்டிக்கு குரோஷியா தகுதிபெற்றுள்ளது.

இப்போட்டியின் ஆரம்ப நிமிடத்திலேயே, கோல் கம்ப பகுதியை நோக்கி எறியப்பட்ட பந்தை கோலாக்கிய டென்மார்க்கின் மார்டின் ஜோகின்ஸன் தனதணிக்கு முன்னிலையை வழங்கினார். எவ்வாறெனினும் அடுத்த இரண்டாவது நிமிடத்திலேயே, கோல் கம்பப் பகுதியிலிருந்து டென்மார்க்கின் வீரரொருவரால் வெளியே செலுத்தப்பட்ட பந்து துரதிர்ஷ்டவசமாக மார்டின் டிலேயேயில் பட்டு குரோஷியாவின் மரியோ மண்டூஸிக்கிடம் வர அவர் அதை கோலாக்கி கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.

இவ்வாறாக ஆரம்ப நிமிடங்களில் இரண்டு கோல்கள் பெறப்பட்டபோதும், இரண்டு அணிகளின் ஆட்டமும் பின்னர் மந்தமானதாகவே காணப்பட்டு, போட்டியின் வழமையான நேரத்தில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாமல் 1-1 என்ற கோல் கணக்கிலேயே காணப்பட்ட போட்டி மேலதிக நேரத்துக்குச் சென்றது.

மேலதிக நேரத்தில், குரோஷியாவின் அணித்தலைவர் லூகா மோட்ரிச் கொடுத்த பந்தை அன்டெ றெபிக், டென்மார்க்கின் கோல் காப்பாளர் கஸ்பர் ஷூமைக்கலை தாண்டிக் கொண்டு சென்றபோது மார்டின் ஜோகின்ஸனால் வீழ்த்தப்பட்டார். இதையடுத்து பெனால்டி வழங்கப்பட்டபோதும், லூகா மோட்ரிச்சின் பெனால்டியை கஷ்பர் ஷுமைக்கல் தடுத்திருந்த நிலையில், மேலதிக நேர முடிவிலும் இரண்டு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில் காலிறுதிக்குச் செல்லும் அணி பெனால்டி மூலம் தீர்மானிக்கப்பட்டது.

பெனால்டியில், டென்மார்க்கின் கிறிஸ்டியன் எரிக்ஸன், லஷீ ஷூன, நிக்கொலாய் ஜானுசன் ஆகியோரின் பெனால்டிகளை டானியல் சுபாசிச் தடுக்க, சிமோன் கர், மைக்கல் குரோன் டெல்லி ஆகியோரே தமது பெனால்டிகளை கோல் கம்பத்துக்குள் செலுத்தியிருந்தனர். மறுபக்கமாக, லூகா மோட்ரிச், அன்ட்ரே கிரமரிச், இவான் றகிட்டிச் ஆகியோர் தங்களது பெனால்டிகளை கோல் கம்பத்துக்குள் செலுத்த, மிலான் பாடில், ஜோசெப் பிவரிச் ஆகியோரின் பெனால்டிகளை கஷ்பர் ஷுமைக்கல் தடுத்திருந்தார். அந்தவகையில், பெனால்டியில் 3-2 என்ற ரீதியில் வெற்றிபெற்ற குரோஷியா காலிறுதிப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றது.

இதேவேளை, நேற்று இடம்பெற்ற ஸ்பெய்ன், ரஷ்யாவுக்கிடையிலான மற்றொரு இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியின் வழமையான நேர முடிவிலும் மேலதிக நேரத்திலும் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்று சமநிலையில் இருந்த நிலையில், காலிறுதிக்குச் செல்லும் அணி பெனால்டியில் தீர்மானிக்கப்பட்ட நிலையில், 4-3 என்ற ரீதியில் பெனால்டியில் ஸ்பெய்னை வென்ற ரஷ்யா காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுக் கொண்டது.

குறித்த போட்டியின் வழமையான நேரத்தில், ரஷ்யா சார்பாகப் பெறப்பட்ட கோலை அர்டெம் ஸூபா பெற்றதுடன், ஸ்பெய்னுடைய கோல் ஓவ்ண் கோல் முறையில் கிடைக்கப் பெற்றிருந்தது. பெனால்டியில், ஸ்பெய்னின் கொகே, லாகோ அஸ்பஸ் ஆகியோரின் உதைகளை ரஷ்யாவின் கோல் காப்பாளரும் அணித்தலைவருமான ஈகர் அக்கினியேவ் தடுத்திருந்தார். அன்ட்ரேஸ் இனியஸ்டா, ஜெராட் பிகே, அணித்தலைவர் சேர்ஜியோ றாமோஸ் ஆகியோர் தமதுதைகளை கோல் கம்பத்தினுள் செலுத்தியிருந்தனர். மறுபக்கமாக, ரஷ்யாவின் பயோடர் ஸ்மோலொவ், சேர்ஜியே அக்னாஷ்சிவா, அலெக்ஸான்டர் கொலோவின், டெனிஸ் ஷேர்ஷெவ் ஆகியோர் தமதுதைகளை கோல் கம்பத்துக்குள் செலுத்தியிருந்தனர்.


டென்மார்க்கை வென்று காலிறுதியில் குரோஷியா

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.