தென்னாபிரிக்கா எதிர் இந்தியா: இரண்டாவது டெஸ்ட் நாளை

தென்னாபிரிக்க, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி செஞ்சூரியனில் இலங்கை நேரப்படி நாளை மதியம் 1.30 மணிக்கு ஆரம்பமாகின்றது.

அண்மைய காலங்களில் பெரும்பாலும் சொந்த மண்ணிலேயே போட்டிகளில் விளையாடியிருந்த இந்திய அணி இத்தொடரில் சவாலை எதிர்கொள்ளும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், முதலாவது போட்டியில் பெற்ற தோல்வியைத் தொடர்ந்து இச்சவால்கள் மேலும் அதிகரித்துள்ளன.

குறிப்பாக, அஜின்கியா ரஹானே, லோகேஷ் ராகுலைத் தாண்டு முறையே ரோகித் ஷர்மா, ஷீகர் தவானை அணியில் தெரவு செய்தது கேள்விகளை எழுப்பியிருந்தது. எனினும் இவர்கள் ஒரு போட்டியைத் தொடர்ந்து அணியிலிருந்து நீக்கப்படமாட்டார்கள் எனக் கருதப்படுகிறது. முதலாவது போட்டியில் விளையாடிய அதே அணியே இரண்டாவது போட்டியிலும் விளையாடும் வாய்ப்புகள் காணப்படுகின்றன.

இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயற்பட்டிருந்த நிலையில், இந்திய அணியின் தலைவர் விராத் கோலி ஓட்டங்களைப் பெற்றாலே போட்டி முடிவு மாறக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.

அடுத்து, தென்னாபிரிக்க அணி காயம் காரணமாக டேல் ஸ்டெய்னை இழந்துள்ளபோதும் கிறிஸ் மொறிஸ், அன்டிலி பெக்லுவாயோ, டுவன்னே ஒலிவர், லுங்கி என்கிடி என நான்கு வேகப்பந்துவீச்சாளர்களை அவரின் பிரதியீட்டுக்காக கொண்டு பலமானதாகக் காணப்படுகிறது. இதில், கிறிஸ் மொறிஸே டேல் ஸ்டெய்னை பெரும்பாலும் பிரதியீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

துடுப்பாட்டப் பக்கம், ஏ.பி டி வில்லியர்ஸ் டெஸ்ட் போட்டிகளுக்கு மீளத் திரும்பியுள்ளமையே முதலாவது போட்டியை தென்னாபிரிக்க அணியின் பக்கம் குறிப்பிடத்தக்களவுக்கு மாற்றியமையை வரவேற்பதுடன், கடந்த இரண்டு போட்டிகளிலும் பிரகாசிக்காத ஹஷிம் அம்லாவிடமிருந்து ஓட்டங்களை எதிர்பார்க்கின்றது.

எதிர்பார்க்கப்படும் தென்னாபிரிக்க அணி: 1. டீன் எல்கர், 2. ஏய்டன் மர்க்ரம், 3. ஹஷிம் அம்லா, 4. ஏ.பி டி வில்லியர்ஸ், 5. பப் டு பிளெஸி (அணித்தலைவர்), 6. குயின்டன் டி கொக் (விக்கெட் காப்பாளர்), 7. வேர்ணன் பிலாந்தர், 8. கேஷவ் மஹராஜ், 9. கிறிஸ் மொறிஸ், 10. கஜிஸ்கோ றபடா, 11. மோர்னி மோர்கல்.

எதிர்பார்க்கப்படும் இந்திய அணி: 1. முரளி விஜய், 2. ஷீகர் தவான், 3. செட்டேஸ்வர் புஜாரா, 4. விராத் கோலி (அணித்தலைவர்), 5. ரோகித் ஷர்மா, 6. ஹர்டிக் பாண்டியா, 7. ரித்திமான் சஹா (விக்கெட் காப்பாளர்), 8. இரவிச்சந்திரன் அஷ்வின், 9. புவ்னேஷ்வர் குமார், 10. மொஹமட் ஷமி, 11. ஜஸ்பிரிட் பும்ரா.


தென்னாபிரிக்கா எதிர் இந்தியா: இரண்டாவது டெஸ்ட் நாளை

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.