’நீண்ட காலத்துக்கு நினைவுகூரப்படும்’

சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில், இந்தியாவைத் தோற்கடித்து பாகிஸ்தான் சம்பியனாகியுள்ள நிலையில், குறித்த வெற்றியானது நீண்ட காலத்துக்கு நினைவு கூரப்படும் என நம்புவதாக, பாகிஸ்தான் அணியின் தலைவர் சப்ராஸ் அஹமட் தெரிவித்துள்ளார்.

மேலும், சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் சம்பியனாகியமையைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் விளையாடுவதற்கு, ஏனைய நாடுகள் வரும் என நம்புவதாகவும், சப்ராஸ் அஹமட் கூறியுள்ளார்.

2009ஆம் ஆண்டு, பாகிஸ்தானுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை அணியின் பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு ஏனைய நாடுகள் செல்லுவதில்லை என்ற நிலையில், சிம்பாப்வே மட்டுமே ஒரு முறை சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கருத்துத் தெரிவித்த, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், இந்திய அணியின் முன்வரிசைத் துடுப்பாட்ட வரிசையைத் தகர்த்தால், இந்த சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் அதிகம் துடுப்பெடுத்தாடியிருக்காத மத்திய வரிசையை வெளிப்படுத்தலாம் என அணிக் கூட்டத்தின்போது தாங்கள் கதைத்தாகவும், அதைச் செய்யக் கூடிய வீரராக மொஹமட் ஆமிர் இருந்ததாகவும், பெரிய போட்டிகளில், சிறப்பாகச் செயற்படக்கூடிய திறனை அவர் கொண்டிருந்ததாகவும் கூறினார்.

இந்திய அணியின் முன்வரிசைத் துடுப்பாட்ட வீரர்களான, ஷீகர் தவான், றோகித் ஷர்மா, விராத் கோலியின் விக்கெட்டுகளை, முதல் 10 ஓவர்களுக்குள்ளேயே ஆமிர் கைப்பற்றிய நிலையிலேயே, அதன்பின்னர் தடுமாறிய இந்தியா, தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் அதிரடியாகச் சதம் பெற்று, இறுதிப் போட்டியின் நாயகனாகத் தெரிவாகிய ஃபக்கார் ஸமான், இறுதிப் போட்டிக்கு முதல் நாள் இரவு, இறுதிப் போட்டியில் தான் விளையாடுவேன் என நினைத்திருக்கவில்லை என்று கூறியுள்ளார்.

உடல்நிலை சரியில்லாததைத் தொடர்ந்து, பயிற்சியிலிருந்து, கடந்த சனிக்கிழமை (17) வெளியேறிய ஸமான், பின்னர் சில தடவைகள் வாந்தி எடுத்ததுடன், இறுதிப் போட்டியை தான் தவறவிடுவேன் என பாகிஸ்தான் மருத்துவ அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

எனினும், வயிறு சரியாவதற்கு மருந்துகள் வழங்கப்பட்ட பின்னர், நன்றாகத் தூங்கிய பின்னர், இறுதிப் போட்டியன்று காலை ஏழு மணியளவில், தான் உடற்றகுதியுடன் இருப்பதாக ஸமான் கூறியுள்ளார்.

இதேவேளை, மொஹமட் ஆமிரின் பந்துவீச்சில், இந்திய அணியின் தலைவர் விராட் கோலி கொடுத்த பிடியெடுப்பைத் தவறவிட்ட அஸார் அலி, அடுத்த பந்தில் கோலி ஆட்டமிழந்த பின்னர், உலகில் மிகவும் நிம்மதியான நபராக தான் இருந்ததாகக் கூறியுள்ளார்.


’நீண்ட காலத்துக்கு நினைவுகூரப்படும்’

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.