2019 ஒக்டோபர் 16, புதன்கிழமை

விம்பிள்டன் டென்னிஸ் தொடர்: அரையிறுதியில் பலப்பரீட்சை நடாத்தவுள்ள நடால், பெடரர்

Editorial   / 2019 ஜூலை 12 , மு.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவின் தலைநகர் இலண்டனில் இடம்பெற்றுவரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இன்று இடம்பெறவுள்ள அரையிறுதிப் போட்டியில், 20 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ரொஜர் பெடரரை, 18 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ரபேல் நடால் எதிர்கொள்கிறார்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற தத்தமது காலிறுதிப் போட்டிகளில் முறையே உலகின் ஏழாம்நிலை வீரரான கீ நிஷிகோரி, ஐக்கிய அமெரிக்காவின் சாம் குவாரேயை வென்றே அரையிறுதிப் போட்டிக்கு உலகின் மூன்றாம்நிலை வீரரான பெடரர், உலகின் இரண்டாம் நிலை வீரரான நடால் தகுதிபெற்றிருந்தனர்.

ஜப்பானின் கீ நிஷிகோரியுடனான தனது அண்மைய சந்திப்பில் நேர் செட்களில் தோல்வியைத் தளுவியிருந்ததுடன், குறித்த காலிறுதிப் போட்டியில் 4-6 என முதலாவது செட்டை இழந்தபோதும், 6-1, 6-, 6-4 என அடுத்த மூன்று செட்களையும் வென்று விம்பிள்டனில் 100 வெற்றிகளைப் பெற்ற முதல்வீரராக தனது பெயரை சுவிற்ஸர்லாந்தின் பெடரர் பதிந்து கொண்டார்.

இதேவேளை, சாம் குவாரேயை 7-5, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் ஸ்பெய்னின் நடால் வீழ்த்தியிருந்தார்.

அந்தவகையில், 2006, 2007, 2008ஆம் ஆண்டு விம்பிள்டன் இறுதிப் போட்டிகளில் சந்தித்துக் கொண்ட பின்னர் தற்போது முதற்தடவையாக விம்பிள்டனில் பெடரரும், நடாலும் சந்திக்கவுள்ளன. 2006, 2007ஆம் ஆண்டுகளில் பெடரர் வென்றிருந்த நிலையில், 2008ஆம் ஆண்டு நடால் வென்றிருந்தார். மொத்தமாக 39 தடவைகள் நடாலும், பெடரரும் இதுவரை சந்தித்துள்ள நிலையில், அண்மைய பிரெஞ்சுப் பகிரங்க அரையிறுதிப் போட்டி உள்ளடங்கலாக 24 தடவைகள் நடால் வென்றுள்ள நிலையில், 15 தடவைகள் பெடரர் வென்றுள்ளார்.

இதேவேளை, இன்று இடம்பெறவுள்ள மற்றைய அரையிறுதிப் போட்டியில் ஸ்பெய்னின் றொபேர்ட்டோ பட்டிஸ்டா அகட்டை, நடப்புச் சம்பியன் நொவக் ஜோக்கோவிச் எதிர்கொள்ளவுள்ளார்.

பெல்ஜியத்தின் டேவிட் கொபினை 6-4, 6-0, 6-2 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு உலகின் முதல்நிலைவீரரான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச் தகுதிபெற்றிருந்த நிலையில், ஆர்ஜென்டீனஆவின் குவைடோ பெல்லாவை 7-5, 6-4, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று றொபேர்ட்ட்டோ பட்டிஸ்ட்டா அகட் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .