2ஆவது டெஸ்ட் இன்று ஆரம்பிக்கின்றது

இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கிடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட், லோர்ட்ஸில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகின்றது.

ஏற்கெனவே இத்தொடர் பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்டதோடு, முதலாவது போட்டி மிகவும் மிகவும் விறுவிறுப்பாய் அமைந்து இந்திய அணித்தலைவர் விராத் கோலி ஓட்டங்களைக் குவித்துள்ள நிலையில் இரண்டாவது டெஸ்ட் மிகவும் எதிர்பார்க்கப்படுமொன்றாய் மாறியுள்ளது.

முதலாவது டெஸ்டில், விராத் கோலி தவிர மற்றைய இந்திய வீரர்கள் எவரும் சொல்லிக் கொள்ளும்படியாக ஓட்டங்களைப் பெற்றிருக்காத நிலையில், இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசை அதிகம் கவனம் பெறுகின்றது. எவ்வாறாயினும் ஒவ்வொரு போட்டியிலும் அடிக்கடி அணியில் மாற்றம் செய்கின்றார் என்ற குற்றச்சாட்டு விராத் கோலி மீது முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், முதலாவது போட்டியில் விளையாடிய அதே இந்திய அணியே இப்போட்டியிலும் களமிறங்கினாலும் ஆச்சரியப்படுவதுக்கில்லை.

இருந்தபோதும் செட்டேஸ்வர் புஜாரா அணிக்குள் வருவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. எனினும் அவர் யாரைப் பிரதியீடு செய்வதென்பதே சிக்கலுக்குரியதாகக் காணப்படுகின்றது. அண்மைய போட்டிகளில் சொல்லிக் கொள்ளும்படியாக ஓட்டங்களைப் பெற்றிருக்காத இந்திய அணியின் உப தலைவர் அஜின்கியா ரஹானேயை அதிரடியாக செட்டேஸ்வர் புஜாரா பிரதியீடு செய்யக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. இது தவிர, இளம் வீரர் றிஷப் பண்டை அஜின்கியா ரஹானேக்குப் பதிலாக களமிறக்கி அதிர்ச்சி அளிக்கக்கூடிய சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.

பந்துவீச்சுப் பக்கம் மாற்றம் இருக்காது என நம்பப்படுகின்றது. ஏனெனில், ஐக்கிய இராச்சியத்தில் நடப்பு கோடை காலத்தில் வெப்பமான காலநிலையே காணப்பட்டபோதும் இப்போட்டி நடைபெறும் முதல் நான்கு நாட்களும் ஓரளவு குளிரான வானிலையே காணப்படும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. ஆகவே, இரண்டு சுழற்பந்துவீச்சாளர்கள் களமிறங்கும் வாய்ப்பு அரிதாகவே காணப்படுகின்றது. இதுதவிர, இத்தொடரின் முதல் மூன்று போட்டிகளுக்கான இந்தியக் குழாமில் இடம்பெற்றிருந்த வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, உடற்றகுதியைப் பொறுத்து இரண்டாவது டெஸ்டிலிருந்து அணித்தேர்வில் கருத்திற் கொள்ளப்படுவார் என்று கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது இரண்டாவது டெஸ்டில் அவர் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே, முதலாவது டெஸ்டில் விளையாடிய அதே பந்துவீச்சுக் குழுவே இப்போட்டியில் விளையாடுமெனக் கூறப்படுகிறது.

மறுபக்கமாக இங்கிலாந்து அணி, விசாரணை காரணமாக பென் ஸ்டோக்ஸை இழந்துள்ளமை பேரிழப்பாகவே காணப்படுகின்றது. பென் ஸ்டோக்ஸுக்குப் பதிலாக கிறிஸ் வோக்ஸும் டேவிட் மலனுக்குப் பதிலாக ஒலி போப்பும் களமிறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அணியில் வேறு எந்த மாற்றங்களும் இருக்காது என நம்பப்படுகிறது.

 


2ஆவது டெஸ்ட் இன்று ஆரம்பிக்கின்றது

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.