2021 மார்ச் 04, வியாழக்கிழமை

'வாசிப்பே அறிவுப் பொருளாதார அபிவிருத்தியை கட்டியெழுப்பும்'

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 31 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


 -ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஆரோக்கியமான வாசிப்பே தேசிய அபிவிருத்திக்கான பயணத்தில் அறிவுப் பொருளாதார யுகத்தைக்; கட்டியெழுப்பும் ஆயுதமாகும் என கிழக்கு மாகாண நூலக, தகவல் விஞ்ஞான ஒருங்கிணைப்பாளரும் கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட நூலக அதிகாரியும் விரிவுரையாளருமான தீசன் ஜெயராஜ் தெரிவித்தார்.

தேசிய வாசிப்பு மாதத்தினையொட்டிய இறுதிநாள் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் அமைந்துள்ள ஏறாவூர் அரபா வித்தியாலய நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'சமகால யுக நகர்வுகளில், எந்தவொரு மனிதனும் ஏதோவொரு வகையிலும் அளவிலும் 'அறிவு' எனும் பொக்கிஷத்தை தனக்குள் தக்கவைத்திருக்க வேண்டியது மிக அவசரமானதும் அவசியமானதுமான தேவைப்பாடாகும். ஏனெனில், தற்காலப் பொருளாதார நிலையானது கடந்த காலத்தைவிட முற்றிலும் வேறுபட்டதாகும்.

முற்காலத்து கைத்தொழில் யுகத்தைப் புறந்தள்ளி, அதன் பிரதியீடாக தகவல் யுகம் ஊடறுத்து வந்து, இன்று அதுவும் போய் 'அறிவு யுகம்' மேற்கிளம்பி நிற்கிறது.

ஒரு நாட்டின் தர நிர்ணயமானது, அந்நாட்டின் எழுத்தறிவு வீதத்தையும் பொருளாதார முன்னேற்றத்தின் அளவுகோலையும் வைத்தே தீர்மானிக்கப்படுகின்றமை நாம் அறிந்ததே.  இலங்கையின் எழுத்தறிவு வீதம் 91.2 வீதமாகக்  காணப்படுகிறது. இலங்கை நாடே தெற்காசியாவில் எழுத்தறிவு வீதம் கூடிய நாடாகும்.

எமக்கெல்லாம் இதனால் எவ்வளவு பெருமையாயிருக்கிறது. அதிலும், இலங்கையில் 15 தொடக்கம்  24 வயதுக்கு இடைப்பட்ட பெண்களே மிக அதிகமான எழுத்தறிவு வீதம் அதாவது 98.6 வீதம், அதற்கடுத்த நிலையில் ஆண்கள் 97.7 வீதமுமாகக் காணப்படுகின்றனர். இதனை அதிகரிக்க இன்னும் நாம் முயற்சிக்க வேண்டும்.

ஒரு மொழியின் திறனை முழுமையாக நாம் உள்வாங்கிக்கொள்வதற்கு செவிமடுத்தல்;, பேசுதல், வாசித்தல், எழுதுதல் எனும் நான்கு திறன்களும் நாம் பெற்றிருக்கவேண்டும். அதில் எழுத்தறிவு என்கின்றபோது வாசித்தல், எழுதுதல் எனும் இரு முக்கிய திறன்களும் கணக்கிலெடுக்கப்படுகின்றன. வாசிக்கவும் எழுதவும் எந்தளவுக்கு மிக அதிகமான திறனை நாம் கொண்டிருக்கிறோமோ, அதுவே எமக்கான எழுத்தறிவின் அளவை அதிகப்படுத்தும்.  இதன் மூலமாகவே தேசிய அபிவிருத்திக்கான பொருளாதாரக் கட்டமைவை வடிவமைக்கும் ஒரு சிறந்த குடிமகனாக ஒவ்வொருவரையும் கட்டியெழுப்பமுடியும். அதன் மூலமாகவே எமது அழகிய நாட்டின் அறிவுப் பொருளாதாரத்தை ஆரோக்கியமாக வளரத்தெடுக்கமுடியும். ஆகவே, அதிகம் வாசிக்க வேண்டும்.

உலகமயமாதலின் விளைவு இன்று எம்மை குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட முடியாதபடி, எம்மை தினம் தினம் இயங்கு நிலையில் வைத்திருக்கத் தூண்டுகிறது.  அனைத்தும் எமக்குத் தெரிந்திருக்கவேண்டும். அதற்கு நாம் அதிகம் உலகத்தை வாசிக்க வேண்டியிருக்கிறது.

அறிவுடைமைச் சமூகத்தின் அங்கத்தினராகிய நாம் ஒவ்வொருவரும் நல்ல நூலகத்தையும் சிறந்த நூல்களையும் தெரிவு செய்து, வாசிப்பதற்கான ஆரோக்கியமான சூழலைத் தயார் செய்து எம் மனங்களை ஒருமுகப்படுத்தி ஆழமாய் ஆய்ந்துணர்ந்து வாசிக்க வேண்டும். அறிவின் அறுவடைக்கான விளைநிலங்களாக எமக்கு நூலகங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன.  கல்வி, தகவல், கலாசாரம், பொழுதுபோக்குசார் நாட்டங்களைத் தேவையறிந்து பக்குவமாய் தந்து நிற்கும் வாசிப்புக்கூடமான நூலகங்களைத் தரிசியுங்கள். ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதான் வளர்ச்சி. அறிவுக்கு வாசிப்புத் தேவை' என்றார்.

இந்த நிகழ்வில் ஏறாவூர் நகரசபை விவேகானந்தா நூலகர் ரீ.சிவராணி, ஏறாவூர் அரபா வித்தியாலய நூலகக்குழு ஒருங்கிணைப்பாளர் எம்.ஐ.பாத்திமா, நூலகர் ஏ. சஹாப்தீன், எம்.ஏ.மிஹாரா, ஏறாவூர் நகரசபை உறுப்பினர் ஐ.அப்துல் வாஸித் உள்ளிட்டோரும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .