அடாவத்தை தோட்ட விவகாரத்தை நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரத் திட்டம்

க.ஆ.கோகிலவாணி

லுணுகலை - அடாவத்த தோட்ட விவகாரத்தை, நாடாளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுசெல்ல உள்ளதாகத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், அடாவத்த தோட்ட விவகாரத்துக்கு தீர்வைப் பெற்றுத்தரும் வரை, சம்பந்தப்பட்ட மக்களை வெளியேற்ற வேண்டாமென்று, தோட்ட முகாமையாளர், பொலிஸார் மற்றும் லுணுகலை பிரதேச சபை உறுப்பினர்களுக்குத் தான் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறினார்.

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் லுணுகலை பிரதேச அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான வடிவேல் சுரேஷ் தலைமையில், லுணுகலை பிரதேச சபை அபிவிருத்திக் கூட்டம், லுணுகலை பிரதேச செலயகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதன்போது, அடாவத்த தோட்ட விவகாரம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கூட்டம் தொடர்பில் தொடர்புகொண்டு கேட்டபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்துத் தொடர்ந்து கூறிய அவர், அடாவத்தை தோட்ட விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்காக, அந்தப் பகுதிக்குத் தான் நேற்று முன்தினம் நேரடி விஜயம் செய்ததாகவும் பெருந்தோட்டமொன்றுக்கு உட்பட்ட அரசாங்கக் காணியாக இருந்தாலும் கூட, அந்தக் காணியைத் தோட்டத்திலுள்ள வீடற்றவர்களுக்கே பகிர்ந்தளிக்க வேண்டும் என்றுத் தெரிவித்தார்.

தோட்டக் காணிகள் வெளியாருக்குப் பகிர்ந்தளிக்கப்படுமாயின், இவ்வாறான நிலைமைகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்றும், அவர் கூறினார்.

மேற்படி காணியில், வெளியார் குடியேற்றப் பட்டமையாலேயே, தோட்ட மக்கள் பலவந்தமாகக் குடியேறியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே, குறித்த காணியை, தோட்ட மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த அவர், அதுவரை அந்த மக்களை, ஒருவரும் தொந்தரவு செய்யக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, காணி விவகாரத்துக்கு தீர்வைப் பெற்றுத்தரும்வரை, காணிகளில் குடியிருப்பவர்கள், வீடுகளையோ அல்லது வேறு எந்தக் கட்டட நிர்மாணப் பணிகளிலோ ஈடுபடக்கூடாது என்றும் அவர் அறிவுத்தியுள்ளார். அவ்வாறு ஈடுபட்டால், அது சட்டவிரோதமான செயலென்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

லுணுகலை - அடாவத்த தோட்டத்தை அண்மித்து அமைந்துள்ள அரசாங்கத்துக்குச் சொந்தமான சுமார் 22 ஏக்கர் காணியை, தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 40 குடும்பங்கள் பலவந்தமாகப் பிடித்துக்கொண்டுள்ளதுடன், அந்தக் காணியில், தற்காலிகக் குடியிருப்புகளையும் அமைத்துக்கொண்டுள்ளன.

இதற்கெதிராக, அடாவத்த தோட்ட முகாமையாளர், பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன், முறைப்பாட்டுக்கு அமைவாக, பொலிஸார் மற்றும் பல அதிகாரிகள், மேற்படி குடும்பங்களை வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
அத்துடன், மேற்படி காணியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் குடியிருப்புகளும், பலவந்தமாக அகற்றப்பட்டதாகத் தெரியவருகிறது.


அடாவத்தை தோட்ட விவகாரத்தை நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரத் திட்டம்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.