X

X

“போராட்டம் மூலம் நியாயமான சம்பளத்தைப் பெற்றுத்தருவோம்” - பழனி திகாம்பரம்

பி.கேதீஸ்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று காணப்படும் பாரிய பிரச்சினையாக, சம்பள பிரச்சினையே காணப்படுகின்றது என்றும், அனைத்து மலையக மக்களும் அணிதிரண்டு தன் பின்னால் வந்தால், தானும், அமைச்சர் மனோகணேசன், அமைச்சர் இராதாகிருஸ்ணன் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து, பெருந்தோட்ட கம்பனிக்கு எதிராக, பாரிய போராட்டம் ஒன்றை செய்து, நியாயமான சம்பளத்தை பெற்றுத்தருவோம் என, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதி தலைவரும், மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

இன்று (07), தலவாக்கலை நகரின், நகரசபை மைதானத்தில் நடைபெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதினப் பேரணி மற்றும் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து நடாத்திய இந்த மேதின விழாவில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோகணேசன், முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான இராதாகிருஸ்ணன், அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, த.மு.கூட்டணியின் செயலாளர் நாயகம் லோரன், த.மு.கூட்டணியின் நுவரெலியா, பதுளை, கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான திலகராஜ், வேலுகுமார், அரவிந்தகுமார் மற்றும் த.மு.கூட்டணியின் மாகாணசபை பிரதேசசபை உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துக்கொண்டார்கள்.

அமைச்சர் திகாம்பரம் தொடர்ந்து உரையாற்றுகையில், “மலையக வரலாற்றிலே எத்தனையோ கட்சிகளும் எத்தனையோ தலைவர்களும் இருந்தார்கள். ஆனால் இந்த தமிழ் முற்போக்கு கூட்டணி வந்த பின்னர்தான், மலையக மக்களுக்கு விமோசனம் கிடைத்துள்ளது. 7 பேர்ச்சஸ் காணியில் தனி வீடும், அதற்கான உறுதி பத்திரமும் கிடைக்கப்பெற்றது. இத்தனை ஆண்டுகள் மலையகத்தை பிரதிநிதித்துவம் செய்த மலையக தலைவர்கள், இதனை செய்தார்களா? மதுபான போத்தல்களையும், சாப்பாடு பொதிகளையும் கொடுத்து, மலையக மக்களை ஏமாற்றிய காலம் கடந்து விட்டது. இன்னும் மலையக மக்கள் அடிமையல்ல. ஆனால் சிலர் நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலிலே, எமது தமிழ் மக்களை கொன்று குவித்த மஹிந்த ராஜபக்ஷவோடு சேர்ந்து, உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றிவிட்டு வீரம் பேசுகின்றனர். தமிழ் முற்போக்கு கூட்டணி அப்படி நினைத்திருந்தால் உள்ளூராட்சி சபைகள் அனைத்தையுமே கைப்பற்றி இருக்கும்” என்று தெரிவித்தார்.

மேலும், “இன்று நுவரெலியாவில் நடைபெறும் மேதின கூட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களான நான், அமைச்சர் மனோகணேசன், அமைச்சர் இராதாகிருஸ்ணன் ஆகிய மூவரையும் பற்றிதான் பேசுவார்கள். ஆனால் நானும் எனது கூட்டணியும் அப்படியல்ல. எங்கள் கூட்டணி மக்கள் கூட்டணி. மலையக இளைஞர்களே நீங்கள் யாருக்கும் பயப்படாதீர்கள். உங்களை ஒரு காலத்தில் அடித்து கட்டுபாட்டுக்குள் வைத்திருக்க சிலர் வந்தார்கள். அப்போது உங்களைக் காப்பாற்ற யாருமே வரவில்லை. ஆனால் இன்று அவ்வாறான ஒரு சூழ்நிலை வருமானால், உங்களை காப்பாற்ற நான் இருக்கின்றேன். நான் வாழ்ந்தாலும் உங்களோடுதான் வாழ்வேன். இறந்தாலும் உங்களோடுதான் இறப்பேன்” என்றார்.

தொடர்ந்தும், “கடந்த ஜனாதிபதி தேர்தலிலே தமிழ் முற்போக்கு கூட்டணி முன் வைத்த கோரிக்கைகளுக்கு அமைவாக, தனி வீட்டுத் திட்டத்தையும் அதற்கான காணி உறுதிகளையும் வழங்கி மக்களுக்கு மகத்தான சேவை செய்து வருகின்றது” என்று தெரிவித்த அமைச்சர், “நாங்கள் யாரையும் ஏமாற்ற வில்லை. 2020ஆம் ஆண்டுக்குள் 50 ஆயிரம் வீடுகளை கட்டி முடித்து விட்டே மக்களிடம் வாக்குகள் கேட்க நான் வருவேன்” என்று மேலும் தெரிவித்தார்.


“போராட்டம் மூலம் நியாயமான சம்பளத்தைப் பெற்றுத்தருவோம்” - பழனி திகாம்பரம்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.