‘வெற்றியை தடுக்கும் காழ்ப்புணர்ச்சி’

வரதராஜன் யுகந்தினி   

“எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் 100 சதவீத வெற்றியடையும் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் இல்லை. இந்த வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாத சிலர், பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து மக்களை குழப்ப முற்பட்டுகின்றனர்” என இலங்கைத் ​தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் பி.சக்திவேல் தெரிவித்தார்.   

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமிய பவானில், நேற்று (09) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே, அவர் இதைத் தெரிவித்தார்.   

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,   

“உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சேவல் சின்னத்தில் தனித்தும், சில பகுதிகளில் வெற்றிலைச் சின்னத்தில் ஜனாதிபதியுடன் இணைந்தும் போட்டியிடுகின்றோம். அந்த வகையில், மக்களும் அரசியல் தொழிற்சங்கப் பேதங்களை மறந்து, எமக்கு ஆதரவை வழங்கி வருகின்றனர். இந்த வெற்றியின் உறுதியைக் கண்ட ஏனைய அரசியல்வாதிகள் மற்றும் எதிரானவர்கள் குறித்த வெற்றியை குழப்புவதற்காக அவர்களுடைய வேட்பாளர்களுக்கு புதிய யூகங்களை வகுத்துக்கொடுத்துள்ளனர் என்பதை மக்களுக்கு பகிரங்கமாக அறியத்தருகின்றோம்.   

 “பணம் கையூட்டல் அண்மையில் இடம்பெற்றுள்ளது. அதாவது, நுவரெலியா, கொட்டகலை பிரதேசங்களில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்களை அழைத்து, அவர்களுக்குப் பணம் வழங்கி இருக்கின்றனர். அதற்கு எதிராக காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகம் தொண்டமான் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளரிடம் எமுத்து மூலம் முறையிட்டுள்ளார்.   

“மேலும், இந்தத் தேர்தலில் வெற்றிப்பெற முடியாத சில வேட்பாளர்கள், தங்களுடைய சொத்துக்களுக்குத் தாங்களே சேதங்களை விளைவித்துக்கொண்டு, தங்கள் மீது வீனான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.   

 “இந்தவகையில் நேற்று முன்தினம் (08) கொட்டக்கலை, கொமர்ஷல் பகுதியிலுள்ள பெண் வேட்பாளர் ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்த தாக்குதலையும் இ.தொ. கா உறுப்பினர்கள் நடத்தியதாகத் தெரிவித்துள்ளனர்.   

“உண்மையில் இந்தத் தாக்குதல் தொடர்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸூக்கோ, எமது வேட்பாளர்களுக்கோ, ஆதரவாளர்களுக்கோ அல்லது எம்மைச்சார்ந்தவர்களுக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என்பதை பகிரங்கமாகத் தெரியப்படுத்துகின்றோம்.   

“இவ்வாறு எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துக்கொண்டு, மலையகத்தில் மீண்டும் மதுபானங்களை மக்களுக்கு வழங்கி, அவர்களைத் தவறான வழியில் நடத்திச்செல்கின்றார்கள். அதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.   

ரமேஸ்வரன் கருத்து   

இதனையடுத்து, இலங்கைத் ​தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினரும் மத்திய மாகாண விவசாயத்துறை அமைச்சருமான ரமேஸ்வரன் கருத்துத் தெரிவிக்கையில்,   

“நாங்கள், இம்முறை மலையகப்பகுதியில் 100 சதவீத வெற்றி​யை நிச்சயம் பெற்றுக்கொள்வோம். ஆனால், ஒருசில அரசியல்வாதிகள் வன்முறைகளில் ஈடுபட்டுவிட்டு இறுதியில் எங்களை கை நீட்டுகின்றார்கள். அதை வண்மையாகக் கண்டிக்கின்றோம்.   

“அத்துடன், பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான், தேர்தல் சட்ட விதிமுறைகளை மதித்து நடப்பவர் அதனால், எங்களது வேட்பாளர்களையும் தேர்தல் சட்டங்களை மதித்து நடக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

“ஆனால், ஒருசில அரசியல்வாதிகள், மக்களை மதுவுக்கு அடிமையாக்கி, தங்களுடைய வெற்றியை நிலைநிறுத்துவதற்கு முயற்சிக்கின்றனர்.   

 “இருப்பினும், இன்று மக்கள் ​தெளிவுபெற்றவர்களாக திகழ்கின்றமையால் இத்தகைய அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டுவார்கள் என நான் நம்புகின்றேன்” என்றார்.    


‘வெற்றியை தடுக்கும் காழ்ப்புணர்ச்சி’

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.