2019 டிசெம்பர் 16, திங்கட்கிழமை

34 குடும்பங்களுக்கும் உறுதிமொழி

Editorial   / 2019 பெப்ரவரி 12 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ். பி.சிவா

 

துரித மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் வெளியேற்ற ப்பட்ட கொத்மலை பிரதேச செயலகத்துக்குட்பட்ட மூன்று தோட்டங்களைச் சேர்ந்த 34 குடும்பங்களுக்கும்,  எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர், உரிய தீர்வொன்று வழங்கப்படுமென உறுதியளிக்கப்பட்டுள்ளது.

மேற்படி திட்டத்தினால், பாதிக்கப்பட்ட 34 குடும்பங்களுக்கும், திஸ்பனை, கொலப்பத்தனை ஆகிய பகுதிகளில், காணிகளை ஒதுக்கி, மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சினூடாக வீடுகளை நிர்மாணிப்பதற்கு, நடவடிக்கைகளை எடுப்பதாக, கொத்மலை பிரதேச சபையின் உதவிச் செயலாளர் யூ.டபிள்யூ சௌமியகுமாரி உறுதியளித்துள்ளார்.

தமது பிரச்சினைக்கு, எதிர்வரும் 24ஆம் திகதிக்குள் தீர்வைப் பெற்றுத்தருமாறும் இல்லை​யேல் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கப்போவதாகவும் பாதிக்கப்பட்ட 34 குடும்பங்களும், அரசாங்கத்துக்கு காலக்கெடு விதித்திருந்த நிலையிலேயே, நேற்று (11) இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

கொத்மலை பிரதேச செயலகத்தின் அபிவிருத்திக் குழுக்கூட்டம், நேற்று(11) இடம்பெற்றது.

பாதிக்கப்பட்ட 34 குடும்பங்கள் சார்பாக உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்திவரும், மேற்படி திட்டத்தால்  பாதிக்கப்பட்ட எஸ்.மாரிமுத்து, இந்தப் பிரச்சினை தொடர்பாக, கொத்மலை பிரதேச உதவி செயலாளர் யூ.டபிள்யூ சௌமியகுமாரி, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜின் இணைச் செயலாளரும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான அந்தோணி ராஜ் ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டுவந்திருந்தார்.

கொத்மலை பிரதேச செயலகத்துக்குட்பட்ட நவ திஸ்பனை, மொச்சக்கொட்டை, கட்டுக்கலை ஆகிய தோட்டங்களில், கடந்த 35 வருடங்களாக காணி, வீடுகளின்றி வாழும் 34 குடும்பங்களின் அவலநிலை குறித்து அவர் இதன்போது தெளிவுபடுத்தினார்.

இதையடுத்தே, அந்த 34 குடும்பங்களுக்கும், திஸ்பனை, கொலப்பத்தனை பகுதியில், எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர்,  காணிகளை ஒதுக்கி, மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சினூடாக வீடுகளை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக, பிரதேச உதவிச் செயலாளர் உறுதியளித்துள்ளார்.

அதேநேரத்தில், இம்மக்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கு, அமைச்சர் பழனி திகாம்பரத்தின் அமைச்சினூடாக, 2018ஆம் ஆண்டே நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கான காணிகள் ஒதுக்கிக்கொள்ளும் வேலை மாத்திரமே தற்போது உள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட வாக்குறுதி, 24ஆம் திகதிக்கு முன்னர், நிறைவேற்றப்படாவிடின், ஏற்கெனவே அறிவித்ததைப் போல, எதிர்வரும் 25ஆம் திகதி முதல், உண்ணாவிரதத்தில் ஈடுபடு​வோமென, எஸ்.மாரிமுத்து இதன்போது எச்சரித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .