2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

களுத்துறை மாவட்ட தமிழ் மாணவர்களின் கல்வித்தராதரம் உயர்த்தப்பட வேண்டும் : பிரபா எம்.பி.

Kanagaraj   / 2013 ஜூலை 26 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை மாவட்டத்திலுள்ள பல பாடசாலைகளில் குறைபாடுகள் நிலவுகின்றன. கட்டிட தளபாட ஆசிரியர் பற்றாக்குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். மாணவர்களின் பாடசாலைக்கான வரவு மிகவும் குறைவாகவே உள்ளது. இதில் பெற்றோர்களின் பங்களிப்பு முக்கியமானதாகும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.

களுத்துறை மாவட்டத்திலுள்ள ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு இலவச அப்பியாசப் புத்தகம் கொடுக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
களுத்துறை மாவட்டத்திலுள்ள எலதுவ, யடதொல, சிறிகந்துர, பன்னில்கந்த, எல்லாகந்த, நியூசெட்டல் டெம்போ, கீகினாகந்த நாகல டிவிசன், அல்வத்துர போன்ற தோட்டப்புர மாணவர்களுக்கு இலவச அப்பியாசப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

எனது சொந்த செலவிலேயே இப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. இவ் அப்பியாசப்புத்தகங்களை வழங்குவதன் மூலமாக மட்டும் களுத்துறை மாவட்ட பெருந்தோட்ட மாணவர்களின் கல்வி அறிவை வளர்த்து விட முடியாது என்பது எமக்கு நன்றாக தெரியும்.

இருந்தாலும் கல்வியின் அவசியத்தை வலியுறுத்துவதற்கான அடையாளமாகத்தான் இதனை நான் பார்க்கின்றேன். வடகிழக்கு தமிழ் மக்களின் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு நிகராக மலையக தோட்டப்புர மாணவர்களும் வளரவேண்டும் என்பதே எனது அவாவாகும்.

வடகிழக்கு மக்களைப் பார்த்து பெருந்தோட்டத்துறை பெற்றோர்களும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இங்குள்ள தோட்டப் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் 95 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் வடகிழக்கைச் சார்ந்தவர்களாவர்;. இவர்கள் கொழும்பிலிருந்து களுத்துறை மாவட்ட நகரங்களிலிருந்தும் தினமும் நான்கு மணித்தியாலங்கள் பயணித்து இப்பாடசாலைகளில் கல்வி  பயிற்றுவிக்கின்றார்கள்.

இவர்களது அக்கறையை மனதில் எடுத்துக் கொண்டு பெற்றோர்களும் தம் பிள்ளைகளை தினமும் பாடசாலைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ் இளம் பிள்ளைகள் எதிர்காலத்தில் கல்விமான்களாக திகழ்வார்களேயாயின் எம் சமூகத்திற்கு எந்தவித அரசியல்வாதிகளின் உதவியும் தேவைப்படாது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

களுத்துறை மாவட்டத்திலுள்ள தோட்ட பாடசாலைகளின் பல குறைகளை இன்று நாம் கேட்டறிந்துள்ளோம்.

எமது தொழிற்சங்க பொறுப்பாளரும் தேசிய அமைப்பாளருமான ஆர்.மேகநாதன் ஏற்கெனவே பல பாடசாலைகளின் குறைபாடுகளை பாடசாலை அதிபர்களிடமிருந்து எழுத்து மூலமாக பெற்றிருக்கின்றார்.

இவை அனைத்தும் உடனடியாக மாகாண கல்வியமைச்சரும் முதலமைச்சருமான பிரசன்ன ரணதுங்கவிடம் கையளிக்கப்படும். அதே போல் சம்பந்தப்பட்ட கல்வி வலைய அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்படும்.

களுத்துறை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தோட்டங்களிலிருக்கும் பாடசாலைகளின் அபிவிருத்தி மந்தகதியிலேயே இடம்பெறுகிறது. இதனை நாங்கள் மாற்றியமைப்போம். மேலும் இடம்பெற்ற வைபவங்களில் ஜனநாயக மக்கள் காங்கிரசின் பொதுச் செயலாளர் கலாநிதி சுரேஷ் கங்காதரன், தேசிய அமைப்பாளரும் தொழிற்சங்க பொறுப்பாளருமான ஆர்.மேகநாதன், நிதி ஒதுக்கீட்டுச் செயலாளர் எம்.பிருதிவிராஜ், நிதிச் செயலாளர் இ.ரவீந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X