அரசாங்கத்தில் புத்தரோ, காந்தியோ இல்லை

-எஸ்.நிதர்ஷன்

“தமிழ்த் தரப்புக்கள் அரசாங்கத்துடன் எத்தனையோ ஒப்பந்தங்கள் உடன்படிக்கைகள் செய்தும் அவற்றுக்கு என்ன நடந்ததென்பது அனைவருக்கும் தெரியும். ஆகவே உடன்படிக்கைகளில் எமக்கு நம்பிக்கையும் இல்லை. அவ்வாறான உடன்படிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்தில் கௌதம புத்தர்களோ அல்லது மகாத்மா காந்திகளோ இல்லை” என அரச கரும மொழிகள் மற்றும் தேசிய சகவாழ்வு அமைச்சருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை நாங்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிர்த்திருந்தோம். அதில் பிரதமருக்கு சார்பான நிலைப்பாட்டை எடுப்பதற்கு நாங்கள் பிரதமருடன் எந்த உடன்படிக்கையையும் செய்யவில்லை. ஆனால் கூட்டமைப்பு செய்துள்ளதா எனத் தெரியவில்லை.

ஆயினும் கூட்டமைப்புக்கும் பிரதமருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அந்தப் பேச்சு வார்த்தையில் கூறப்பட்ட விடயங்களை நானும் பார்த்திருக்கின்றேன். அதில் புதிதாக எதனையும் கூட்டமைப்பு கூறவும் இல்லை. அதாவது கடந்த 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசு உருவாக்கப்பட்ட போது கூறியதனையே தற்போதும் மீண்டும் ஞாபகப்படுத்தியிருக்கின்றனர்.

இதேவேளை தமிழர் தரப்புக்கள் இலங்கை அரசாங்கத்துடன் இதுவரை செய்து வந்த ஒப்பந்தங்களுக்ளோ உடன்படிக்கைகளுக்ளோ என்ன நடந்தது என்று தெரியும். அவ்வாறான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டாலும் அவை நடைமுறைப்படுத்துவதில்லை. ஆகவே இந்த ஒப்பந்தங்கள் உடன்படிக்கைகளில் எமக்கு நம்பிக்கையில்லை.

ஆயினும் அவ்வாறான ஒப்பந்தங்கள் உடன்படிக்கைகளை தற்போது செய்து கொண்டாலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதுக்கு அரசாங்கத்தில் கௌதம புத்தர்களோ அல்லது மகாத்மா காந்திகளோ இல்லை. இங்கு தற்போது எல்லாம் அரசியல் பேரம் தான் நடக்கின்றது.

இதேவேளை நல்லாட்சி அரசின் பிரதமருக்கு ஆதரவாக நாங்கள் வாக்களித்திருந்தாலும் எங்களுக்கு அதனை விட வேறு மாற்று வழியும் இல்லை. ஏனெனில் நாங்கள் அவருக்கு எதிரானதொரு நிலைப்பாட்டை எடுத்தால் அது முன்னர் இருந்த ஆட்சியாளர்களுக்கே சாதகமாக அமைந்து விடும். அதனால் தான் விரும்பியோ விரும்பாமலோ நாம் இந்த அரசுடன் தொடர்ந்தும் பயணிக்க வேண்டியுள்ளது” என தெரிவித்தார்.


அரசாங்கத்தில் புத்தரோ, காந்தியோ இல்லை

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.