2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

யாழ் மாவட்டத்தில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பதற்கு வறுமையே காரணம்: இமெல்டா சுகுமார்

Super User   / 2010 டிசெம்பர் 18 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ் மாவட்டத்தில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பதற்கு வறுமையே பிரதான காரணம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

ஊடகவியலாளர்களுடன் நேற்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

அண்மையில் சங்கானையில் நடைபெற்ற திருட்டு மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் முன்னாள் போராளிகள் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதைப் பார்க்கும்போது, இவர்களுக்கு முறையான தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டிய அவசியம் தெளிவாகப் புலப்படுகின்றது என்றார்.

இச்சந்திப்பில், யாழ் மாவட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்படவேண்டியிருக்கின்ற மீள்குடியேற்றப் பணிகள் மற்றும் அவசரமாக முன்னெடுக்கவேண்டிய பணிகள் பற்றி விபரமாக அவர் ஊடகவியலாளர்களுக்கு விளக்கினார்.

தம்முடைய செயற்பாடுகள் தொடர்பாக ஏதேனும் விளக்கமில்லாவிட்டால் தம்முடன் தொடர்புகொண்டு தெளிவுபடுத்திக்கொள்ளுமாறு இதன்போது கேட்டுக்கொண்ட அவர், தவறான வகையில் தகவல்களை வெளியிடவேண்டாம் என்று ஊடகவியலாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயம் என ஒன்று இல்லை என்று வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் தெரிவித்ததாலேயே அரசாங்க அதிபர் குறித்த தப்பான அபிப்பிராயங்கள் எழுந்ததாக இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் சுட்டிக்காட்டியபோது, உயர்பாதுகாப்பு வலயம் என ஒன்று யாழ் மாவட்டத்தில் இல்லை என்று யாழ் மாவட்ட கட்டளைத் தளபதியின் நிலைப்பாட்டை அவர் ஊடகவியலாளர்களுக்கு விளக்கினார்.

உயர் பாதுகாப்பு வலயங்கள் என அறிவிக்கப்பட்டிருந்த பிரதேசங்களுக்குள் துரிதமாக மீள்குடியேற்றங்களை நடத்துமாறு மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க தம்மிடம் கூறியதாகவும், எனினும், கண்ணிவெடி அகற்றும் பணிகளை முடிக்கவேண்டியிருப்பதால் இதில் கால தாமதம் ஏற்படுவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X