பஸ் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட பணப்பை உரிமையாளரிடம் ஒப்படைப்பு

 

புத்தளம் பிரதான பஸ் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்டதாகக் ௯றப்படும் 65,300 ரூபாய் பணத்துடனான ஆண்கள் பாவிக்கும் பணப்பையொன்று, அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸடபிள் காலியவன்ச என்பவர், செவ்வாய்க்கிழமை காலை புத்தளம் பிரதான பஸ் நிலையத்துக்குச் சென்றுள்ளார்.

இதன்போது, பிரதான பஸ் நிலையத்தில் ஆண்கள் பாவிக்கும் பணப்பையொன்று கீழே கிடந்துள்ளது. குறித்த பணப்பையை எடுத்த பொலிஸ் உத்தியோகத்தர், அதனை புத்தளம் தலைமையகப் பிரதான பொலிஸ் பரிசோதகர் அனுர குணவர்தனவிடம் ஒப்படைந்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த பணப்பையை, பொலிஸார் சோதனை செய்த போது, அதில் 65,300 ரூபாய் பணம், தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப் பத்திரம், வங்கி அட்டைகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இருந்துள்ளன.

பாடசாலை வீதி, முல்லேரியா வடக்கு, முல்லேரியா எனும் முகவரியைச் சேர்ந்த ஒருவருடைய பணப்பையே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த பணப்பையில் இருந்த தொலைபேசி இலக்கம் ஒன்றுடன் அழைப்பை ஏற்படுத்திய புத்தளம் பொலிஸார், பணப்பை கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் தெரியப்படுத்தி, அதன் உரிமையாளரையும் பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்துள்ளனர்.

புத்தளம் பிரதான பஸ் நிலையத்தில் பணப்பையைத் தவறவிட்ட குறித்த நபர், கொழும்பில் உள்ள பிரபல வைத்தியர் ஒருவரின் வாகன சாரதி எனப் பொலிஸார் குறிப்பிட்டனர்.

தனிப்பட்ட தேவை நிமித்தம் நேற்று முன்தினம் பஸ்ஸில் பயணம் செய்து, புத்தளம் நகருக்கு வந்த போதே, புத்தளம் பிரதான பஸ் நிலையத்தில் அவர் தனது பணப்பையை தவறவிட்டுள்ளாரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட குறித்த பணப்பை, நேற்றுக் காலை புத்தளம் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் அனுர குணவர்தன முன்னிலையில் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


பஸ் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட பணப்பை உரிமையாளரிடம் ஒப்படைப்பு

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.