.jpg)
- பங்குச்சந்தை மற்றும் தங்கம், வெள்ளி விலை நிலைவரங்கள்
(ச.சேகர்)
பங்குதாரர்கள் தமது பங்குகளை வலிந்த விற்பனையில் ஈடுபடுத்துவதன் காரணமாகவும், தொடர்ச்சியாக அதிகளவு விற்பனையில் ஆர்வம் செலுத்துகின்றமையினாலும் பங்குச்சந்தையில் தளம்பல் நிலை தொடர்கிறது.
கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையத்தின் கடந்தவாரம் வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 5725.44 ஆகவும், மிலங்கா விலைச் சுட்டெண் 4921.81 ஆகவும் அமைந்திருந்தது.
ஜனவரி 23ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ.6,645,276,231 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 61,881 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 59,993 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 1,818 ஆகவும் பதிவாகியிருந்தன. முன்னைய வாரத்துடன் ஒப்பிடுகையில் மொத்த பங்கு புரள்வு பெறுமதி சுமார் 25 வீத அதிகரிப்பை காண்பித்திருந்தது.
கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் சுவர்ணமஹால் ஃபினான்ஸ், ஜெஸ்டெட்னர், ஏசியா அஸ்ஸட், அக்மி மற்றும் சீகிரிய விலேஜ் போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.
டீ சேர்விசஸ், ஈபி கிறீசி, பிசி பார்மா, கீல்ஸ் பூட்ஸ் மற்றும் ஒடோ டுரோம் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.
தங்கம் மற்றும் வெள்ளி விலை
கடந்த வாரம் தங்கத்தின் விலை 24 கெரட் பவுணொன்று 48,750 ரூபாவை அண்மித்து காணப்பட்டதாக தங்க நகை வியாபார வட்டாரங்களின் மூலம் அறிய முடிந்தது. 22 கெரட் பவுணொன்று சராசரியாக 45,700 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.
வெள்ளி 10 கிராமின் சராசரி விலை 1401.27 ரூபாவாக காணப்பட்டதாக சந்தை அறிக்கைகள் தெரிவித்திருந்தன.

