வெள்ளிக்கிழமை, 18 மே 2012

மரங்களை தறிப்பதற்கான அரசின் அனுமதிக்கு பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் வரவேற்பு

 

இலங்கை அரசாங்கத்தின் மூலம் பெருந்தோட்ட முகாமைத்துவ கம்பனிகளின் நிர்வாகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் எரிபொருளுக்காக வளர்க்கப்படும் மரங்களை தறிப்பதற்கான அனுமதியை வழங்கும் தீர்மானத்தை அனைத்து பெருந்தோட்ட நிறுவனங்களின் சார்பாக தாம் ஏகமனதாக வரவேற்பதாக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த தடையுத்தரவு தளர்த்தப்பட்டுள்ளதன் காரணமாக பெருந்தோட்ட கம்பனிகள் தமது தொழிற்சாலைகளுக்கு தேவையான எரிபொருள் விறகுகளை இலகுவாக பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பதுடன், இதற்காக இனிவரும் காலங்களில் பெருமளவு தொகையை செலவிட தேவையில்லை எனவும் அறிவித்துள்ளது.

பெருந்தோட்ட கம்பனிகளின் முகாமைத்துவத்தின் காணப்படும் பகுதிகளில் எரிபொருள் தேவைக்காக வளர்க்கப்படும் மரங்களை தறிப்பதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் கடந்த வாரம் வழங்கியிருந்தது. இந்த தீர்மானத்தை மேற்கொள்வதில் பெருந்தோட்டத்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க முக்கிய பங்காற்றியிருந்ததாகவும், இந்த தீர்மானமானது, பெருந்தோட்டத்துறைக்கு மட்டுமல்லாமல், நாட்டுக்குமே அனுகூலம் சேர்ப்பதாக அமைந்துள்ளதென பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் லலித் ஒபேசேகர அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதன் மூலமாக, அதிகளவு செலவீனங்களின் மூலம் பயன்படுத்தப்படும் எரிபொருள்களுக்கு பதிலாக மிகவும் இலகுவாக கிடைக்கக்கூடிய இந்த விறகுகளை பயன்படுத்திக் கொள்ள முடியும். எரிபொருள் விலைகள் அதிகரித்த வண்ணமுள்ளன. இந்நிலையில் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு மாற்றுவழிகளில் வருமானமீட்டக்கூடியதாகவும் இது அமையும். பெருமளவான பெருந்தோட்ட கம்பனிகள் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த தீர்மானம் முற்றிலும் வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளதென பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட முகாமைத்துவ கம்பனிகளின் மூலம் சமூக பாதுகாப்பான வகையில் வன முகாமைத்துவ திட்டங்களுக்கு அமைவாக இந்த வனாந்திரங்கள் முகாமைத்துவம் செய்யப்படுகின்றன. இந்த மரங்கள் விசேடமாக எரிபொருள் தேவைக்காகவே வளர்க்கப்படுகின்றன. அதாவது இந்த மரங்கள் நடப்படும் பொழுதே தெரியும் என்றோ ஒரு நாள் தறிக்கப்படப்போகிறது என. இவற்றை தறிக்கும் பொழுது கூட முறையான விதிமுறைகள் கைக்கொள்ளப்படுகின்றன என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Views: 95

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.