
எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. நிறுவனமானது 2011 டிசெம்பர் 31ஆம் திகதியன்று முடிவடைந்த 09 மாத காலப்பகுதியில் ஒன்றுதிரண்ட வரிக்குப் பின்னரான தேறிய இலாபமாக ரூபா 903 மில்லியனையும் அதேநேரம், ஒன்றுதிரண்ட வரிக்குப் முன்னரான இலாபமாக ரூபா 1,186 மில்லியனையும் பேணிக் கொண்டுள்ளது.
2011 டிசெம்பர் 31ஆம் திகதியன்று முடிவடைந்த 09 மாத காலப்பகுதிக்காக, பங்குகளை தம்வசம் வைத்திருப்போருக்கு கொடுப்பதற்கான தேறிய இலாபம் 768 மில்லியன் ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிதியாண்டின் குறித்த திகதி வரையான காலப்பகுதியில் குழுமத்தின் இலாபத்தில் போக்குவரத்துத் துறையானது உயர்ந்தபட்ச பங்களிப்பினை வழங்கும் வகையில் நிர்வகிக்கப்பட்டது. இதன் காரணமாக இத்துறையானது வரிக்கு முன்னரான இலாபத்திற்கு ரூபா 1,150 பங்களிப்பினையும், வரிக்குப் பின்னரான இலாபத்திற்கு ரூபா 932 மில்லியன் பங்களிப்பினையும் வழங்கியுள்ளது. ஏனைய முக்கிய மூன்று துறைகளாக திகழும் - சர்வதேச வர்த்தகம், உற்பத்தி மற்றும் உபாய ரீதியிலான முதலீடுகள் - ஆகியன குழுமத்தினது வரிக்கு முன்னரான இலாபத்திற்கு ரூபா 193 மில்லியனையும், வரிக்குப் பின்னரான இலாபத்திற்கு ரூபா 159 மில்லியனையும் பங்களிப்பாக வழங்கியுள்ளன.
எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹனீப் யூசுப் கூறுகையில், 'பெறுமதிமிக்க எமது வாடிக்கையாளர்களுக்கு முழுமையான உபாய ரீதியிலான தீர்வுகளை கம்பனி வழங்க வேண்டியுள்ளது என்பதில் நாம் நம்பிக்கையுடன் இருக்கின்றோம். புத்தாக்கமான உற்பத்தி வழங்கலுடன் இணைந்ததாக, உயர்தரமான சேவைகளை தொடர்ச்சியாக வழங்குவதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. சரக்கு அனுப்புதலில் ஒட்டுமொத்த அளவு குறைவடைந்ததன் காரணமாக அத்துறையில் சிறு வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும், வரிக்குப் பின்னரான தேறிய இலாபத்தின் 6 விகித வீழ்ச்சியுடன் முக்கிய சரக்கு அனுப்புதல் துறையானது தனது நிலையினை ஒப்பீட்டளவில் ஸ்திரமானதாக பேணிக் கொண்டுள்ளது. வளமாக்கப்பட்ட வர்த்தக குறியீட்டின் பெறுமதி மற்றும் முன்னேற்பாட்டு முகாமைத்துவத்திற்கு நாம் அளித்துள்ள முக்கியத்துவம் ஆகியவற்றின் காரணமாகவே இந்த அடைவை நாம் பெற்றுள்ளோம்' என்றார்.
கடந்த காலாண்டில் உலகப் பொருளாதரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளுடன் தொடர்புபட்ட வகையில் பொது விற்பனை முகவர் துறையினால் எதிர்கொள்ளப்பட்ட பாதகமான நிலைமைகள் தொடர்ச்சியாக மேலும் அதிகரித்தன. குறைந்த மட்டத்திலான சரக்கு அனுப்புதல் போக்குடன் இணைந்ததாக சரக்கு சேவை கட்டணங்களில் ஏற்பட்ட வீழ்ச்சியானது இத்துறையினை பாரியளவில் பாதிக்கச் செய்தது.
நாட்டுக்கு வருகை தரும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை 2011ஆம் ஆண்டு காலப் பகுதியில் புதிய மட்டங்களை எட்டியிருந்த வேளையில், அத்துறையில் புதிதாக தோற்றம் பெறுகின்ற தேவைகளை நிவர்த்தி செய்யும் விதத்தில் எக்ஸ்போலங்கா நிறுவனமானது தமது பயணம்சார் மற்றும் ஓய்வுகால சேவை பிரிவுகளின் வர்த்தகத்தை மீண்டும் நிலைநிறுத்திக் கொண்டது. இதன் காரணமாக நிறுவனத்தின் வாடிக்கையாளர் தளத்தில் மிக விரைவான வளர்ச்சி ஒன்று பதிவு செய்யப்பட்டது.
சர்வதேச சந்தை நிலைவரங்களின் காரணமாக கடந்த காலாண்டு காலப் பகுதியில் தேயிலைத் துறையில் ஏற்பட்டிருந்த பின்னடைவான நிலை, இப்போது முன்னேற்றம் கண்டு வருகின்றது. இத்துறையானது இப்போது மீண்டும் தனது பழைய போக்கிற்கு திரும்பிய வண்ணமுள்ளது. கடந்த இரு காலாண்டுகளில் பெறுமதி சேர் சேவைகளில் உள்வாங்கப்பட்ட மாற்றங்கள் விவேகமானவை என நிரூபிக்கப்பட்டன. ரி-சிப்ஸ் (t-sips) வர்த்தக குறியீடானது எஸ்எல்எஸ் தரச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டதன் மூலம் கம்பனியானது உறுதியான வர்த்தக குறியீடு ஒன்றினை உருவாக்கியுள்ளது.
உற்பத்தித் துறையினைப் பொறுத்தவரையில், கடந்த வருடத்தினை விட வருமான மட்டங்கள் மற்றும் வரிக்குப் பின்னரான தேறிய இலாபம் ஆகிய இரண்டிலும் அதிகரிப்பு பதிவு செய்யப்பட்ட நிலையில் இத்துறையானது தொடர்ந்தும் உறுதியானதாக காணப்பட்டது. தனது செயற்பாடுகளை மாறுபட்ட விதத்தில் முன்னெடுத்த நெப்ரியூன் றீசைக்கிள்ஸ் (Neptune Recyclers) பிரிவில் ஏற்பட்ட தொடர்ச்சியான வளர்ச்சியின் காரணமாக கம்பனி உத்வேகம் பெற்றது. இந்த செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்கும் அதேநேரம் உற்பத்தித் துறையினை பலப்படுத்துவதற்கும் தேவையாகவுள்ள மிகப் பொருத்தமான உட்கட்டமைப்பு வசதிகளையும் மேற்படி பிரிவு அபிவிருத்தி செய்துள்ளது.
'இந்தக் காலாண்டின் வரிக்குப் பின்னரான தேறிய இலாபத்தை நோக்கும் போது, உபாய ரீதியிலான முதலீடுகள் துறையானது 125 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. பரந்துபட்ட வகைகளிலான நிகழ்ச்சித் திட்டங்களினை வழங்குவதன் மூலமாக தனது செயற்பாடுகளை ஸ்திரமாக நிலைநிறுத்தியுள்ள எமது மூன்றாம் நிலைக் கல்வி நிறுவகமான (அபிட்) APIIT வெளிப்படுத்திய சிறப்பான செயற்பாடுகள் இவ்வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பினை நல்கியுள்ளன. அண்மைக் காலங்களில் நாம் அறிமுகப்படுத்திய, அதிகரித்த அளவிலான பட்டப் படிப்புகளுக்கு துறைசார் சந்தையில் இருந்து மிகச் சிறந்த வரவேற்பு கிடைக்கப் பெற்றுள்ளது. மாறுபட்ட கல்வித்துறைகளில் நிபுணத்துவம் பெறுவதற்கு ஆர்வம் கொண்டுள்ள பல்வகைப்பட்ட மாணவர் சமுதாயத்தின் தேவையினை நிவர்த்தி செய்யும் வகையில், பல்வகைப்படுத்தப்பட்ட பட்டப்படிப்பு நிகழ்ச்சித் திட்டங்களை வழங்குவதை மையப்படுத்தியதாகவும் இந்த விஸ்தரிப்பு முயற்சிகள் அமைந்துள்ளன. குழுமத்திற்கு இத்துறையானது ஸ்திரமான பங்களிப்பினை உயர்ந்தளவில் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், இந்த வளர்ச்சி மட்டங்களை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்பதில் நிறுவனத்தின் முகாமைத்துவம் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கின்றது' என்றும் யூசுப் குறிப்பிட்டார்.
குழும ரீதியிலும் அதேநேரம் தனிப்பட்ட கம்பனி ரீதியிலும் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகளின் காரணமாக, பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலப் பகுதியானது அதிக கவனத்தைப் பெறுகின்றது.
எக்ஸ்போ பிறெய்ட் பாகிஸ்தான், எக்ஸ்போ பிறெய்ட் வியட்னாம் ஆகியவற்றில் நாம் மேலதிக முதலீடுகளை மேற்கொண்டுள்ளதுடன் எமது பங்குரிமையை 51 சதவீதமாக அதிகரித்துக் கொண்டுள்ளோம். உணவு துறையினுள் எமது வர்த்தகத்தை ஊடுருவச் செய்யும் ஓர் உபாய அடிப்படையிலான முயற்சியாக, இக் காலாண்டு காலப்பகுதியில் நோர்போல்க் பூட்ஸ் (Norfolk Foods) இன் கட்டுப்பாட்டுரிமை பங்குகளை கையகப்படுத்தினோம். இத் துறையானது மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றது. தற்போதுள்ள எமது உற்பத்தித் தொடரின் பல்வகைத் தன்மைக்கு இந்த கையகப்படுத்தல் நடவடிக்கையானது குறிப்பிடத்தக்க சாதக நிலையினை ஏற்படுத்தும் என்று நாம் நம்புகின்றோம். எக்ஸ்போலங்கா தற்போது முன்னெடுத்து வரும் கூட்டாண்மை சமூகப் பொறுப்பு திட்டங்கள் மற்றும் சமூக சந்தைப்படுத்தல் முன்னெடுப்புகளுக்காக, இக் காலாண்டு காலத்தில் 'உலக வர்த்தககுறியீட்டு காங்கிரஸ்' நிகழ்வில் சர்வதேச அங்கீகாரத்தை நாம் பெற்றுக் கொண்டோம்' என்று யூசுப் மேலும் கூறினார்.
எமது நிறுவனத்துடன் தொடர்புபட்டுள்ள பங்குதாரர்களுக்கு தொடர்ச்சியாக பெறுமதிகளை உருவாக்குவதை உறுதிப்படுத்தும் பொருட்டு, மிகச் சரியான உபாயங்களை அபிவிருத்தி செய்வதிலும் மிகச் சரியான வளங்களை பயன்படுத்தும் விடயத்திலும் நாம் தொடர்ந்தும் முனைப்புடன் செயற்படுகின்றோம். நீண்டகால அடிப்படையிலான எமது இலக்குகளை அடைந்து கொள்வதற்கான சரியான திசையிலேயே நாம் பயணித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதை ஒத்துழைப்புமிக்க பணிப்பாளர் சபையுடன் இணைந்து எமது நிறுவனத்தின் அர்ப்பணிப்புமிக்க தொழிற்படையினர் உறுதி செய்துள்ளனர்' என்று யூசுப் கூறி முடித்தார்.
எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. - எக்ஸ்போலங்கா குழுமத்தின் ஹோல்டிங் கம்பனியான இது 1978ஆம் ஆண்டு செயற்பாடுகளை ஆரம்பித்தது. பல்வேறு பிரிவுகளில் வர்த்தகத்தை மேற்கொள்ளும் கூட்டு நிறுவனமாக இந்தக் கம்பனி கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் பிரதான தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. போக்குவரத்து, சர்வதேச வர்த்தகம், உற்பத்தி மற்றும் உபாய அடிப்படையிலான முதலீடுகள் போன்ற பல பிரிவுகளில் வர்த்தகத்தை விஸ்தரித்துள்ள குழுமமானது, 12 நாடுகளிலும் 38 நகரங்களிலும் தனது பிரசன்னத்தை கொண்டுள்ள அதேநேரம் 46 உப நிறுவனங்கள் மற்றும் கூட்டு முயற்சி கம்பனிகளையும் கொண்டு இயங்குகின்றது. எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. நிறுவனமானது 2011 மார்ச் 31ஆம் திகதி முடிவடைந்த நிதியாண்டில் தேறிய இலாபமாக ரூபா 1.3 பில்லியனை பதிவு செய்துள்ளது.

